என் மலர்
Recap 2024
2024 ரீவைண்ட்: பாஜகவில் இணைந்த சரத்குமார்; திமுக கூட்டணியில் இணைந்த கமல்
- சரத்குமார் யாரும் எதிர்பாராத வகையில் தனது கூட்டணி நிலைப்பாட்டை அறிவித்தார்.
- மக்கள் நீதி மய்யத்திற்கு 2025 மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டது.
இந்தியாவின் 18வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்றது.
தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப்போட்டி நிலவியது. ஆனால், எந்த கட்சியில் யார் கூட்டணி வைக்கப்போகிறார்கள் என்கிற கூட்டணிப் பேச்சுவார்த்தையில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தன.
அதன்படி, அ.தி.மு.க. கூட்டணியில் புதிய தமிழகம், பார்வர்ட் ப்ளாக் கட்சிகள், தேமுதிக ஆகிய கட்சிகள் அதிகாரப்பூர்வமாக இணைந்தன.
பாஜக கூட்டணியில் தமாகா, பாமக, புதிய நீதிக் கட்சி, ஐஜேகே, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை இணைந்தன.
ஆனால், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணியில் இணைவதற்கான முடிவு எடுப்பதில் இழுப்பறியாக இருந்தது.
தி.மு.க. தவிர அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் தனித் தனியாக பேச்சுவார்த்தைகள் நடத்தி வந்தன. ஆனால், சரத்குமார் யாரும் எதிர்பாராத வகையில் தனது கூட்டணி நிலைப்பாட்டை அறிவித்தார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை நடத்தி வந்த கட்சியின் தலைவர் சரத்குமார், பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், தனது கட்சியை கடந்த மார்ச் 12ம் தேதி திடீரென பாஜகவுடன் இணைத்துக் கொள்வதாக அறிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, பாஜக வேட்பாளராக விருதுநகர் தொகுதியானது சரத்குமாரின் மனைவி ராதிகா சரத்குமாருக்கு ஒதுக்கப்பட்டதை அடுத்து அவர் போட்டியிட்டார்.
இந்த தேர்தலில் ராதிகா சரத்குமார் தோல்வியடைந்தார்.
இதேபோல், 2024 மக்களவை தேர்தலுக்கான கூட்டணியில் திமுகவுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இணைந்தது.
இந்த தேர்தலில் போட்டியிட தென் சென்னை, கோவை ஆகிய தொகுதிகளை கமல் கேட்டதாகவும் அதற்கு திமுக மறுத்ததாகவும் கூறப்பட்டது.
ஆனால், அதற்கு பதிலாக மக்கள் நீதி மய்யத்திற்கு 2025 மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டது.
இதற்கு மக்கள் நீதி மய்யம் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, தேர்தலில் பரப்புரை மேற்கொண்டது.
கடந்த 2018ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யத்தைத் தொடங்கிய கமல், அதிமுக, திமுக இரு கட்சிகளையும் விமர்சித்து வந்தார்.
இறுதியில் திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது.