search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aadi pooram"

    • ஆண்டாள் கோவில் 108 வகையான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 14-ந் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 22-ந் தேதி தேரோட்ட திருவிழா நடைபெற்றது, இதையொட்டி நிறைவு நிகழ்ச்சியாக புஷ்பயாகம் நேற்று நடைபெற்றது. இதை யொட்டி ஆண்டாள் கோவில் 108 வகையான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள், ரெங்க மன்னார் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • அம்பாளுக்கும், சுவாமிக்கும் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.
    • 29-ந்தேதி சுவாமி-அம்பாள், பெருமாள் தங்க கேடயத்தில் எழுந்தருளும் நடக்கிறது.

    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் ஆடி திருக்கல்யாண திருவிழாவின் 11-வது நாளான நேற்று ராமதீர்த்தம் பகுதியில் உள்ள தபசு மண்டகப்படியில் சுவாமி-அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்காக நேற்று காலை 6 மணி அளவில் கோவிலில் இருந்து வெள்ளி கமல வாகனத்தில் பர்வதவர்த்தினி அம்பாள் தபசு மண்டகப்படிக்கு எழுந்தருளினார். பகல் 12 மணிக்கு மேல் சுவாமி தங்க ரிஷப வாகனத்தில் கோவிலில் இருந்து தபசு மண்டகப்படிக்கு எழுந்தருளினார். பகல் 2 மணிக்கு மேல் தபசு மண்டகப்படியில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அப்போது சுவாமியை அம்பாள் சுற்றி 3 முறை வலம் வரவே அம்பாள் கழுத்தில் இருந்த மாலை சுவாமி கழுத்திலும், சுவாமி கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த மாலை அம்பாள் கழுத்திலும் 3 முறை அணிவிக்கப்பட்டு மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை மாற்றுதல் நிகழ்ச்சியை கோவிலின் குருக்கள் உதயகுமார், சிவமணி, ஸ்ரீராம் உள்ளிட்டோர் செய்தனர். நிகழ்ச்சியில் கோவிலின் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன், ஆய்வாளர் பிரபாகர், மேலாளர் மாரியப்பன், செயல் அலுவலர் விஜயலட்சுமி, பேஷ்கார்கள் கமலநாதன், பஞ்சமூர்த்தி, முனியசாமி, முன்னாள் அறங்காவலர் சண்முகம், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் பாரிராஜன், இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பிரபாகரன், முன்னாள் கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து நேற்று இரவு 7 மணி அளவில் ஆஞ்சநேயர் சன்னதியில் வைத்து நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று(திங்கட்கிழமை) அதிகாலை தபசு மண்டகப்படியில் இருந்து அம்பாள் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் புறப்பாடாகி கோவிலுக்கு வந்தடைகின்றார். தொடர்ந்து இரவு 7.30 மணியில் இருந்து 8.30 மணிக்குள் ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.

    திருக்கல்யாண திருவிழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியாக வருகின்ற 29-ந் தேதி சுவாமி-அம்பாள், பெருமாள் தங்க கேடயத்தில் கெந்த மாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியோடு திருவிழா நிறைவுபெறுகின்றது.

    • அம்மன் வீதி உலா நடந்தது.
    • ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

    நாகை மாவட்டம் கீழ்வேளூரில் சுந்தர குஜாம்பிகை உடனாகிய அட்சயலிங்க சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சுந்தரகுஜாம்பிகை அம்மனுக்கு வளையல் விழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான வளையல்களால் சுந்தர குஜாம்பிகை அம்மன் காத்யாயினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து அம்மன் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பூமிநாதன் மற்றும் கோவில் பணியாளர்கள், கிராம மக்கள் செய்து இருந்தனர்.

    ஆடிப்பூரத்தையொட்டி நாகை அனுச்சியங்குடி காளியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காளியம்மனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    • அபிஷேக பிரியை முண்டகக்கண்ணி அம்மன்.
    • ஆடி மாதம் முழுவதும் அன்னைக்குரிய மாதமாகும்.

    `மலைத்தேன் எடுத்து வந்து மாரிக்கு அபிஷேகம்

    தென்னை இளநீராலே தேவிக்கு அபிஷேகம்

    மாம்பழச் சாறாலே மாரிக்கு அபிஷேகம்

    மஞ்சள் நீரெடுத்து மகமாயிக்கு அபிஷேகம்'

    என்ற நாட்டு பாடலுக்கு ஏற்ப, அபிஷேக பிரியையான அன்னை முண்டகக் கண்ணிக்கு தினசரி காலை 6.30 மணியில் இருந்து நண்பகல் 12.30 மணி வரை அபிஷேகங்கள் பக்தர்களால் தொடர்ந்து நடத்தப்படுகிறது.

    பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதற்காக இந்த அபிஷேகங்களை தினசரி நடத்துகிறார்கள். சந்தனக்காப்பு, மஞ்சள் காப்பு, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், எலுமிச்சையென பக்தர்கள் செய்யும் அபிஷேகங்களால் அன்னை குளிர்ச்சியாய் இருப்பாள். செய்யும் அபிஷேகங்களுக்கு ஏற்ப அன்னை பின்வரும் பலன்களை தருவாள்.

    சந்தனக்காப்பு-செல்வம் அளிக்கும்

    மஞ்சள் காப்பு - வசீகரணம் உண்டாக்கும்

    பால் - ஆயுளை வளர்க்கும்

    தயிர் - மக்கட்பேறு அளிக்கும்

    பஞ்சாமிர்தம் - வெற்றியைத் தரும்

    தேன் - சுகமளிக்கும்

    இளநீர் - போகமளிக்கும்

    எலுமிச்சை - எம பயத்தைப் போக்கும்

    இங்கு வழங்கப்படும் தீர்த்தத்தைப் பருகுவோர் அம்மைநோய் முதலான எல்லாவகை நோய்களில் இருந்தும் நிவர்த்தியாகி நன்மை பெறலாம்.

    பொங்கலிடுதல்

    வீட்டில் நடக்கும் சுபகாரியங்களுக்கு முன்னோடியாகவும் வேண்டுதல் நிறைவேறியதற்காகவும் இந்த கோவிலில் பொங்கலிடுவது வழக்கம். ஆடி, தை வெள்ளி ஞாயிற்றுக்கிழமைகளில் பொங்கல் வைப்போர் கூட்டம் அதிகம். இங்குள்ள பொங்கல் மண்டபத்தில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்ந்து இடைவிடாமல் பொங்கலிடுதல் நடைபெறும்.

    நித்ய பூஜை

    இத்திருக்கோவிலில் தற்போது நாள்தோறும் காலை, நண்பகல் இருவேளைகளிலும் பூசாரிகளால் ஆராதனை நடத்தப்படுகிறது. காலை சந்தி - காலை 7.00 மணி, உச்சிக்காலம் - பகல் 12.00 மணி

    திருக்கோவில் காலை 6 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும். விழா நாட்களில் திருக்கோவில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை வழிபாட்டிற்கு திறந்திருக்கும்.

    ஆடிப்பூரம்

    ஆடி மாதம் முழுவதும் அன்னைக்குரிய மாதமாகும். இந்த மாதத்தில் மழை ஆரம்பித்து ஐப்பசி வரையிலும் தொடரும். பருவ நிலையால் ஏற்படும் நோய் நொடியிலிருந்தும், இயற்கை சேதங்களிலிருந்தும் காக்கும்படி அன்னையை ஆடி மாதத்தில் வேண்டி வழிபடுவர்.

    ஆடித்திங்களில் வெள்ளி, ஞாயிறு, செவ்வாய் நாட்களில் பக்தர்கள் கூட்டம் அன்னையின் கோவிலை மொய்த்திருக்கும். அன்னையை வலம் வருவது, அங்கப்பிரதட்சணம் செய்வது, வேப்பஞ்சேலை அணிந்து வலம் வருவது, கூழ் ஊற்றுவது, பொங்கலிடுதல், அபிஷேகம் செய்தல் முதலான பிரார்த்தனைகள் தொடர்ந்து நடைபெறும். அந்நாட்கள் முழுவதும் கோவில் விழாக்கோலம் பூண்டிக்கும்.

    இத்திருக்கோவிலில் ஆடிப்பூர உற்சவம் சிறப்பாக நடத்தப்படுகிறது. அம்பிகை பிரபஞ்சத்தை சிருஷ்டிப்பதற்காக திரு அவதாரம் செய்த திருநாளே ஆடிப்பூரமாகும். ஆடிப்பூரம் உற்சவம் செய்வதால் ஊருக்கு நன்மையும், மழையும், நல்ல மகசூலும் அன்னை வழங்குவாள் என்பது நம்பிக்கை.

    நவராத்திரி

    நவராத்திரி என்பதற்கு ஒன்பது இரவு என்பது பொருள். புரட்டாசி மாதத்தில் அமாவாசைக்குப் பிறகு வரும் ஒன்பது நாட்களில் அன்னை பராசக்தியைப் பல வடிவாகப் பூசித்து விழா நடத்துவது நவராத்திரி விழாவாகும். பத்தாம் நாளை விஜயதசமி விழாவாக கொண்டாடுகிறோம்.

    பராசக்திக்கு ஏற்பட்ட பெருவிழாவே நவராத்திரியாகும். முதல் மூன்று நாட்கள் வெற்றியை நல்கும் மலைமகளுக்கும், அதன்பின்னர் மூன்று நாட்கள் செல்வத்தைக் கொடுக்கும் திருமகளுக்கும், கடைசி மூன்று நாட்கள் கல்வியைக் கொடுக்கும் கலைமகளுக்கும், பத்தாம் நாளன்று எல்லாக் கலைகளுக்கும் தலைவியாம் சகலகலாவல்லிக்கும் விழாவெடுப்பதே நவராத்திரி விழாவாகும்.

    நவராத்திரி விழாவின்போது, இத்திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் அன்னை முண்டகக் கண்ணி பார்வதி, கவுரி, சரஸ்வதி, பத்மாசினி, மீனாட்சி, மகேஸ்வரி, ராஜராஜேஸ்வரி, சிவபூஜா கம்பாநதி, கஜலட்சுமி தோற்றங்களில் எழுந்தருளி காட்சி தருவாள்.

    நவராத்திரியில், தினசரி பகல் 12 மணிக்கு அபிஷேகம், மாலை 7 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரமும், ஆபரண அலங்காரமும், தூப தீப தீப ஆராதனையும் நடைபெறும்.

    பத்தாம் நாள் விஜயதசமியன்று இரவு, அன்னை முண்டகக் கண்ணி மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்தில் வெள்ளி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி திருவீதியுலா வருவாள். சிறப்பு மேள வாத்தியத்துடன், ஓதுவாமூர்த்தி குழுவினரின் தேவார இன்னிசையுடனும் வீதியுலா நடைபெறும்.

    நவராத்திரி விழாவின்போது தினசரி இரவில் முன்னணிப் பாடகர்களின் இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறும். சமயச் சொற்பொழிவுகள் நடைபெறும். நவராத்திரி கடைசி மூன்று தினங்களில் லட்சார்ச்சனை நடைபெறும்.

    சித்ரா பவுர்ணமி பால்குட விழா

    சித்திரை மாதம் கடும்கோடை காலம், அன்னையோ குளிர்ச்சியுடையவள்; எப்போதும் குளிர்ச்சியை நாடுபவள், தன்னை சூழ்ந்த பக்த கோடிகளுக்கு அம்மை நோய் வராமல் காப்பவள்.

    அன்னைக்கு 1986-ம் ஆண்டில் சித்ரா பவுர்ணமி அன்று 108 பால்குட விழா எடுத்து பக்தர்கள் பாலாபிஷேகம் செய்தனர். அன்று முதல் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும், சித்ரா பவுர்ணமி அன்று பால்குட விழா சிறப்பாக நடத்தப்படுகிறது. 1992-ம் ஆண்டில் சித்ரா பவுர்ணமி அன்று 508 பால்குட விழாவாக நடைபெற்றது. அது அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகரித்தப்படி உள்ளது.

    சித்ரா பவுர்ணமி அன்று காலை 8 மணியளவில் ஆண்களும் பெண்களுமாக பக்த கோடிகள் பால்குடம் சுமந்து கோவில் இருந்து புறப்பட்டு அம்மன் வீதியுலா செல்லும் மாடவீதி வழியாக வலம் வந்து கோவில் வந்தடைந்து அன்னைக்கு பால்குட அபிஷேகம் நடைபெறும்.

    அன்றிரவு சிறப்பு மேளம், பேண்டு வாத்தியத்துடன் அன்னை வெள்ளி சிம்ம வாகனத்தில் வீதியுலா வருவாள். அன்னைக்குப் பாலாபிஷேகம் செய்வோர் ஆயுள் விருத்தி பெறுவார்கள் என்பது நம்பிக்கை. பால்குடம் எடுத்து அன்னைக்கு அபிஷேகம் செய்வோர், நீண்ட ஆயுளும், ஆராக்கியமும், செல்வமும், எல்லா நலன்களும் பெற்று நீடுழிவாழ்வார்கள்.

    • வாணவேடிக்கையோடு ஸ்ரீஅபிராமி எழுந்தருளினார்.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி உடனுறை அமிர்தகடே ஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நிகழாண்டு ஆடிப்பூர திருவிழா கடந்த 13 ஆம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் வீதி உலா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இதனைத் தொடர்ந்து 9 ஆம் நாள் நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெற்றது . பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் மேளதாளங்கள் முழங்க வாணவேடிக்கையோடு ஸ்ரீஅபிராமி எழுந்தருளினார். இதனையடுத்து மேல வீதியில் இருந்து தேர் புறப்பட்டு வடக்கு வீதி, கீழவதி, தெற்கு வீதி வழியாக வலம் வந்து மீண்டும் மேலவீதியில் நிலையை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    இதில் தி.மு.க. செம்பை மத்திய ஒன்றிய செயலாளர் அமுர்த விஜயகுமார், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ், தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் செந்தில், கட்டளை தம்பிரான் சாமிகள், கோவில் கண்காணிப்பாளர் மணி, உள்துறை கண்கா ணிப்பாளர் விருத்தகிரி, கோவில் காசாளர் களியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மீனாட்சி அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்தனர்.
    • மீனாட்சி அம்மன் கமல வாகனத்தில் வலம் வருவது வழக்கம்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் 3-ம் நாளான நேற்று ஆடிப்பூரத்தன்று மூலஸ்தானம், உற்சவம் மீனாட்சி அம்மனுக்கு உச்சிகால பூஜையில் ஏற்றி, இறக்குதல் வைபவமும் நடந்தது. அப்போது அம்மனுக்கு வளையல், திருமாங்கல்ய கயிறு, குங்குமம் வைத்து அர்ச்சனை செய்தனர். பின்னர் அதனை பக்தர்களுக்கு பட்டர்கள் வழங்கினார்கள்.

    ஆடிபூரத்தன்று பல ஆண்டுகளுக்கு முன்பு மீனாட்சி அம்மன் கமல (தாமரை பூ) வாகனத்தில் வலம் வருவது வழக்கம். மரக்கட்டையால் செய்யப்பட்ட அந்த வாகனம் நாளடைவில் பழுதடைந்தது. எனவே அந்த வாகனத்தில் அம்மன் வலம் வருவதற்கு பதில் வேறு வாகனத்தில் வலம் வந்ததாக கூறப்படுகிறது.

    இதை அறிந்த வக்கீல் ஒருவர் அம்மனுக்கு புதிதாக கமல வாகனம் செய்து கொடுத்தார். அந்த வாகனம் நேற்று காலை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. ஸ்தானிக பட்டர்கள் ஹாலஸ், செந்தில் சிறப்பு பூஜை செய்த பின்பு புதிய வாகனம் வெள்ளோட்டம் நடந்தது. இந்த நிகழ்வில் கோவில் இணை கமிஷனர் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதை தொடர்ந்து இரவு வீதி உலாவில் மீனாட்சி அம்மன் அந்த புதிய கமல வாகனத்தில் எழுந்தருளி பக்தர்கள் மத்தியில் பவனி வந்து காட்சி அளித்தார்.

    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    • இக்கோவில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரால் தேவாரபாடல் பெற்றது.

    மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில் பிரசித்திபெற்ற நீலிவனநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரால் தேவாரபாடல் பெற்றது.

    இதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும், சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக விசாலாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காலை 6.10 மணிக்கு தேரில் எழுந்தருளினார்.

    அதைத்தொடர்ந்து மதியம் 3.10 மணிக்கு மேள, தாளங்கள் முழங்க திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.தேர், தேரோடும் வீதி வழியாக வலம் வந்து மாலை 5.10 மணிக்கு நிலையை அடைந்தது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவிஆணையர் லட்சுமணன் மேற்பார்வையில், கோவில் செயல் அலுவலர் மனோகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர். மண்ணச்சநல்லூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • வேள்வி பூஜையுடன் ஆடிப்பூர விழா கோலாகலமாக தொடங்கியது.
    • பக்தர்கள் சுயம்பு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யவுள்ளனர்.

    மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 52-ம் ஆண்டு ஆடிப்பூர விழா நேற்று முன்தினம் மங்கள இசையு டன் ஆதிபராசக்தி அம்மனுக்கு அலங்கா ரத்துடன் தீபாராதனை செய்து வேள்வி பூஜையுடன் ஆடிப்பூர விழா கோலாகலமாக தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நேற்று காலை 6 மணி அளவில் கஞ்சி வார்ப்பு நிகழ்ச்சி சித்தர் பீட வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர் செந்தில்குமார் கலந்து கொண்டு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியை பக்தர்களுக்கு கஞ்சி கலயங்கள் வழங்கி தொடங்கி வைத்தார். இதில் பல லட்சம் பக்தர்கள் கஞ்சி கலயங்களை கையில் சுமந்தபடி சென்று கருவறை முன்பாக ஆதிபராசக்தி அம்மனை வழிபட்டு பின்னர் பள்ளி வளாகத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த கொப்பரை பாத்திரத்தில் ஊற்றினர். அது சமத்துவ கஞ்சியாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    காலை 9 மணி அளவில் அன்னதான பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியை ஆதி பராசக்தி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரமேஷ் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து 10 மணி அளவில் ஆதிபராசக்தி சித்தர் பீடம் வந்திருந்த ஆன்மிக குரு பங்காரு அடிகளாருக்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர்கள் பாத பூஜை செய்து வரவேற்றனர்.

    இதனைத் தொடர்ந்து 10.15 மணியளவில் ஆதிபராசக்தி கருவறை முன்பு இருக்கும் சுயம்பு அம்மனுக்கு ஆன்மிக குரு பங்காரு அடிகளார் பால் அபிஷேகம் செய்து விழாவை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ரெயில்வே பொது மேலாளர் ஜெயந்த், முன்னாள் தமிழ்நாடு தேர்வாணைய தலைவர் அருள்மொழி, முன்னாள் நீதிபதி முருகேசன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

    ஆடிப்பூர தினமான இன்று சனிக்கிழமை காலை 3 மணி அளவில் ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கருவறை முன்பாக உள்ள சுயம்பு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யவுள்ளனர்.

    நிகழ்ச்சிகளில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக இயக்க துணைத் தலைவர்கள் கோ.ப.அன்பழகன், வேளாண்மை கல்லூரி தாளாளர் உமா தேவி ஜெய்கணேஷ், செவிலியர் கல்லூரி தாளாளர் ஸ்ரீலேகா செந்தில் குமார், டாக்டர் மதுமலர், வழக்கறிஞர் அகத்தியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத்தலைவர்கள் கோ.ப.செந்தில்குமார், ஸ்ரீதேவி ரமேஷ் வழிகாட்டு தலில் இயக்கத்தின் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மன்றங்கள் மற்றும் சக்திபீடங்களை சார்ந்த தொண்டர்களை ஒருங்கிணைத்து மாவட்ட தலைவர்கள் கிருஷ்ண மூர்த்தி, சரஸ்வதி, சதாசிவம் ஆகியோர் செய்திருந்தனர்.

    • உற்சவ அம்மனுக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும் சிவபெருமானுக்கும் பால் தயிர், சந்தனம், மஞ்சள், குங்குமம், விபூதி, இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்டவைகளாலும், வாசனை திரவியங்களாலும் அபிஷேகமும், தங்க கவச அலங்காரமும் நடந்தது.

    மேலும் ஒரு லட்சத்து ஒன்று வளையல்களாலும், உற்சவ அம்மனுக்கு 2 லட்சத்து 51 ஆயிரம் வளையல்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத்தலைவர் சந்தானம் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • மாலை மாற்றுதல் நிகழ்ச்சிக்காக கோவில் நடை திறப்பில் நாளை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • தீர்த்த கிணறுகளில் புனித நீராடவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

    top

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆடி திருக்கல்யாண விழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    திருவிழாவின் 11-ம் நாளான நாளை காலை 6 மணிக்கு அம்மன், வெள்ளி கமல வாகனத்தில் ராமர் தீர்த்தம் அருகே உள்ள தபசு மண்டகப்படிக்கு செல்கிறார். பகல் 11 மணிக்கு ராமநாத சுவாமி தங்க ரிஷப வாகனத்தில் தபசு மண்டகபடிக்கு எழுந்தருள்கிறார். பிற்பகல் 2 மணியில் இருந்து 3 மணிக்குள் சுவாமி-அம்பாள் தபசு மண்டகப்படியில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு அனுமன் சன்னதியில் நிச்சயதார்த்தமும் நடக்கிறது. நாளை மறுநாள் இரவு 7.30 மணியிலிருந்து 8.30 மணிக்குள் சிகர நிகழ்ச்சியாக சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடக்க இருக்கிறது.

    மாலை மாற்றுதல் நிகழ்ச்சிக்காக கோவில் நடை திறப்பில் நாளை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 3 மணி முதல் 3.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும். தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்று காலை 6 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.

    பின்னர் தபசு மண்டகபடியில் சுவாமி-அம்பாள் மாலை மாற்றுதல் முடிந்து கோவிலுக்கு வந்தடைந்த பின்னர் மீண்டும் மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். எனவே நாளை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கோவிலில் தரிசனம் செய்யவும் தீர்த்த கிணறுகளில் புனித நீராடவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • நாளை சுவாமி-அம்பாள் நிச்சயதார்த்தம் நடக்கிறது.
    • 24-ந்தேதி சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது.

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி திருக்கல்யாண திருவிழா மற்றும் மாசி மகா சிவராத்திரி திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆடி திருக்கல்யாண விழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவின் 9-ம் நாளான நேற்று அம்மன் தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி பர்வதவர்த்தினி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில், கோவிலின் கிழக்கு வாசல் எதிரே தேரில் எழுந்தருளினார்.

    இதை தொடர்ந்து விநாயகர், சண்டிகேசுவரர் தேர்களையும், அம்மன் தேரையும் பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். கோவிலின் இணை ஆணையர் மாரியப்பன், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன் தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். அம்மன் தேரை உள்ளூர் மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்தும் வந்திருந்த திரளான பக்தர்கள் பக்தி கோஷங்களுடன் இழுத்தனர். காலை 10.20 மணிக்கு கிழக்கு வாசல் பகுதியில் இருந்து புறப்பட்ட அம்மன் தேர், பக்தர்கள் வெள்ளத்தில் வந்தது. மதியம் 12 மணிக்கு நிலையை அடைந்தது. ஏராளமான பக்தர்கள் தேரில் வீற்றிருந்த பர்வதவர்த்தினி அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

    நேற்று இரவு 8 மணிக்கு அம்மன், வெள்ளி கிளி வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருவிழாவின் 10-ம் நாள் நிகழ்ச்சியாக இன்று காலை 9 மணிக்கு அம்மன் தங்க பல்லக்கில் காட்சி தருகிறார். மதியம் 12 மணிக்கு கோவிலில் உள்ள சிவதீர்த்தத்தில் அம்மன் மஞ்சள் நீராடல் மற்றும் பூரம் தொழுதல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    11-ம் நாளான நாளை காலை 6 மணிக்கு அம்மன், வெள்ளி கமல வாகனத்தில் ராமர் தீர்த்தம் அருகே உள்ள தபசு மண்டகப்படிக்கு செல்கிறார். பகல் 11 மணிக்கு ராமநாத சுவாமி தங்க ரிஷப வாகனத்தில் தபசு மண்டகபடிக்கு எழுந்தருள்கிறார். பிற்பகல் 2 மணியில் இருந்து 3 மணிக்குள் சுவாமி-அம்பாள் தபசு மண்டகப்படியில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு அனுமன் சன்னதியில் நிச்சயதார்த்தமும் நடக்கிறது. நாளை மறுநாள் இரவு 7.30 மணியிலிருந்து 8.30 மணிக்குள் சிகர நிகழ்ச்சியாக சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடக்க இருக்கிறது.

    • இந்த ஆண்டிற்கான ஆடிப்பூர விழா இன்று நடக்கிறது
    • அம்பாளுக்கு நெய்வேத்தியம் படைத்து சிறப்பு பூஜை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் "பூரம்"விழா விசேஷமாகும். ஒவ்வொரு ஆண்டும ஐப்பசி மாதத்தில் ஐப்பசி பூரம் விழாவும், ஆடிமாதத்தில் ஆடிப்பூர விழாவுமாக ஒரு ஆண்டிற்கு 2 பூர விழா கொண்டாடப்படுகிறது. ஐப்பசி பூர விழாவில் தெய்வானை அம்பாளும், ஆடிப்பூர விழாவில் கோவர்த்தனம்பிகையும் எழுந்தருளி நகர் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.

    இந்த ஆண்டிற்கான ஆடிப்பூர விழா இன்று நடக்கிறது. விழாவையொட்டி மாலை 6.30 மணியளவில் மேளதாளங்கள் முழங்க கோவிலுக்குள் உள்ள உற்சவர் சன்னதியில் இருந்து திருவாட்சி மண்டபத்திற்கு சர்வ அலங்காரத்தில் கோவர்த்தனாம்பிகை எழுந்தருளுகிறார். அங்கு கோவர்த்தனாம்பிக்கைக்கு நெய்வேத்தியங்கள் படைத்து சிறப்பு பூஜையும், தீபாராதனையும் நடக்கிறது.

    பின்னர் திருவாட்சி மண்டபத்தில் அம்பாள் புறப்பட்டுநகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கடந்த காலங்களில் ஆடிப்பூரத்தன்று உற்சவர் சன்னதியில் இருந்து அம்பாள் புறப்பட்டு நேரடியாக நகர் உலா வந்து அருள்பாலித்தார். ஆனால் இந்த ஆண்டில் முதல்முறையாக உபயதாரர் மூலமாக திருவாட்சி மண்டபத்தில் மண்டகப்படி அமைத்து அம்பாளுக்கு நெய்வேத்தியம் படைத்து சிறப்பு பூஜை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    ×