என் மலர்
புதுச்சேரி
மின் மீட்டர் பொருத்த எதிர்ப்பு புதுவையில் விவசாயிகள் டிராக்டர் பேரணி
- லாபத்தில் இயங்கும் மின்துறையை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை கைவிட வேண்டும்.
- டிராக்டர் பேரணி முக்கிய வீதிகளின் வழியாக கலெக்டர் அலுவலகத்தை அடைந்தது.
புதுச்சேரி:
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் புதுவை மாநிலக்குழு சார்பில் டிராக்டர் பேரணி நடந்தது.
புதுவை ரோடியர் மில் திடலில் தொடங்கிய பேரணிக்கு சங்க தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். செயலாளர் சங்கர், பொருளாளர் சதாசிவம் முன்னிலை வகித்தனர். லாபத்தில் இயங்கும் மின்துறையை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை கைவிட வேண்டும்.
விவசாயிகள் பயன்படுத்தும் மோட்டாருக்கு மீட்டர் பொருத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி செய்ய அரசாணை வெளியிட வேண்டும். காரைக்காலுக்கு உரிய 7 டி.எம்.சி. தண்ணீரை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுபட்ட காரைக்காலை சேர்ந்த 437 விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்க வேண்டும். புதுவையில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தை மாதம் ஒரு முறை கலெக்டர் நடத்த வேண்டும். விவசாயிகள் பயன்படுத்தும் சாலைகளை சீரமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தி இந்த பேரணி நடந்தது.
பேரணியில் ஏராளமான விவசாயிகள் டிராக்டர்களுடன் கலந்துகொண்டனர். டிராக்டர் பேரணி முக்கிய வீதிகளின் வழியாக கலெக்டர் அலுவலகத்தை அடைந்தது. அங்கு கலெக்டரை சந்தித்து விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.