search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இந்தியாவின் எதிர்ப்புக்கு இலங்கை பணிந்தது- சீன உளவு கப்பல் வருகை தள்ளிவைப்பு
    X

    இந்தியாவின் எதிர்ப்புக்கு இலங்கை பணிந்தது- சீன உளவு கப்பல் வருகை தள்ளிவைப்பு

    • 6 முக்கிய துறைமுகங்களையும் உளவு பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது.
    • சீன கப்பலின் வருகை நோக்கம் எரி பொருளை நிரப்புவது மட்டுமே.

    கொழும்பு:

    சீனா ராணுவத்தின் யுவான் வாங்க்-5 என்ற நவீன உளவு போர்க் கப்பல் இலங்கையின் ஹம்பந் தோட்டை துறைமுகத்துக்கு வருகிற 11-ந்தேதி வர உள்ளது என்றும் அந்த கப்பல் 17-ந்தேதி வரை இலங்கையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இந்திய கடல் பகுதி அருகே சீன உளவு கப்பல் வருவது பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்கும் என்று இந்தியா, இலங்கை அரசிடம் தனது எதிர்ப்பை தெரிவித்தது.

    செயற்கைகோள் கண்காணிப்புபடி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவு கணைகள் வசதிகள் ஆகியவற்றை கொண்ட சீன கப்பலில் இருந்து 750 கிலோ மீட்டர் பரப்பளவுக்கு உள்ள பகுதிகளில் உளவு பார்க்கமுடியும் என்று கூறப்படுகிறது.

    அதன்படி தமிழகத்தின் கல்பாக்கம்-கூடங்குளம் உள்பட அணுமின்சக்தி நிலையங்கள் மற்றும் அணு ஆய்வு மையங்களை உளவு பார்க்க முடியும். அதேபோல் கேரளா, ஆந்திரா கடலோர பகுதிகளையும், தென் மாநிலங்களில் உள்ள 6 முக்கிய துறைமுகங்களையும் உளவு பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இந்தியா வின் எதிர்ப்புக்கு இலங்கை பணிந்தது. உளவு கப்பல் வருகையை ஒத்திவைக்கு மாறு சீனாவுக்கு இலங்கை அரசு கோரிக்கை விடுத்தது.

    இதுதொடர்பாக சீன தூதரகத்திடம் இலங்கை வெளியுறவு அமைச்சகம் விடுத்த கோரிக்கையில், சீன கப்பல் திட்டமிட்டபடி வருகையை முன்னெடுத்து செல்ல வேண்டாம் எனவும் கப்பல் வருவதை நிறுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

    மேலும் சீன அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தும் வரை கப்பலின் வருகையை தள்ளி வைக்குமாறு இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதற்கான கடிதத்தை கடந்த 5-ந்தேதி சீனாவுக்கு இலங்கை அனுப்பியது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கைக்கான சீன தூதர் கூறும்போது, 'கப்பலுக்கு அனுமதி மறுப்பது இருதரப்பு உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்' என்றார்.

    சீனாவின் உளவு கப்பல் பயணம் நிறுத்தப்படும் என்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சீன கப்பல், எரிபொருள் நிரப்புவதற்காக ஹம்பந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதாக இலங்கை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த ஜூலை 13-ந்தேதி சீனாவில் இருந்து புறப்பட்ட அந்த கப்பல் தற்போது தைவான் அருகே பயணம் செய்து கொண்டிருக்கிறது.

    இதற்கிடையே அமைச்சர் பந்துல குணவர்த்தன கூறும் போது, 'சீன கப்பலின் வருகை நோக்கம் எரி பொருளை நிரப்புவது மட்டுமே. இலங்கையில் எந்தவொரு உள் விவகாரங்களிலும், வியாபாரத்திலும் சீன கப்பல் அல்லது அதன் பணியாளர்கள் ஈடுபடமாட்டார்கள்.

    இதற்கிடையே சீனாவும் எப்போதும் இலங்கைக்கு உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் உண்மையான நண்பர்களாக உதவுகின்றன. இருநாடுகளுக்கும் இடையில் நிலவும் நல்லுறவுக்கும், நம்பிக்கைக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் இலங்கையில் எதையும் செய்யாது' என்றார்.

    பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கைக்கு இந்தியா ஏராளமான உதவிகளை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×