search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை தொகுதியில் போட்டியா? கவர்னர் தமிழிசைக்கு அமித்ஷா நிபந்தனை
    X

    புதுவை தொகுதியில் போட்டியா? கவர்னர் தமிழிசைக்கு அமித்ஷா நிபந்தனை

    • பாராளுமன்ற தொகுதியில் தான் போட்டியிட வாய்ப்பு தரும்படி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    • முதலமைச்சர் ரங்கசாமி, தேர்தல் தொடர்பாக நேரில் பேசலாம், காலையில் கவர்னர் மாளிகைக்கு வருவதாக தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் புதுவையில் பா.ஜனதா போட்டியிட உள்ளது.

    தேசிய ஜனநாயக கூட்டணி தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமியை சமீபத்தில் பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா ரேநில் சந்தித்து பேசினார்.

    அப்போது, பாராளுமன்ற தேர்தலில் புதுவையில் பா.ஜனதா போட்டியிடுவதற்கான விருப்பத்தை தெரிவித்தார். முதலமைச்சர் ரங்கசாமியும், அதற்கு ஒப்புதல் அளித்தார்.

    மேலும் வெற்றி பெறக்கூடிய பிரபலமான, பலமான வேட்பாளரை நிறுத்தும்படி முதலமைச்சர் ரங்கசாமி கேட்டுக்கொண்டார்.

    இதனிடையே புதுவை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட கவர்னர் தமிழிசை, காரைக்காலை சேர்ந்த தொழிலதிபர், சுயேட்சை எம்.எல்.ஏ., நியமன எம்.எல்.ஏ., வனத்துறை அதிகாரி ஆகியோர் சீட் கேட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் கவர்னர் தமிழிசை உள்துறை மந்திரி அமித்ஷாவை டெல்லியில் சந்தித்தார். அப்போது, புதுவை பாராளுமன்ற தொகுதியில் தான் போட்டியிட வாய்ப்பு தரும்படி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அதற்கு மத்திய மந்திரி அமித்ஷா, புதுவை தேசிய ஜனநாயக கூட்டணி தலை வரும், முதலமைச்சருமான ரங்கசாமியின் ஒப்புதலை பெறுங்கள் எனக் கூறியதாக தெரிகிறது.

    இந்த சந்திப்புக்கு பிறகு நேற்று இரவு கவர்னர் தமிழிசை புதுவைக்கு வந்தார். அவர் முதலமைச்சர் ரங்கசாமியை தொடர்புகொண்டு மத்திய மந்திரியுடனான சந்திப்பு குறித்து தெரிவித்தார். தனக்கு ஆதரவளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

    இதற்கு முதலமைச்சர் ரங்கசாமி, தேர்தல் தொடர்பாக நேரில் பேசலாம், காலையில் கவர்னர் மாளிகைக்கு வருவதாக தெரிவித்தார்.

    இதனால் இன்று காலை கவர்னர் தமிழிசை நீண்ட நேரம் கவர்னர் மாளிகையில் காத்திருந்தார். ஆனால் காலை 10.30 மணி வரை முதல்-அமைச்சர் ரங்கசாமி வரவில்லை.

    இதனால் காரைக்காலில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக கவர்னர் தமிழிசை புறப்பட்டு சென்றார். காரைக்காலிலிருந்து அவர் திரும்பிய பின் முதலமைச்சரை சந்திக்க கவர்னர் தமிழிசை திட்டமிட்டுள்ளார்.

    Next Story
    ×