search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சந்திர பிரியங்கா நீக்கத்தை தடுக்கும் மத்திய மந்திரி: புதுவை அரசியலில் பரபரப்பு
    X

    சந்திர பிரியங்கா நீக்கத்தை தடுக்கும் மத்திய மந்திரி: புதுவை அரசியலில் பரபரப்பு

    • அமைச்சர் பதவி நீக்கத்திற்கான கோப்பு ஜனாதிபதியிடம் நிலுவையில் உள்ளது.
    • டெல்லிக்கு செல்லும்போதெல்லாம் மத்திய மந்திரிகளை, சந்திர பிரியங்கா சந்தித்து வந்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த பெண் அமைச்சர் சந்திர பிரியங்கா கடந்த 8-ந் தேதி நீக்கப்பட்டார்.

    ஆனால் அவர் நீக்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும், அரசாணையும் இன்று வரை வெளியிடப்படவில்லை. இதனால் புதுவையில் தொடர் குழப்பம் நீடித்து வருகிறது.

    சந்திர பிரியங்கா ஜாதி, பாலின ரீதியில் தாக்குதலுக்கு உள்ளாவதாக தெரிவித்திருந்தார்.

    இதனாலேயே பதவி நீக்க அறிவிப்பு வெளியாவது தாமதமாகிறது என கூறப்படுகிறது. இதனிடையே நேற்று முன்தினம் தனது தொகுதியில் நடந்த அரசு விழாவில் தேசியக்கொடி பொருத்திய காரில் வந்து சந்திர பிரியங்கா கலந்து கொண்டார்.

    இதனால் இன்னும் அமைச்சராக நீடிக்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    அதேநேரத்தில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், சந்திர பிரியங்கா எம்.எல்.ஏ. என்ற முறையில் தனது தொகுதியில் நடந்த அரசு விழாவில் பங்கேற்றார். அவர் இனி எம்.எல்.ஏ.வாக மட்டும் செயல்படுவார்.

    அமைச்சர் பதவி நீக்கத்திற்கான கோப்பு ஜனாதிபதியிடம் நிலுவையில் உள்ளது. அதற்கான அறிவிப்பு 2 நாளில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

    இதனிடையே சந்திர பிரியங்கா பதவி நீக்கத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் தர காலதாமதம் ஆவதற்கு மத்திய மந்திரி காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

    அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகனும் தனது பேட்டியில், சந்திர பிரியங்கா நீக்கத்தை மத்திய மந்திரி தடுப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்திருப்பதாக கூறினார்.

    சந்திர பிரியங்கா நீக்கத்தை தடுக்கும் மத்திய மந்திரி யார்? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

    புதுவையில் சட்டசபை தேர்தலின்போது மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், அமித்ஷா, அர்ஜூன் ராம்மெக்வால் உட்பட பல மத்திய மந்திரிகள் பிரசாரம் செய்தனர்.

    மத்திய மந்திரி அர்ஜூன்ராம்மெக்வால் புதுவையில் பல்வேறு தொகுதிகளுக்கு சென்று தேர்தல் பணியாற்றினார்.

    புதுவை பா.ஜனதா பொறுப்பாளராக இருந்த ராஜூ வர்மா தேர்தலுக்கு பிறகு மத்திய மந்திரியாகியுள்ளார்.

    தற்போது பாராளுமன்ற பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளராக மத்திய மந்திரி எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மாதத்திற்கு ஒரு முறையாவது புதுவைக்கு வந்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

    இதில் எந்த மத்திய மந்திரி, சந்திர பிரியங்கா நீக்கல் விவகாரத்தை தடுத்து வருகிறார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    அமைச்சராக இருந்த சந்திர பிரியங்காவுக்கு அகில இந்திய பா.ஜனதாவின் நிர்வாகிகள், மத்திய மந்திரிகள் ஆகியோருடன் செல்வாக்கு இருந்துள்ளது.

    டெல்லிக்கு செல்லும்போதெல்லாம் மத்திய மந்திரிகளை, சந்திர பிரியங்கா சந்தித்து வந்துள்ளார்.

    மேலும் அவர்களோடு தொடர்ந்து நட்பில் இருந்து வந்துள்ளார். இதனால் சந்திர பிரியங்கா பதவி நீக்கல் காரணத்திற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

    அமைச்சர் பதவி நீக்கத்துக்கு விரைவில் ஒரு முற்றுப்புள்ளி வைத்தால் தான் புதுவையில் நிலவும் அரசியல் குழப்பத்திற்கு நிரந்தர தீர்வு ஏற்படும்.

    Next Story
    ×