search icon
என் மலர்tooltip icon

    உலகம் (World)

    பிரிட்டன் பிரதமர், கட்சி தலைவர் பதவிகளை ராஜினாமா செய்தார் ரிஷி சுனக்
    X

    பிரிட்டன் பிரதமர், கட்சி தலைவர் பதவிகளை ராஜினாமா செய்தார் ரிஷி சுனக்

    • பாராளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
    • தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.

    பிரிட்டனில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கன்சர்வேடிவ் கட்சியின் ரிஷி சுனக் பிரதமராக இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தான் நிறைவடைகிறது. எனினும், பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதைத் தொர்ந்து பிரிட்டன் பாராளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. 650 உறுப்பினர்களை கொண்ட பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த எட்டு பேர் களம் கண்டனர். இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.

    இதில் தொழிலாளர் கட்சி வெற்றிக்கு தேவையானதை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது. தேர்தலில் போட்டியிட்ட பிரதமர் ரிஷி சுனக் வெற்றி பெற்ற போதிலும், அவரது கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர்கள் பல இடங்களில் தோல்வியை தழுவினர்.

    தேர்தல் தோல்வி காரணமாக கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவியை ரிஷி சுனக் ராஜினாமா செய்தார். பிரிட்டன் பிரதமராக 20 மாதங்கள் பதவி வகித்த ரிஷி சுனக், தேர்தல் தோல்விக்கு மன்னிப்பு கோரினார். மேலும், தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தார். இதோடு பிரதமர் பதவியையும் ராஜினாமா செய்தார்.

    பிரதமராக அவர் ஆற்றிய கடைசி உரையில், "நான் முதலில் கூறப்போவது, என்னை மன்னித்துவிடுங்கள். இந்த பதவியில் என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன், ஆனால் நீங்கள் பிரிட்டனில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதை தெளிவாக உணர்த்தி இருக்கின்றீர்கள்."

    "உங்களின் தீர்ப்பு மட்டுமே முக்கியமான ஒன்று. உங்களின் கோபம், ஏமாற்றம் உள்ளிட்டவைகளை கேட்டேன். இந்த தோல்விக்கு முழு பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறேன். இந்த முடிவை தொடர்ந்து நான் கட்சி தலைவர் பதவியில் இருந்தும் விலகிக் கொள்கிறேன். "

    "அரசியலில் எனது எதிரணியை சேர்ந்தவர் என்ற போதிலும், சர் கீர் ஸ்டார்மர் விரைவில் நமது பிரதமர் ஆக போகிறார். இந்த பணியில் அவர் பெறும் வெற்றிகள், நமக்கான வெற்றிகளாக இருக்கும். அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்"

    "பொது வெளியில் எங்களிடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும், அவர் நல் குணம் வாய்ந்தவர். பொதுப்படையில் அவர்மீது நான் மரியாதை கொண்டுள்ளேன்," என்று தெரிவித்தார்.

    Next Story
    ×