search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    செர்பியா, இஸ்ரேல் தூதரகத்தில் தாக்குதல் நடத்த முயன்றவர் சுட்டுக்கொலை
    X

    செர்பியா, இஸ்ரேல் தூதரகத்தில் தாக்குதல் நடத்த முயன்றவர் சுட்டுக்கொலை

    • தூதரகத்துக்கு வில்-அம்புடன் நபர் ஒருவர் வந்தார்.
    • நபர் குறித்த விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை.

    செர்பியா நாட்டு தலைநகர் பெல்கிரேடில் இஸ்ரேல் தூதரகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் தூதரகத்துக்கு வில்-அம்புடன் நபர் ஒருவர் வந்தார்.

    அவர் திடீரென்று அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது தாக்குதல் நடத்த முயன்றார். அங்கிருந்த போலீஸ்காரர் மீது அம்பை எய்தாா். இதில் கழுத்தில் அம்பு பாய்ந்து காவலா் காயமடைந்தாா். உடனே போலீஸ்காரர் தற்காப்புக்காக அம்பு வைத்திருந்த நபரை நோக்கி துப்பாக்கியால் சுட்டாா். இதில் அந்த நபா் உயிரிழந்தாா்.

    தாக்குதலில் காயமடைந்த போலீஸ்காரரை மருத்துவ மனையில் சேர்த்தனர். அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தாக்குதலில் ஈடுபட்ட நபர் குறித்த விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை.

    காசாவில் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் இஸ்ரேலுடன் சொ்பியா நட்புறவை பேணி வரும் சூழலில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக செர்பியா பிரதமர் மிலோஸ் வுசெவிக் கூறும்போது, `இது கொடூரமான பயங்கரவாத செயல். இது எந்த மதத்திற்கும் எந்த தேசத்திற்கும் காரணமாக இருக்க முடியாது. இது ஒரு தனிநபரின் குற்றம்' என்றார்.

    இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் கூறும்போது, `செர்பியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தின் அருகே பயங்கரவாதத் தாக்குதலுக்கு முயற்சிக்கப்பட்டுள்ளது. தூதரகம் மூடப்பட்டுள்ளது மற்றும் தூதரகத்தின் எந்த ஊழியரும் காயமடையவில்லை. தாக்குதல் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது' என்று தெரிவித்தார்.

    Next Story
    ×