search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்தால் உக்ரைன் வீரர்களை உயிரோடு விடுவோம் - புதின் புது ஆஃபர் - டிரம்ப் ஹேப்பி
    X

    ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்தால் உக்ரைன் வீரர்களை உயிரோடு விடுவோம் - புதின் புது ஆஃபர் - டிரம்ப் ஹேப்பி

    • உக்ரைன் படைகள் ரஷியாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ளனர்
    • அழுத்தம் கொடுப்பதற்கான முற்றிலும் அரசியல் சதி என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

    2022 பிப்ரவரியில் நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் இணைய முயற்சிப்பதை கண்டித்து அந்நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்தது. 4 ஆண்டுகளை கடந்தும் போரானது நடந்துகொண்டிருக்கிறது. கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபர் பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப் இரு நாடுகளிடையேயும் பேச்சுவார்த்தைக்கு முயற்சி மேற்கொண்டார்.

    அதன்படி சவுதியில் அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. டிரம்ப் - புதின் அலைபேசி உரையாடல் நிகழ்ந்தது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அமெரிக்காவுக்கு அழைத்து சத்தம் போட்டார் டிரம்ப். இந்நிலையில் முதற்கட்டமாக 30 நாள் போர் நிறுத்தம் செய்ய அமெரிக்கா முன்மொழிந்த ஒப்பந்தத்துக்கு உக்ரைன் உடன்பட்டது.

    ரஷிய அதிபர் புதினும் நேற்று முன் தினம் மாஸ்கோவில் அளித்த பேட்டியில், போர் நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொள்கிறேன். உக்ரைன் படைகள் ரஷியாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ளனர். இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படுவதற்கு முன்னால் அங்கிருக்கும் படையினர் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைதள பதிவில், உக்ரைன் வீரர்கள் மிகவும் மோசமான சூழ்நிலையில் சிக்கியுள்ளதாகவும், ரஷிய துருப்புகளால் சூழப்பட்ட ஆயிரக்கணக்கான உக்ரேனிய வீரர்களின் உயிர்களை புதின் காப்பாற்ற வேண்டும் என்றும் பேசியிருந்தார். குறிப்பிட்டு கூறாவிட்டாலும், குர்ஸ்க் பகுதியையே டிரம்ப் குறிப்பிடுகிறார். புதினிடம் தான் அவர்களை காப்பாற்றுமாறு கேட்டுக்கொண்டதாக அவர் மேலும் கூறுகிறார்.

    இதனையடுத்து உக்ரைன் நேற்று ஒரு அறிக்கை விட்டது. அதாவது, கடந்த ஒரு நாளில் போர் சூழ்நிலையில் எந்த மாற்றமும் இல்லை. குர்ஸ்க் பிராந்தியத்தில் எங்கள் இராணுவப் படைகளால் போர் சிறந்த முறையில் நடத்தப்படுகிறது. எங்கள் வீரர்கள் நல்ல நிலையில் உள்ளனர் மற்றும் எதிரியின் நடவடிக்கைகளை சிறப்பாக எதிர்கொள்கின்றனர்.

    எங்களிடம் உள்ள அனைத்து ஆயுதங்களுடனும் நாங்கள் போராடுகிறோம் என்று அந்த அறிக்கை விவரிக்கிறது. மேலும் இவை அனைத்தும் உக்ரைன் மற்றும் அதன் நட்பு நாடுகளின் மீது அழுத்தம் கொடுப்பதற்கான முற்றிலும் அரசியல் சதி என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

    இந்த சூழலுக்கு மத்தியில் ரஷிய அதிபர் புதின் வாய்திறந்துள்ளார். அதாவது, அதிபர் டிரம்ப் விடுத்த வேண்டுகோளுக்கு நாங்கள் அனுதாபம் தெரிவிக்கிறோம். உக்ரைன் வீரர்கள் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டு சரணடைந்தால், அவர்களுக்கு உயிரும், நிம்மதியாக வாழும் உரிமையும் உறுதி செய்யப்படும் என்று கூறியுள்ளார் புதின்.

    குர்ஸ்க் பகுதியில் இருக்கும் உண்மை நிலை குறித்து அந்தந்த நாடுகள் தங்கள் தரப்பு பார்வைகளைக் கூறி வருவதால் உண்மை நிலை என்ன என்பது மர்மமாகவே உள்ளது. அரசியல் சித்து விளையாட்டுகள் முடிவடைந்து 30 நாள் போர் நிறுத்தம் ஏற்படுமா, உக்ரேனியர்களுக்கு விடிவுகாலம் பிறக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

    Next Story
    ×