search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஜப்பான் புகுஷிமா அணுமின் நிலைய தண்ணீரை கடலில் கலக்க ஐ.நா. அனுமதி: சீனா கடும் எதிர்ப்பு
    X

    ஜப்பான் புகுஷிமா அணுமின் நிலைய தண்ணீரை கடலில் கலக்க ஐ.நா. அனுமதி: சீனா கடும் எதிர்ப்பு

    • அணு உலைகளை குளிர்விக்க பயன்படுத்தப்பட்ட தண்ணீரை சுத்திகரித்து கடலில் திறந்துவிட முடிவு.
    • ஒரு மில்லியன் டன்னுக்கும் அதிகமான கழிவு நீரை சுத்திகரிக்கவேண்டி உள்ளது.

    ஜப்பானில் கடந்த 2011ம் ஆண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலால் புகுஷிமா அணுமின் நிலையம் சேதம் அடைந்தது. கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டதுடன், பல ரியாக்டர்கள் நிரந்தரமாக சேதமடைந்தன. அவற்றை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வருவது சாத்தியமில்லை என்பதால் அணுமின் நிலையம் மூடப்பட்டது.

    அதேசமயம், அங்குள்ள அணு உலைகளை குளிர்விக்க பயன்படுத்தப்பட்ட தண்ணீரை (கழிவுநீர்) சுத்திகரித்து கடலில் கலக்க ஜப்பான் அரசு முடிவு செய்து அதற்கான அனுமதியை ஐ.நா. சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பிடம் கேட்டது. இதையடுத்து பலகட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு வந்தன.

    இதற்கிடையே ஐ.நா.வின் அணுசக்தி அமைப்பின் தலைவர் ரபேல் மரியானோ க்ரோசி ஜப்பானுக்கு சென்றார். அவர் சுனாமியால் சிதைந்த புகுஷிமா அணுமின் நிலையத்தை பார்வையிட்டார்.

    பின்னர் அவர் கூறும்போது, 'சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை பசிபிக் பெருங்கடலில் கலப்பதற்கான திட்டங்களில் திருப்தி அடைந்தேன்' என்றார். இதையடுத்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை கடலில் திறந்துவிட ஐ.நா. அனுமதியை ஜப்பான் பெற்றுள்ளது. அதேவேளையில் இத்திட்டத்துக்கு சீனா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இந்த அணுமின் நிலையத்திலிருந்து ஒரு மில்லியன் டன்னுக்கும் அதிகமான கழிவு நீரை சுத்திகரித்து பசிபிக் பெருங்கடலில் திறந்து விட வேண்டி உள்ளது. இந்த செயல்முறையை முடிக்க 30 முதல் 40 ஆண்டுகள் வரை ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×