என் மலர்
புதுச்சேரி
ஓட்டல்களில் கலப்பட உணவு பொருட்களை விற்பனை செய்தால் அபராதம்- கவர்னர் தமிழிசை உத்தரவு
- உணவு பாதுகாப்பு தரநிலை சட்டம் 2006ன் படி உணவு பாதுகாப்புத்துறை அபராதம் விதிக்க கவர்னர் தமிழிசை ஒப்புதல் வழங்கியுள்ளார்.
- அபராதம் அனைத்து சம்மந்தப்பட்ட மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்தின் கணக்கில் வரைவோலை மூலம் செலுத்தப்பட வேண்டும்.
புதுச்சேரி:
புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
அதற்கேற்ப ஓட்டல்கள், சிறுநிறுவனங்கள், தெருவோர பெட்டிக்கடைகள், சிற்றுண்டி கடைகள் என எங்கு பார்த்தாலும் புற்றீசல்கள் போல பெருகிவிட்டது. நடைபாதைகள் முழுக்க கடைகளாகவே காட்சியளிக்கிறது.
இதுபோன்ற சூழலில் தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் கலப்பட உணவுகள் குறித்து பொது மக்களிடமிருந்து அரசுக்கு தொடர்ச்சியான புகார்கள் வந்து கொண்டிருந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஷவர்மா உணவு சாப்பிட்ட 10-க்கும் மேற்பட்டோருக்கு உணவு விஷமாக மாறி உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இப்படி குறிப்பிட்ட நாளுக்கு மேல் பதப்படுத்தப்பட்ட சிக்கன், மீன், இறைச்சி போன்ற உணவகங்களில் பயன்படுத்தப்படுவதால் பொது மக்களின் உடல்நலன் பாதிக்கப்படுகிறது.
இது குறித்து அரசின் கவனத்து பல்வேறு கட்சிகள், அமைப்புகள் கொண்டு சென்றனர். இதற்கிடையே உணவு பாதுகாப்பு தரநிலை சட்டம் 2006ன் படி உணவு பாதுகாப்புத்துறை அபராதம் விதிக்க கவர்னர் தமிழிசை ஒப்புதல் வழங்கியுள்ளார்.
தரநிலை சட்டத்தை மீறி கலப்படம் செய்வோருக்கு பல அடுக்கு அபராதம் விதிக்கப்படும் என ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிறு உற்பத்தியாளர்கள் கலப்படம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், முதல்முறை ரூ.3 ஆயிரமும், 2-ம் முறை ரூ.6 ஆயிரமும், 3-வது முறை ரூ.20 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.
அதேபோல் தற்காலிக சிறு கடை வைத்திருப்போர் (சிறிய சில்லரை விற்பனையாளர்கள்) கலப்படம் செய்வது கண்டறியப்பட்டால், முதல்முறை என்றால் ரூ.1000, 2-வது முறை ரூ.2 ஆயிரம், மூன்றாவது முறை ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
ஒரு நாளைக்கு 500 லிட்டர் பால் வரை கையாளும் நிறுவனங்கள் கலப்படம் செய்தால் முதல்முறை ரூ.2 ஆயிரமும், 2-வது முறை ரூ.4 ஆயிரம், 3-வது முறை ரூ.20 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.
இறைச்சி கடைகளில் ஒரு நாளைக்கு 10 சிறு விலங்குகள்(ஆடு,மாடு), 50 கோழிகள் வரை விற்கும் நிறுவனங்கள் முதல்முறை ரூ.2 ஆயிரம் அபராதம், 2-வது முறை ரூ.4 ஆயிரம் அபராதம், 3-வது முறை ரூ.20 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.
பதிவு பெறாமல் இயங்கும் கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். தடை செய்யப்பட்ட பொருட்களை விற்கும் வணிக நிறுவனங்களுக்கு முதல்முறை ரூ.5 ஆயிரமும், 2-வது முறை ரூ.10 ஆயிரமும், மூன்றாவது முறை என்றால் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.
உணவுக்கு பயன்படுத்தப்படாத தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். அது மட்டுமல்லாமல் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும்.
உணவுகளில் தடை செய்யப்பட்ட நிறமிகள் பயன்படுத்தினால் ரூ.20 ஆயிரம், தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
இந்த அபராதம் அனைத்து சம்மந்தப்பட்ட மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்தின் கணக்கில் வரைவோலை மூலம் செலுத்தப்பட வேண்டும்.
இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வருவதாக ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆணையை சுகாதாரத்துறை சார்பு செயலர் கந்தன் வெளியிட்டுள்ளார்.