search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    விண்ணைத்தொடும் விலை உயர்வால் தக்காளி சாஸ்க்கு மாறும் பொதுமக்கள்
    X

    விண்ணைத்தொடும் விலை உயர்வால் 'தக்காளி சாஸ்க்கு' மாறும் பொதுமக்கள்

    • அரை கிலோ தக்காளி ரூ.100-க்கு வாங்குவதற்கு பதிலாக ரூ.15-க்கு தக்காளி சாஸ் வாங்குவதால் பணம் மிச்சப்படுத்தப்படுகிறது
    • ஒரே நாளில் ரூ.30, 50 என கூடுதலாகி தற்போது தக்காளி கிலோ ரூ.180-லிருந்து ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    புதுச்சேரி:

    தக்காளி விலை கடந்த 2 மாதமாக கிடுகிடுவென உயர்ந்து தற்போது கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் புதுவை அருகே பொதுமக்கள் ரூ.15-க்கு தக்காளி சாஸ் வாங்கி குழம்பு, ரசம், சட்னிக்கு பயன்படுத்தும் சுவாரசிய சம்பவம் நடந்து வருகிறது.

    ஆசியாவிலேயே பெரிய மார்க்கெட் என்று அழைக்கப்படும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் தக்காளியின் வரத்து குறைந்து வருவதால் கடந்த ஜூன் மாதம் 1 கிலோ தக்காளி ரூ.100-யை தொட்டது. தொடர்ந்து தக்காளியின் விளைச்சல் குறைவு காரணமாக வரத்து குறைந்ததால் ஒரே நாளில் ரூ.30, 50 என கூடுதலாகி தற்போது தக்காளி கிலோ ரூ.180-லிருந்து ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை கோயம்பேட்டில் இருந்து புதுச்சேரி பெரிய மார்க்கெட்டிற்கு தக்காளி வாங்கி வரப்பட்டு இங்கு மொத்தம் மற்றும் சில்லறைக்கு விற்பனை செய்யப்படுகிறது. புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் இருந்து புதுவை மட்டுமல்லாது புதுவை ஒட்டி உள்ள தமிழக பகுதிகளிலும் இங்கிருந்து மூட்டை கணக்கில் மொத்தமாகவும் சில்லறையாகவும் வியாபாரிகள் தக்காளியை வாங்கி கடைகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

    தற்போது தக்காளியின் விலை கிலோ ரூ.180-லிருந்து ரூ.200-ஐ எட்டி உள்ள நிலையில் புதுவை அருகே தமிழக பகுதியான பட்டானூர் பகுதியில் ஒரு சிலர் தக்காளிக்கு பதிலாக தக்காளி சாஸ் வாங்கி அதனை சட்னி, குழம்பு, ரசம் ஆகியவற்றிற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து வாடிக்கையாளர் ஒருவர் கூறுகையில், தக்காளியின் விலை அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் தினக்கூலி வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர மக்கள் சமையலுக்கு தக்காளி பயன்படுத்துவதை குறைத்து வருகின்றனர்.

    தக்காளி ஒரு கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், 110 கிராம் தக்காளி (டொமோட்டோ சாஸ்) சாஸ் ரூ.15-க்கு கிடைக்கிறது. 100 கிராம் தக்காளி சாஸ் செய்வதற்கு 300 கிராமிலிருந்து இருந்து அரை கிலோ வரை தக்காளி தேவைப்படும்.

    அரை கிலோ தக்காளி ரூ.100-க்கு வாங்குவதற்கு பதிலாக ரூ.15-க்கு தக்காளி சாஸ் வாங்குவதால் பணம் மிச்சப்படுத்தப்படுகிறது. மளிகைக் கடைகளில் விற்கப்படும் தக்காளி சாஸில் இனிப்பு சுவை இருப்பதால் அவற்றுடன் சமையலுக்கு புளி, மிளகாய் ஆகியவற்றை கூடுதலாக சேர்த்து இயற்கையான சுவையை பெற முடிகிறது என்றார். இதனால் இந்த பகுதி மக்கள் ஏராளமானோர் தற்போது தக்காளி சாஸ்க்கு மாறி உள்ளனர்.

    Next Story
    ×