search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "14 years struggles"

    சந்தன கடத்தல் வீரப்பனை கொல்ல உதவிய பெண் அரசு வெகுமதி மற்றும் சலுகைகளுக்காக14 ஆண்டுகள் போராடி வருவதாக தெரிவித்துள்ளார். #Veerappan
    கோவை:

    தமிழகம், கர்நாடக வனப் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த சந்தன கடத்தல் வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகளை கொல்ல தமிழக, கர்நாடக அரசுகள் பல முயற்சிகள் மேற்கொண்டன.

    அதன்ஒரு பகுதியாக, வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி மற்றும் அவரது குழந்தைகளை கோவை வடவள்ளி பகுதியில் காவல் துறையினர் தங்க வைத்தனர்.

    அப்போது அதிரடிப்படை தலைவராக இருந்த செந்தாமரைக் கண்ணன், வீரப்பன் மனைவி முத்துலட்சுமியுடன் நெருங்கி பழகி வீரப்பன் குறித்த தகவல்களை பெறும் படி கோவை வடவள்ளியை சேர்ந்த சண்முகபிரியா என்ற பெண்ணை நியமித்தார்.

    முத்துலட்சுமியுடன் நெருங்கி பழகிய சண்முகப்பிரியா, வீரப்பன் தொடர்பான தகவல்களை பெற்று அதிரடி படையினருக்கு தெரிவித்தார். இதை அடிப்படையாக கொண்டு வீரப்பனும் அவரது கூட்டாளிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    2004-ல் நடைபெற்ற இந்த சம்பவத்தை தொடர்ந்து சண்முகப்பிரியாவுக்கு மத்திய அரசின் சார்பில் பரிசுத் தொகை , மாநில அரசின் சார்பில் தனியாக நிதி உதவியும், வீட்டுமனையும், பதக்கமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சண்முகபிரியாவுக்கு அறிவிக்கப்பட்ட நிலம், பரிசுத்தொகை போன்றவை இதுவரை வழங்கவில்லை. இதுகுறித்து சண்முகப்பிரியா நிருபர்களிடம் கூறியதாவது:-


    வீரப்பன் நடமாட்டம் குறித்தும் அவரது கண் பார்வை குறைந்து இருப்பது குறித்த தகவல்களை அதிரடிபடையினருக்கு தெரிவித்தேன். அதனை அடிப்படையாக கொண்டே வீரப்பனும், அவரது கூட்டாளியும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    மத்திய, மாநில அரசுகள் அறிவித்த வெகுமதி மற்றும் சலுகைகளுக்காக பல ஆண்டுகளாக போராடி வருகிறேன். அதிரடிப்படையினருக்கு பதவி உயர்வு, பரிசுத்தொகை கொடுத்து விட்டனர். ஆனால் 14 ஆண்டுகளுக்கு மேலாகியும் எனக்கு இதுவரை பரிசு தொகை கிடைக்கவில்லை.

    தற்போது எனக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் மத்திய,மாநில அரசுகள் வெகுமதியும் சலுகைகளும் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல சினிமா டைரக்டர் ராம்கோபால் வர்மா ‘கில்லிங் வீரப்பன்’ என்ற பெயரில் படம் எடுப்பது தொடர்பாக என்னுடன் ஒப்பந்தம் செய்தார். ரூ.6 லட்சம் ஒப்பந்தம் போட்ட நிலையில் ரூ.1 லட்சம் மட்டும் கொடுத்துவிட்டு மீதி தொகையை வழங்கவில்லை.

    இது தொடர்பாக ராம்கோபால் வர்மாவுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வருகிறேன். தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர்கள் சங்கத்தில் முறையிட்டும் இதுவரை எனக்கு நியாயம் கிடைக்கவில்லை

    இவ்வாறு அவர் கூறினார். #Veerappan
    ×