search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சோப்பு கம்பெனி நடத்துவதாக சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு மெத்தனால் கடத்திய ஏழுமலை
    X

    ஏழுமலை - இளையநம்பி - ராஜா என்ற பர்க்கத்துல்லா

    சோப்பு கம்பெனி நடத்துவதாக சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு மெத்தனால் கடத்திய ஏழுமலை

    • கடலூர் கெமிக்கல் என்ஜினீயர் இளைய நம்பியும், ஏழுமலையும் நண்பர்கள்.
    • சென்னையில் இருந்து புதுவைக்கு வாகனத்தில் மெத்தனால் கொண்டு வரும்போது சோதனை சாவடிகளில் காட்டுவதற்கு மொத்தனால் சோப்பு கம்பெனிக்கு வாங்கி வருவது போல ரசீது தயார் செய்து மெத்தனாலை கடத்தியுள்ளார்.

    புதுச்சேரி:

    மரக்காணம், செங்கல்பட்டு பகுதியில் விஷ சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த சம்பவத்தில் கைதான ஏழுமலை சென்னை ரசாயன தொழிற்சாலையில் மெத்தனால் வாங்கி புதுச்சேரியில் பதுக்கி வைத்து சப்ளை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பம், செல்லன் தெரு, நகரான் தெரு, சம்புவெளி பகுதியை சேர்ந்தவர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் விஷ சாராயம் குடித்ததில் 14 பேர் பலியாகினர்.

    மற்றவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு புதுச்சேரி, விழுப்புரம் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். செங்கல்பட்டில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 22 பேர் பலியான இந்த சம்பவம் தமிழகம், புதுவையை உலுக்கியுள்ளது.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி மரக்காணம் சாராய வியாபாரிகள் அமரன் முத்து, ஆறுமுகம், மண்ணாங்கட்டி, ரவி உள்ளிட்டவர்களையும் செங்கல்பட்டு பகுதியில் வேலு, சந்திரன், ராஜேஷ், விஜி உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில், புதுச்சேரியில் இருந்து மெத்தனால் வாங்கி வந்தது தெரியவந்தது.

    புதுச்சேரி முத்தியால்பேட்டை விஸ்வநாதன் நகரில் வசித்து வரும் பர்கத்துல்லா, வில்லியனூர் தட்டாஞ்சாவடி மாரியம்மன் கோவில் வீதியில் வசித்து வரும் ஏழுமலை ஆகிய 2 பேரையும் புதுச்சேரி போலீஸ் உதவியுடன் விழுப்புரம் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில், கள்ளச்சாராயம் தயாரிக்க சென்னை வானரகம் அடுத்த மதுரவாயல் பகுதியில் உள்ள தனியார் கெமிக்கல் தொழிற்சாலையில் மெத்தனால் வேதிப்பொருள் வாங்கி புதுச்சேரியில் பதுக்கி வைத்தும், புதுச்சேரியில் இருந்து மரக்காணம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் உள்ள சாராய வியாபாரிகளுக்கு மெத்தனாலை சப்ளை செய்ததும் தெரியவந்தது.

    சென்னை மதுரவாயல் பகுதியில் ரசாயன தொழிற்சாலை நடத்தி வரும் கடலூரை சேர்ந்த கெமிக்கல் என்ஜினீயர் இளையநம்பி தொழிற்சாலைக்கு வாங்கும் மெத்தனாலை ஏழுமலைக்கு விற்பனை செய்துள்ளார். இளையநம்பி கெமிக்கல் என்ஜினீயர் என்பதால் எவ்வளவு தண்ணீரில் மெத்தனால் மற்றும் மூலப்பொருள் சேர்த்து சாராயம் தயாரிக்க வேண்டும் என அவர் பயிற்சி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    இளையநம்பி தொழிற்சாலையில் ஏழுமலை மற்றும் பர்கத்துல்லா கடந்த 11-ந்தேதி 3 பேரல்களில் 600 லிட்டர் மெத்தனால் வாங்கி வந்து புதுச்சேரியில் பதுக்கி வைத்துள்ளனர்.

    பின்னர் அதனை மரக்காணம், செங்கல்பட்டு சாராய வியாபாரிகளுக்கு கொடுத்துள்ளனர். அதிக விஷத்தன்மை வாய்ந்த மெத்தனாலை சாராய வியாபாரிகள் கலப்படம் செய்து விற்பனை செய்ததால் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டில் விஷ சாராயம் குடித்த 22 பேர் உயிரிழந்தனர்.

    இதனை கேள்விப்பட்ட ஏழுமலை பதுக்கி வைத்திருந்த மெத்தனாலை கீழே ஊற்றி அழித்துள்ளார்.

    கடலூர் கெமிக்கல் என்ஜினீயர் இளைய நம்பியும், ஏழுமலையும் நண்பர்கள். புதுவை வில்லியனூர் தட்டாஞ்சாவடி பகுதியில் சோப்பு கம்பெனி வைத்திருப்பதாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் நம்புவதற்காக ஏழுமலை கொட்டகை அமைத்துள்ளார்.

    மெத்தனால் வாங்கி வந்து இங்கு தான் ஏழுமலை பதுக்கி வைத்துள்ளார். சென்னையில் இருந்து புதுவைக்கு வாகனத்தில் மெத்தனால் கொண்டு வரும்போது சோதனை சாவடிகளில் காட்டுவதற்கு மொத்தனால் சோப்பு கம்பெனிக்கு வாங்கி வருவது போல ரசீது தயார் செய்து மெத்தனாலை கடத்தியுள்ளார்.

    புதுச்சேரி என்றாலே மது என்பது எல்லோருடைய மனதிலும் எழக்கூடிய உளவியல் கலந்த உணர்வாக உள்ளது. இந்நிலையில் சென்னை மதுரவாயல் ரசாயன தொழிற்சாலையில் இருந்து வாங்கி வரப்பட்ட மெத்தனாலை ஏழுமலை வரும் வழியிலேயே சாராய வியாபாரிகளுக்கு கொடுப்பதில்லை.

    தன்னுடைய சோப்பு கம்பெனிக்கு மூலப்பொருள் வாங்கி வருவதாக கணக்கு காட்டிவிட்டு புதுவையில் இருந்து தமிழக பகுதிக்கு மெத்தனாலை அனுப்பி வந்துள்ளார். புதுவையில் இருந்து மெத்தனால் கொண்டு வருவதால் 'இது பாண்டிச்சேரி சரக்கு' என சாராய வியாபாரிகளுக்கு அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    புதுவையில் இருந்து பர்க்கத்துல்லா வாகனம் மூலம் கொண்டுவரும் மெத்தனால் என்பதால் சாராய வியாபாரிகளுக்கு அதிக நம்பிக்கை ஏற்பட்டு வாங்கி உள்ளனர். இதுவே விஷசாராயமாக மாறி 22 பேர் உயிரை பறித்துள்ளது.

    Next Story
    ×