search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "95 year old elderly woman"

    பெற்ற பிள்ளைகள் 9 பேர் இருந்தும் பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட 95 வயது மூதாட்டியை சமூக ஆர்வலர் மீட்டு, முதியோர் காப்பகத்தில் சேர்த்துள்ளார்.
    வேலூர்:

    திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலை கொழிஞ்சாறையை சேர்ந்தவர் 95 வயது மூதாட்டி அந்தோணியம்மாள். இவரது கணவர் தேவராஜ்.

    கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் அந்தோணியம்மாள் தேவராஜை பார்த்து கொள்வதில் மகன், மகள்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் காட்பாடியில் உள்ள தனது மகள் ஜெய்சிராணி வீட்டுக்கு அந்தோணியம்மாள் வந்தார். அவரை மருமகன் நந்தகுமார் நன்றாக கவனித்து வந்துள்ளார்.

    இந்நிலையில், நந்தகுமார் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். அதற்கு பிறகு மகள் ஜெய்சிராணி அந்தோணியம்மாளை கவனிக்க முடியாது என்று கூறி விட்டார். இதனால் வீட்டை விட்டு வெளியில் வந்த அந்தோணியம்மாள் கடந்த 5 ஆண்டுகளாக வேலூர் விண்ணரசி மாதா கோவிலில் பிச்சை எடுத்து வந்தார். அந்த பணத்தையும் அவரது மகள் வாங்கி சென்றுள்ளார்.

    இந்நிலையில் கடந்த மாதம் அந்தோணியம்மாள் கீழே விழுந்தததில் அவரது வலது கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவதிப்பட்டு வந்த அவரை அங்கிருந்த ஒரு பெண் பாதுகாத்து பணிவிடை செய்து வந்தார்.

    இது குறித்து தகவலறிந்த சமூக ஆர்வலர் மணிமாறன் என்பவர் மூதாட்டியை அழைத்து வந்து கலெக்டரிடம் மனு அளித்தார்.

    அதில் அந்தோணியம்மாளுக்கு உணவு தங்க இடம் வழங்க வேண்டும். இவரை கைவிட்ட உறவுகள் மீது முதியோர் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து கலெக்டர் ராமன் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சாந்திக்கு தகவல் தெரிவித்து முதியோர் காப்பகத்தில் மூதாட்டியை ஒப்படைக்க உத்தரவிட்டார்.

    எங்களுக்கு 13 குழந்தைகள் பிறந்தன. சிலர் இறந்து விட்டனர். தற்போது 5 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். 33 பேரக்குழந்தைகளும் உள்ளனர்.

    20 ஆண்டுகளுக்கு முன்பு என்னையும், எனது கணவரையும் பார்த்துக் கொள்வதில் மகன், மகள்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது. எனது மூத்த மகளை வேலூர் காட்பாடியை சேர்ந்த நந்தகுமார் என்ற போலீஸ்காரருக்கு திருமணம் செய்து வைத்தேன். இதையடுத்து அவர் என்னை பார்த்துக் கொள்வதாக கூறி, வேலூர் அழைத்து வந்தார்.

    என்னையும் அவரது தாய் போல் அரவணைத்து பார்த்துக் கொண்டார். அவர் இறந்த பின்பு எனது மகளும், என்னை கைவிட்டு விட்டார். நான் அனாதையானேன். வேலூர் நகரில் பிச்சை எடுத்துத் தான் சாப்பிட்டு வந்தேன். இதுவரை எனது மகன்கள் என்னை பார்க்கவரவில்லை.

    நான் சிறிது, சிறிதாக சேர்த்து வைத்த பணத்தையும் எனது மகள் அவ்வப்போது வந்து வாங்கிச் சென்று விடுவாள். சில மாதங்களுக்கு முன்பு நான் கீழே விழுந்தேன். இதனால் எனது கால்கள் முறிந்து விட்டன. எழுந்து நடக்க முடியவில்லை. பிச்சை எடுக்கக்கூட என்னால் எங்கும் செல்ல முடியவில்லை.

    தற்போது நான் தங்கியிருக்கும் இடத்தில், ஒரு பெண் தான் என்னை தாய் போல் பார்த்துக் கொள்கிறாள். நான் இயற்கை உபாதைகளை கழித்தால், முகம் சுழிக்காமல், என்னை சுத்தப்படுத்துவாள். சாகும் வரை நான் அவளுடன் இருந்து கொள்கிறேன். நான் இறந்தால் பெற்ற பிள்ளைகளோ, பேரன்களோ யாரும் வரவேண்டாம் என்றார். அப்போது அவர் அவரையும் அறியாமல் கதறி அழுதார்.

    சமூக சேவகர் மணிமாறன் கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன் அந்தோணியம்மாள் இறந்து விட்டதாக பொய்யான தகவல் கொடுத்தோம். அப்போது நேரில் வந்த உறவினர்கள் இவர் உயிரோடு இருப்பதை பார்த்து எங்களை திட்டினர். இறந்தால் சொல்லி அனுப்புங்கள். அவரை எங்களுடன் அழைத்து செல்ல முடியாது என்று கூறிவிட்டு சென்று விட்டனர் என்றார். 
    ×