என் மலர்
Recap 2024
ரீவைண்ட் 2024: விவாகரத்து முதல் இந்திய அணியின் கேப்டன் பதவி வரை.. ஹர்திக்கிற்கு சோக ஆண்டாக அமைந்த 2024
- மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக பாண்ட்யா நியமிக்கப்பட்டது ரசிகர்களிடையே எதிர்ப்பை கிளப்பியது.
- ஹர்திக் பாண்ட்யா இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
மும்பை:
2024-ம் ஆண்டு ஹர்திக் பாண்ட்யாவால் மறக்க முடியாத ஒரு ஆண்டாக இருக்கும். இந்திய கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்த ஆண்டு ஹர்திக் பாண்ட்யா மிகவும் சிறப்பாக செயல்பட்டார். 2024 டி20 உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்ட்யா மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தார். இந்த ஆண்டின் துவக்கத்தில் அவர் பலராலும் வெறுக்கப்பட முக்கிய காரணம் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவி தான்.
2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யா கேப்டன் பதவியை ஏற்றார். அதனால் பெரும்பாலான ரசிகர்கள் ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக விமர்சனத்தை முன் வைத்து வந்தனர்.
இந்த நிலையில், 2024 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் முதன்முறையாக ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி படுமோசமான தோல்விகளை சந்தித்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை மட்டுமே பிடித்தது.
ஆனால், அடுத்து நடந்த 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் ஹர்திக் பாண்ட்யா ஆல் ரவுண்டராக மிகச் சிறப்பாக செயல்பட்டார். அந்தத் தொடரில் அவர் எட்டு போட்டிகளில் 144 ரன்கள் எடுத்ததோடு, 11 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதன்மூலம் 2024 டி20 உலகக் கோப்பையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பெற்று இருந்தார்.
உலகக் கோப்பை முடிந்த உடன் ஹர்திக் பாண்ட்யா இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த நிலையில், அவருக்கு அடுத்ததாக இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் இந்திய டி20 அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அடுத்த சில நாட்களில் ஹர்திக் பாண்ட்யாவும், அவரது முன்னாள் மனைவி நடாஷா ஸ்டான்கோவிக்கும் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர்.
இப்படியாக 2024-ம் ஆண்டில் உலகக் கோப்பை வென்று இருந்தாலும், தனிப்பட்ட முறையில் பல மோசமான நிகழ்வுகளையும், ஏமாற்றங்களையும், சோகங்களையும் ஹர்திக் பாண்ட்யா எதிர்கொண்டார்.