என் மலர்
உலகம்
ஷேக் ஹசீனா கருத்தால் வங்காளதேசத்தில் பதற்றம்: முகமது யூனுஸ் அதிருப்தி
- இந்தியாவுடன் உறவு வலுவானது. நெருக்கமானது.
- இந்துக்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல் கவலை அளிக்கிறது.
டாக்கா:
வங்காளதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.
இதற்கிடையே வங்காள தேசத்தில் இந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது. இதையடுத்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி வங்காள தேசத்துக்கு சென்று உயர் அதிகாரிகளை சந்தித்து பேசினார்.
பின்னர் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுசை விக்ரம் மிஸ்ரி சந்தித்து பேசினார். 40 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் சிறுபான்மையினரின் பிரச்சனைகள், தவறான தகவல் பிரச்சாரங்கள், ஷேக் ஹசீனா இந்தியாவில் தங்கியிருப்பது, பிராந்திய ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து பேசினர்.
இதில் வங்காளதேசத்தில் இந்துக்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் குறித்து விக்ரம் மிஸ்ரி கவலை தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் முகமது யூனுஸ் கூறும்போது, இந்தியாவுடன் உறவு வலுவானது. நெருக்கமானது. வங்கதேச மக்களின் நம்பிக்கையையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதில் அரசு உறுதி பூண்டுள்ளது.
இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனா பல கருத்துகளை அறிக்கைகள் மூலம் வெளியிடுகிறார். இது வங்காளதேசத்தில் பதட்டத்தை உருவாக்குகிறது. இதுபற்றி எங்கள் மக்கள் கவலைபடுகிறார்கள்.
ஷேக் ஹசீனாவின் ஊழல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது தொழிலாளர்கள் மற்றும் மக்கள் என அனைவரும் கைகோர்த்தனர். ஆனால் அவரின் கருத்துகளால் இங்கு பதற்றம் ஏற்படுகிறது.
ஒவ்வொரு குடிமகனையும் பாதுகாப்பதற்கும் அவர்களின் மதம், நிறம், இனம் மற்றும் பாலினம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் இடைக்கால அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றார்.