search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கழிவறையில் விஷ வாயு தாக்கி 3 பெண்கள் பலி: பாதாள சாக்கடை வழியாக பரவியதா? என விசாரணை
    X

    கழிவறையில் விஷ வாயு தாக்கி 3 பெண்கள் பலி: பாதாள சாக்கடை வழியாக பரவியதா? என விசாரணை

    • விஷ வாயு தாக்கியதால் பாதிக்கப்பட்ட பாக்கியலட்சுமி, ஆரோக்கியதாஸ், பாலகிருஷ்ணா ஆகியோர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • விஷ வாயு பரவிய பகுதிகளில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை அரசு செயல்படுத்தியுள்ளது. இந்த பாதாள சாக்கடைகளில் வீடுகளில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. ஒரு சில இடங்களில் வீடுகளில் கழிவுகளையும் நேரடியாக பாதாள சாக்கடைகளில் அனுப்புவதாக புகார்கள் உள்ளது.

    கழிவிலிருந்து கார்பன் மோனாக்சைடு, மீத்தேன் உட்பட விஷ வாயு உற்பத்தியாகும் சாத்தியக்கூறுகள் உள்ளது. இந்த நிலையில் ஆங்காங்கே கழிவுநீர் சுத்திகரிப்பு செய்து அனுப்ப கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

    ரெட்டியார்பாளையம் கனகன் ஏரிக்கு அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் விஷவாயு உற்பத்தியாகி பாதாள சாக்கடை வழியாக வீடுகளில் உள்ள கழிவறைக்குள் புகுந்துள்ளது.

    இன்று காலை வழக்கம்போல ரெட்டியார்பாளையம் புதுநகர் 4-வது தெருவில் கழிவறைக்கு சென்றவர்கள் திடீரென மயங்கி விழுந்தனர். 4-வது தெருவை சேர்ந்த செந்தாமரை(80) கழிவறைக்கு சென்றபோது மயங்கி விழுந்தார். அவரின் மகள் காமாட்சி(45) தாய் விழுந்ததை கண்டு அவரை மீட்க சென்றார். அவரும் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தார். காமாட்சியின் மகள் பாக்கியலட்சுமி(28)யும் மயங்கி விழுந்தார். அதே தெருவில் அடுத்த வீட்டில் வசிக்கும் ஆரோக்கியதாஸ் மகள் செல்வராணி(16) அவரும் கழிவறைக்கு சென்றபோது மயங்கி விழுந்தார்.

    அதே பகுதியயை சேர்ந்த பாலகிருஷ்ணாவும் மயங்கி விழுந்தார். இதையடுத்து அந்த பகுதியில் கழிவறையிலிருந்து விஷவாயு வெளியேறும் தகவல் காட்டுத்தீயாக பரவியது. இதனால் வீடுகளை விட்டு மக்கள் வெளியேறினர்.

    மூதாட்டி செந்தாமரை, அவரின் மகள் காமாட்சி, செல்வராணி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் 3 பேரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    விஷ வாயு தாக்கியதால் பாதிக்கப்பட்ட பாக்கியலட்சுமி, ஆரோக்கியதாஸ், பாலகிருஷ்ணா ஆகியோர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விஷ வாயு பரவிய பகுதிகளில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. பொதுப்பணித்துறையினர், தீயணைப்பு துறையினர், போலீசார் அப்பகுதியில் முகாமிட்டு கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

    பாதாள சாக்கடை வழியாக விஷவாயு பரவியதா? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையடுத்து அந்த பகுதியில் உள்ள வீடுகளில் கழிவறை வழியாக விஷவாயு பரவலாம் என முன்னெச்சரிக்கை விடப்பட்டது. அரசு தரப்பில் உடனடியாக அப்பகுதியில் 10 தெருக்களில் வசிக்கும் மக்கள் வெளியேறும்படி மைக் மூலம் எச்சரிக்கப்பட்டது.

    இதனால் அங்கிருந்த மக்கள் வெளியேறினர். பாதிக்கப்பட்ட 4-வது தெரு மட்டும் சீல் வைக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் வசித்த மக்கள் முக கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் முக கவசம் அணிந்துள்ளனர்.

    Next Story
    ×