search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பரபரப்பான சூழ்நிலையில் புதுச்சேரி சட்டசபை நாளை கூடுகிறது
    X

    புதுவை சட்டமன்றம் நாளை கூட உள்ள நிலையில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மைய மண்டபத்தை ஆய்வு செய்தார்.

    பரபரப்பான சூழ்நிலையில் புதுச்சேரி சட்டசபை நாளை கூடுகிறது

    • சந்திராயன், ஆதித்யா விண்கலங்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், ஜி-20 மாநாடை வெற்றிகரமாக நடத்திய பிரதமர் மோடிக்கும் பாராட்டு தெரிவிக்கப்படுகிறது.
    • தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து எதிர்கட்சிகளான தி.மு.க., காங்கிரஸ் ஆகியவையும் சட்டசபையில் பிரச்சினையை கிளப்ப முடிவெடுத்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 31-ந் தேதியுடன் முடிவடைந்தது.

    6 மாதத்திற்கு ஒரு முறை சட்டசபையை கூட்ட வேண்டும் என்ற விதி உள்ளது. இந்த விதியின் அடிப்படையில் நாளை (செவ்வாய்க்கிழமை) சட்டசபை கூடுகிறது. நாளை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கி வைக்கிறார்.

    தொடர்ந்து சட்டசபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்படுகிறது.

    பின்னர், சந்திராயன், ஆதித்யா விண்கலங்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், ஜி-20 மாநாடை வெற்றிகரமாக நடத்திய பிரதமர் மோடிக்கும் பாராட்டு தெரிவிக்கப்படுகிறது.

    புதுவையில் மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய மத்திய அரசு, பிரதமர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோருக்கு பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப்படுகிறது.

    இதற்கிடையே உறுதியளித்தபடி கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசுக்கு எதிராக சட்டசபையில் உண்ணாவிரதம் இருப்பேன் என பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாண சுந்தரம் அறிவித்துள்ளார். சட்டசபை கூடும் நாளை அவர் உண்ணாவிரதம் இருப்பாரா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    அதோடு, என்.ஆர்.காங்கிரஸ் அரசு அமைந்து 2 ஆண்டுகளை கடந்தும் ரேஷன் கடைகளை திறக்கவில்லை, அறிவித்த திட்டங்களை அரசு செயல்படுத்தாதது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது ஆகியவற்றை கண்டித்து எதிர்கட்சிகளான தி.மு.க., காங்கிரஸ் ஆகியவையும் சட்டசபையில் பிரச்சினையை கிளப்ப முடிவெடுத்துள்ளது.

    இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் நாளை காலை சட்டமன்றம் கூடுகிறது.

    Next Story
    ×