என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தெருநாய்களை கட்டுப்படுத்தாவிட்டால்  போராட்டம்
    X

    தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் கோபால் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்த காட்சி

    தெருநாய்களை கட்டுப்படுத்தாவிட்டால் போராட்டம்

    • தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் கோபால் எச்சரிக்கை
    • பள்ளி குழந்தைகள், வேலைக்கு செல்லும் பெண்கள் என பலரும் பாதிக்கப்படுகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க பொதுக்குழு உறுப்பினரும், உருளையன்பேட்டை தொகுதி பொறுப்பாளருமான கோபால் நகராட்சி ஆணையர் சிவக்குமாரை சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, புதுவை மாவட்டத்தின் மையப் பகுதியான உருளையன்பேட்டை தொகுதி முழுவதும் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது.

    குறிப்பாக இந்திராகாந்தி நகர், சாந்தி நகர், உருளையன்பேட்டை, குபேர் நகர், கென்னடி நகர், கோவிந்தசாலை உள்ளிட்ட தொகுதியின் அனைத்து பகுதிகளிலும் தெருநாய்களால் நடந்து செல்லும் முதியவர்கள், பள்ளி குழந்தைகள், வேலைக்கு செல்லும் பெண்கள் என பலரும் பாதிக்கப்படுகின்றனர்.

    அதேபோல் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை தெருநாய்கள் விரட்டுவதும், அதனால் விபத்துக்கள் ஏற்படுவதும் தொடர்கதையாக இருக்கிறது. தெருநாய்களின் தொல்லையால் மேற்கண்ட பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடன் வசிக்கும் நிலை உள்ளது. மேலும், வருகின்ற மாதம் பள்ளிகள் விடுமுறை காலம் என்பதால் குழந்தைகள், மாணவர்கள் தெருக்களில் விளையாட முடியாத நிலை ஏற்படும்.

    அதுபோல், நாய்கடித்தவர்கள் சிகிச்சைக்கு அரசு மருத்துவனைக்கு சென்றால் போதிய விஷக்கடி மருந்தும் சரிவர இல்லை என்ற நிலையும் இருக்கிறது. இதுகுறித்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நாங்கள் தங்களிடம் புகார் கடிதம் அளித்தோம்.

    கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் கூட தெரு நாய்களின் பிரச்சனை சம்பந்தமாக எதிர்க்கட்சித் தலைவர் சிவா மூலம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அரசும் மாநிலம் முழுவதும் இந்த பிரச்சனை இருக்கிறது என்றும் நகராட்சிகள், கொம்யூன் பஞ்சாயத்துக்கள் மற்றும் கால்நடைத்துறை இணைந்து தெரு நாய்களை பிடிக்க நடைவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தது.

    ஆனால் இதுவரை நகராட்சி நிர்வாகம் தெருநாய்களை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது பொதுமக்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.ஆகவே, நகராட்சி நிர்வாகம் தெருநாய்களை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தும் சூழல் ஏற்படும்.இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×