என் மலர்
Recap 2024

2024 ரீவைண்ட் - சாதனை படைத்த சென்னை விமான சாகச நிகழ்ச்சி
- விமான சாகச கண்காட்சியில் இந்திய விமானப்படையின் பல்வேறு வகையான 72 விமானங்கள் பங்கேற்றன.
- விமானப்படையில் சேர்க்கப்பட உள்ள ‘எச்.டி.டி.-40’ என்ற பயிற்சி விமானம் வானில் குட்டிக்கரணம் அடித்து சாகசத்தில் ஈடுபட்டது.
இந்திய விமானப்படை கடந்த 1932-ம் ஆண்டு அக்டோபர் 8-ந் தேதி தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு 92-ம் ஆண்டு நிறைவடைந்து 93-ம் ஆண்டில் இந்திய விமானப்படை அடியெடுத்து வைத்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் விமானப்படை தினம் நாட்டில் உள்ள வெவ்வேறு நகரங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், அதிநவீன போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகளுடன் இந்த ஆண்டுக்கான விமானப்படை தினம் சென்னையில் கடந்த அக். 6-ந்தேதி மிகப்பெரிய விமான வான் சாகச நிகழ்ச்சியுடன் நடந்தது.
மெரினா கடற்கரையில் காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த சாகச நிகழ்ச்சி மதியம் 1 மணி வரை 2 மணி நேரம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின், தயாநிதி மாறன் உள்பட எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கண்டு களித்தனர்.
இந்த விமான சாகச கண்காட்சியில் இந்திய விமானப்படையின் பல்வேறு வகையான 72 விமானங்கள் பங்கேற்றன. முதல் நிகழ்வாக, ஆக்ரா விமானப்படை பிரிவின் கீழ் செயல்படும் பாராசூட் பயிற்சி பள்ளியைச் சேர்ந்த 5 வீரர்கள் 8 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து பாராசூட் மூலம் கீழே குதித்தனர்.
அதற்கு அடுத்ததாக, எம்.ஐ.70 ரக ஹெலிகாப்டரில் இருந்து 28 கமாண்டோ வீரர்கள் மெரினா கடற்கரை மணல் பகுதியில் குதித்தனர். அங்கு தேசவிரோத சக்தியால் பிடித்து வைத்திருந்த பணயக்கைதிகளை மீட்கும் சாகச நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு சாகச நிகழ்ச்சியை நடத்தி காண்பித்தனர்.
இதில், விமானப்படையின் ஆகாஷ் கங்கா அணி வானில் குட்டிக்கரணம் அடித்தும், சூர்யகிரண் ஏரோபாட்டிக் அணி 'ஸ்கை டைவிங்' கலையில் விமானங்களுடன் ஒன்றுடன் ஒன்று மிக நெருக்கமாக வந்தும் சாகசங்களை நிகழ்த்தின. சாரங் ஹெலிகாப்டர்களின் வான் நடனமும் நடைபெற்றது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன இலகு ரக விமானமான தேஜஸ், இலகுரக போர் ஹெலிகாப்டர் பிரசாந்த் மற்றும் 1971-ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான போரில் பயன்படுத்தப்பட்ட 'டகோட்டா' மற்றும் 'ஹார்வர்ட்' ஆகிய பழங்கால விமானங்களும், அதிநவீன போர் விமானமான ரபேல் விமானம், கார்கில் போரில் பங்கேற்ற விமானங்கள் இந்த சாகச நிகழ்ச்சியில் பங்கேற்று வானில் சாகசத்தை வெளிப்படுத்தின.
தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து 'சேத்தக்' ரக ஹெலிகாப்டர்கள் மூலம் வீரர்கள் மூவர்ணக்கொடியை ஏந்தியபடி பாராசூட் மூலம் கீழே குதித்து சாகசம் செய்து அசத்தினர். அடுத்ததாக, இந்திய விமானப்படையில் அதிவேகமாக செல்லும் போர் விமானமான ரபேல் வானில் தீப்பிழம்புகளை கக்கியபடி சாகசத்தில் ஈடுபட்டது காண்போரை கவர்ந்திழுக்க செய்தது.
இந்திய விமானப்படையின் பழமையான விமானமான 'டகோட்டா', 'ஹார்வர்டு' விமானங்கள் பட்டாம்பூச்சிகள் போல் பறந்து வந்து தங்களது திறமையை பறைசாற்றின. இந்தவகை விமானங்களில் 1947-ம் ஆண்டில் இருந்து 1989-ம் ஆண்டு வரை இந்திய விமானப்படையில் பணியாற்றின. பழமையான விமானம் தாழ்வாக பறந்து சாகசம் செய்து கொண்டிருந்தபோது, வர்ணணையாளர்கள், என்னதான் வயசானாலும், உன் அழகும், ஸ்டைலும் மாறவில்லை' என்றதும் பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
விமானப்படையில் சேர்க்கப்பட உள்ள 'எச்.டி.டி.-40' என்ற பயிற்சி விமானம் வானில் குட்டிக்கரணம் அடித்து சாகசத்தில் ஈடுபட்டது. மிராஜ் போர் விமானம் பின்னால் வந்த இரு விமானங்களுக்கு நடுவானில் எரிபொருளை நிரப்பி காட்டி சாகசத்தில் ஈடுபட்டன. அத்துடன் இதய வடிவை வானில் வரைந்து காண்பித்தது வேறுவிதமாக அமைந்தது.
சென்னையை கலக்கிய விமான சாகச நிகழ்ச்சி குறித்து, விமானப்படை அதிகாரி ஏர் கமோடர் எச்.அசுதானி, கூறும்போது, 'சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி நடத்துவது குறித்து 2 மாதங்களுக்கு முன்பே மெரினா கடற்கரைக்கு வந்து ஆய்வு செய்தோம். இந்த நிகழ்ச்சியை நடத்த தமிழக அரசும், சென்னையில் உள்ள இந்திய விமான ஆணையமும் முழு ஒத்துழைப்பு வழங்கியது. சாகச நிகழ்ச்சியில் 72 விமானங்கள் தாம்பரம் அரக்கோணம், கோவை சூலூர், தஞ்சாவூர், பெங்களூரு மற்றும் சென்னை விமான நிலையம் ஆகிய 7 இடங்களில் இருந்து புறப்பட்டு வந்து சாகசத்தில் ஈடுபட்டன. 2 மணி நேரம் நடைபெற்ற இந்த சாகச நிகழ்ச்சி எங்களுக்கு சவாலாக இருந்தது. காரணம், விமானிகளின் பாதுகாப்பு, பொதுமக்களின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இந்த சாகச நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டது' என்றார்.
இந்த சாகச நிகழ்ச்சியை முன்னிட்டு, 6 ஆயிரத்து 500 போலீசார் மற்றும் 1,500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சுமார் 15 லட்சம் பேர் பார்வையிட்டு இருப்பார்கள் என்று பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறினர்.
சென்னை மெரினா கடற்கரையில் சுமார் 2 மணி நேரம் நடந்த விமானப்படையினரின் சாகச நிகழ்ச்சியை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர், நெல்லூர் மாவட்டம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து வந்த சுமார் 15 லட்சம் பேர் நேரில் கண்டுகளித்ததாக தகவல் வெளியானது. இதன் மூலம் உலகிலேயே அதிக பொதுமக்கள் பங்கேற்ற ராணுவ நிகழ்ச்சி என்று லிம்கா சாதனை புத்தகத்தில் சென்னை விமான சாகச நிகழ்ச்சி இடம்பெற்றது.
இதற்காக நிகழ்ச்சி முடிவடைந்ததும், லிம்கா புத்தகத்திற்கு அனுப்புவதற்காக கழுகு பார்வையில் ஹெலிகாப்டரில் வந்த வீரர்கள் மெரினா கடற்கரையில் இருந்து பொதுமக்களை புகைப்படம் எடுத்தனர். இதுகுறித்த அறிவிப்பு வெளியானதும் பொதுமக்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த குடை, குடிநீர் பாட்டில்களால் அசைத்து ஆரவாரம் செய்தனர்.
சென்னை மெரினாவில் விமான சாகசத்தை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டனர். காலையில் வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருந்தது. நேரம் செல்ல செல்ல வெயில் அதிகரித்து காணப்பட்டது. வெயிலின் தாக்கத்தாலும், குடிநீர் கிடைக்காததாலும் உடலில் நீர்ச்சத்து குறைந்து 100-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர்.
அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரி, ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி மற்றும் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கூட்ட நெரிசல் காரணமாக ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை இருந்தது. இதனால், போலீசார் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர். மொத்தம் 63 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்கு பின்னர் 36 பேர் வீட்டுக்கு சென்றனர். 27 பேர் மட்டும் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. இதற்கிடையே வெயிலின் தாக்கத்தால் 5 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.






