search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    நிதி நெருக்கடி: நிலவின் முக்கிய ஆய்வுத்திட்டத்தை கைவிட்ட நாசா
    X

    நிதி நெருக்கடி: நிலவின் முக்கிய ஆய்வுத்திட்டத்தை கைவிட்ட நாசா

    • கடந்த 2023-ம் ஆண்டின் இறுதியில் இந்த ரோவரை நிலவில் தரையிறக்க நாசா திட்டமிட்டிருந்தது.
    • நாசா கோரிய நிதியை விட 8.5 சதவீதம் குறைவான நிதியே அமெரிக்க அரசால் வழங்கப்பட்டுள்ளது.

    நிலவின் தென் துருவத்தின் மேற்கு முனையில் 'நோபில் கிரேட்டர்' என்ற பகுதியில் நீர் மற்றும் பனிக்கட்டிகள் இருக்கிறதா? நிலவில் பனி அடுக்குகள் எங்கு இருக்கின்றன? அதில் என்ன மூலக்கூறுகள் இருக்கின்றன? எவ்வளவு அடி ஆழத்தில் பனிக்கட்டிகள் இருக்கின்றன? என்பதை அறிந்து கொள்ள அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.

    இதற்காக, 433.5 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.3,625.18 கோடி) ஒதுக்கீடு செய்யப்பட்டு 'வைபர் ரோவர்' என்ற திட்டத்தின் மூலம் ரோவர் ஒன்று நிலவுக்கு அனுப்பப்படும் என்று கடந்த 2021-ம் ஆண்டு நாசா முறைப்படி அறிவித்தது.

    நிலவில் நீர் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அது நிலவு குறித்த அடுத்தக்கட்ட ஆய்வுகளுக்கு பேருதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

    கடந்த 2023-ம் ஆண்டின் இறுதியில் இந்த ரோவரை நிலவில் தரையிறக்க நாசா திட்டமிட்டிருந்தது. ஆனால், ரோவர் மற்றும் லேண்டரை (நிலவில் ரோவர் தரையிறங்க உதவும் கருவி) உருவாக்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்தத் திட்டம் 2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் முழுமையடையும் என்றும், கூடுதலாக 176 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ 1,473.52 கோடி) தேவைப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    ஆனால் காலதாமதம் மற்றும் அதிக பட்ஜெட் ஆகியவற்றை காரணம் காட்டி இத்திட்டத்தைக் கைவிடுவதாக நாசாவின் அறிவியல் திட்ட இயக்குநரகத்தின் இணை நிர்வாகி நிக்கோலா பாக்ஸ் கூறி உள்ளார்.

    இதுகுறித்து இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் த.வி.வெங்கடேஸ்வரன் கூறும்போது, 'நாசா, தன் வரலாற்றில் இதுவரை சந்திக்காத அளவுக்கு ஒரு பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. நாசா கோரிய நிதியை விட 8.5 சதவீதம் குறைவான நிதியே அமெரிக்க அரசால் வழங்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக, அமெரிக்க அரசால் இந்த ஆண்டு நாசாவிற்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட் 24.875 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 லட்சம் கோடி). ஆனால் இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை விட 2 சதவீதம் குறைவு. இதனால் பல்வேறு முன்னோக்கு திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படும். ஆய்வுக்கான வேகமும் குறையும் என்பது கவலை அளிக்கும் செயலாகும்' என்றார்.

    Next Story
    ×