என் மலர்
புதுச்சேரி
நள்ளிரவில் தொடர் மின் வெட்டு
- பொதுமக்கள் கடும் அவதி- மறியல்
- மின்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் பகுதியில் மின்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இதில் அரியாங்குப்பம் கிழக்கு மற்றும் மேற்கு பஞ்சாயத்து, அரியாங்குப்பம் நகரப் பகுதி, வீராம்பட்டினம், சின்ன வீராம்பட்டினம், காக்காயந்தோப்பு, ராதா கிருஷ்ணன் நகர், மணவெளி, ஓடைவெளி, டோல்கேட் மற்றும் நோணாங்குப்பம் வரை மின் விநியோகம் வழங்கப்பட்டும் பரா மரித்தல் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக இரவு 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் மின்சாரம் தடைபட்டு வருகிறது.
இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இரவு 9 மணிக்கு தடைபடும் மின்சாரம் எப்ப வரும்? என எதிர்பார்த்து கொண்டு தங்களது தூக்கத்தையும் தொலைத்து பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அரியாங்குப்பம் கோட்டை மேடு சந்திப்பில் ஒரு சிலர் திடீர் சாலை மறியல் செய்தனர். தகவல் அறிந்து வந்த அரியாங்குப்பம் போலீசார் அவர்களை சமாதா னப்படுத்தி மின் இணைப்பு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டனர்.
கூடுதல் டிரான்ஸ்பார்மர் அமைத்து மின் விநியோகம் தடை இல்லாமல் வழங்க மின்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதே நிலை நீடிக்கும் எனில் புதுவை-கடலூர் சாலையில், பாய், தலையணையுடன் படுத்து தூங்கும் போராட்டமும், மின்துறை அலுவலகத்திற்கு மலர் வளையம் வைக்கும் போராட்டமும், நடத்த உள்ளதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தெரி வித்தனர்.