search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அரசு அலுவலகத்தில் முதியவர் தீக்குளிப்பு- தொடரும் சம்பவங்களால் புதுச்சேரி மக்கள் அதிர்ச்சி
    X

    சோபித் குமார்.

    அரசு அலுவலகத்தில் முதியவர் தீக்குளிப்பு- தொடரும் சம்பவங்களால் புதுச்சேரி மக்கள் அதிர்ச்சி

    • வரவு செலவு கணக்கில் பல குறைபாடுகள் இருப்பதால் தணிக்கை முடிந்த பிறகு நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதிய பலன்கள் வழங்குவதாக கூறினார்.
    • விரத்தியடைந்த சோபித்குமார் அலுவலகம் முன்பு தான் கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை நேரு நகரை சேர்ந்தவர் சோபித் குமார்( 62). இவர் அரும்பார்த்தபுரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஊழியராக வேலை செய்து பணி ஓய்வு பெற்றவர். இவர் பணியாற்றிய காலத்தில் வரவு செலவில் சில முரண்பாடுகள் இருந்ததால் ஆடிட் செய்வதற்காக இவரது சம்பளம் மற்றும் ஓய்வூதிய பலன்கள் நிறுத்தி வைக்கப்பட்டது.

    இதனால் விவசாய தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தின் மேலாண் இயக்குனர் அய்யப்பனை அடிக்கடி சந்தித்து ஓய்வூதிய பலன்கள் வழங்குமாறு கேட்டு வந்தார். வழக்கம் போல் தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் உள்ள கான்பெட் அலுவலகத்தில் இயக்குனர் அய்யப்பனை சந்தித்து முறையிட்டார்.

    அப்போது அவர் வரவு செலவு கணக்கில் பல குறைபாடுகள் இருப்பதால் தணிக்கை முடிந்த பிறகு நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதிய பலன்கள் வழங்குவதாக கூறினார். தற்காலிகமாக ரூ.10 ஆயிரம் வழங்கிவிட்டு புறப்பட்டு சென்றார்.

    இதனால் விரத்தியடைந்த சோபித்குமார் அலுவலகம் முன்பு தான் கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்தார். உடலில் பற்றிய தீயுடன் அங்குமிங்கும் ஓடி கார் பார்க்கிங் அருகே மயங்கி விந்தார். இதனை பார்த்த அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

    உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து ஜிப்மரில் அனுமதித்தனர். சோபித் குமாருக்கு 90 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    தற்கொலைக்கு முயன்ற சோபித்குமாருக்கு மாலதி (59) என்ற மனைவியும், மகன் குழல்மாலன், ப்ரித்தி என்ற மகளும் உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் தீக்குளிக்கும் முன்பு மனைவியிடம் செல்போனில் பேசி தன்னை மன்னிக்குமாறு கூறியுள்ளார்.

    நேற்று முன்தினம் புதுவை காலாப்பட்டு போலீஸ்நிலையத்தில் கலைச் செல்வி என்ற பெண் தீக்குளித்து இறந்தார். அந்த சம்பவம் அடங்குவதற்குள் அரசு அலுவலக வளாகத்தில் ஓய்வு பெற்ற ஊழியர் தீக்குளித்த சம்பவம் புதுவை மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×