search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    யாழ்ப்பாணம்-காரைக்கால் இடையே விரைவில் கப்பல் போக்குவரத்து: இலங்கை மந்திரி தகவல்
    X

    யாழ்ப்பாணம்-காரைக்கால் இடையே விரைவில் கப்பல் போக்குவரத்து: இலங்கை மந்திரி தகவல்

    • விரைவில் கடல் வழி போக்குவரத்து நடைமுறைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
    • காரைக்காலில் இருந்து 3 மணி நேரத்தில் இலங்கை சென்றடையலாம்.

    புதுச்சேரி:

    யாழ்ப்பாணம் காரைக்கால் இடையே விரைவில் கப்பல் போக்கு வரத்து தொடங்கும் என இலங்கை மந்திரி அறிவித்துள்ளார்.

    புதுவையில் பிரெஞ்சு ஆட்சி காலத்தில் கடற்கரை காந்தி சிலை அருகே துறைமுகம் செயல்பட்டது. அப்போது கப்பல் போக்குவரத்து நடைபெற்றது. அதன் பின்னர் துறைமுகம் செயல்படவில்லை. புதுவையில் தற்போது தேங்காய் திட்டில் மீன் பிடி துறைமுகமும் வம்பா கீரபாளையத்தில் மீனவர்களின் படகுகளை நிறுத்தும் துறைமுகம் அமைந்துள்ளது. புதுவை மாநிலம் காரைக்காலில் துறைமுகம் உள்ளது. இங்கு தற்போது சரக்கு கப்பல்கள் வந்து செல்கிறது.

    காரைக்கால்- இலங்கை யாழ்பாணம் இடையே கப்பல் போக்குவரத்தை தொடங்க புதுவை அரசு முடிவு செய்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவர்னர் தமிழிசை காரைக்கால்- யாழ்பாணம் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்றும் இதற்காக மத்திய கப்பல் போக்கு வரத்து ஆணையத்திடம் அனுமதி பெற உள்ளதாகவும் தெரிவித்தார்.

    இந்த நிலையில் யாழ்ப்பாணம்-காரைக்கால் இடையே விரைவில் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம்-காரைக்கால் இடையே பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இதனால் விரைவில் கடல் வழி போக்குவரத்து நடைமுறைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    இது நடைமுறை படுத்தப்பட்டால் காரைக்காலில் இருந்து 3 மணி நேரத்தில் இலங்கை சென்றடையலாம். ஏற்கனவே கடந்த ஆண்டு தமிழகம் வந்து இருந்த இலங்கை பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டை மான், இலங்கை கிராம அபிவிருத்தி ராஜாங்க மந்திரி வியாழேந்திரன் ஆகியோர், இந்தியா-இலங்கை இடையிடையிலான கப்பல் போக்குவரத்து தொடங்க ஆயத்த பணிகள் நடைபெற்றுவருவதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×