search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "22th Day of Fasting"

    • அறிவுக் கண்களை திறந்த மக்கா போரின் வெற்றி.
    • மக்கா வெற்றிக்குப் பிறகு ஒளிவு மறைவின்றி இஸ்லாத்தை பின்பற்றினர்.

    அறிவுக் கண்களை திறந்த மக்கா போரின் வெற்றி

    ஹஜ்ரி 6-ம் ஆண்டு துல்கஅதா மாதத்தின் தொடக்கத்தில் திங்கட்கிழமை அன்று நபி (ஸல்) அவர்களுக்கும், குரைஷிகளுக்கும் இடையே `ஹூதைபிய்யா' எனும் இடத்தில் சமாதான ஒப்பந்தம் ஏற்படுகிறது.

    அதில் ஒன்று 'நபியவர்களுடன் சேர விரும்புவோர் நபியுடன் சேரலாம்; குரைஷிகளுடன் சேர விரும்புவோர் அவர்களுடன் சேர்ந்து கொள்ளலாம். யார் யாருடன் சேர்ந்து கொள்கிறார்களோ அவர் அந்த அணியில் ஒருவராகக் கருதப்படுவார். அவர் மீது யாராவது அத்துமீறினால், அது அந்த கூட்டத்தினர் மீதே அத்து மீறியதாகும்.

    இதற்கேற்ப குஜாஆ கூட்டத்தினர் நபியுடன் சேர்ந்து கொண்டனர். பக்ர் கூட்டத்தினர் குரைஷிகளுடன் சேர்ந்து கொண்டனர். அறியாமைக் காலத்திலிருந்தே குஜாஆ. பக்ர் கூட்டத்தினருக்கிடையே சண்டை நிலவி வந்தது. இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு சண்டை நிறுத்தப்பட்டது.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு பக்ர் கோத்திரத்தினர். குஜாஆவினரிடம் அத்துமீறி நடந்து கொண்டு, ஹிஜ்ரி 8, ஷஃபான் மாதத்தில் சண்டையிட்டு உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தினர். பாதிக்கப்பட்ட குஜாஆ கிளையினர் நபி அவர்களிடம் உதவி தேடினர்.

    நபி (ஸல்) அவர்கள் தமது தோழமை அணியினரின் உதவிக்காக, ஹிஜ்ரி 8-ம் ஆண்டு ரமலான் பிறை 10-ல் தம்முடன் 10 ஆயிரம் தோழர்களுடன் மதீனாவிலிருந்து மக்கா நோக்கிப் புறப்பட்டார்கள். இந்த போர் புனித ரமலான் மாதத்தில் நடந்ததால் நபி (ஸல்) அவர்களும், நபித் தோழர்களும் நோன்பு வைத்திருந்தார்கள்.

    கி.பி. 630, ஜனவரி 10, ஹிஜ்ரி 8, ரமலான் பிறை 20-ம் நாளன்று நபி (ஸல்) அவர்களின் படை மக்காவிற்கு நுழைந்து, அதை வெற்றி கொள்கிறது.

    மக்கா வெற்றி கொள்ளப்பட்ட பிறகுமக்கா குரைஷிகள் பதட்டம் அடைந்தார்கள். மக்காவின் அதிகாரம் நபி (ஸல்) கீழ் வந்துவிட்டது.

    அவரையும், அவரது தோழர்களையும் நாம் பல்வேறு விதங்களில் கொடுமைப்படுத்தி உள்ளோம். எனவே அவர் நம்மை பழிவாங்கி விடுவார்' என்று நினைத்தனர்.

    அந்த சமயத்தில் 'குரைஷிக் கூட்டமே! நான் உங்களிடம் எவ்விதம் நடந்து கொள்வேன் என கருதுகிறீர்கள்?' என நபி கேட்க, 'நல்லமுறையில் நடந்து கொள்வீர்கள். நீங்கள் எங்களுக்கு சிறந்த சகோதரராகவும், எங்களில் சிறந்த சகோதரரின் மகனாகவும் இருக்கிறீர்' என பதில் கூறினர்.

    உடனே நபி (ஸல்) அவர்கள் 'நான் உங்களுக்கு யூசுப் நபி தமது சகோதரருக்குக் கூறியதைப் போன்றுதான் கூறுவேன். உங்களை எந்தவிதத்திலும் பழிவாங்கப்படாது. நீங்கள் மன்னிக்கப்பட்டவர்கள், நீங்கள் செல்லலாம்' என்று கூறினார்கள்.

    நபி (ஸல்) அவர்கள் எதிரிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கினார்கள். அபூசுப்யான் வீட்டில் அடைக்கலம் பெற்றவரும், புனிதகஅபா ஆலயத்தில் அடைக்கலம் பெற்றவரும் அபயம் பெற்றனர். பிறகு, நபி (ஸல்) மக்காவில் 19 நாட்கள் தங்கியிருந்து தூய இஸ்லாத்தை எடுத் துரைத்தார்கள்.

    இதுநாள் வரை மக்காவில் திரை மறைவில் இஸ்லாமிய நெறியைக் கடைப்பிடித்து வாழ்ந்து வந்த முஸ்லிம்கள், மக்கா வெற்றிக்குப் பிறகு ஒளிவு மறைவின்றி இஸ்லாத்தை பின்பற்றினர்.

    அலைகடலென மார்க்கத்தை நோக்கி படையெடுத்து வந்து ஏற்றுக்கொண்டனர். இப்போர் அறிவுக் கண்களைத் திறந்து, அறியாமைக் கதவுகளை அடைத்து, இஸ்லாத்தை ஏற்பதற்கு குறுக்கிட்ட தடைக்கல்லைத் தகர்த்தெறிந்தது.

    ×