search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AAP-Congress Alliance"

    • புதிய தேர்தலை நடத்தும் கோரிக்கையை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
    • ஒரு ரிடர்னிங் ஆஃபீசர் இவ்வாறு நடக்கலாமா என நீதிபதி சந்திரசூட் கேள்வி எழுப்பினார்

    கடந்த ஜனவரி 30 அன்று சண்டிகர் நகரசபை தேர்தல் நடந்தது.

    அந்த தேர்தலில் பெரும் முறைகேடுகள் நடந்ததாக பா.ஜ.க. மற்றும் ஆம் ஆத்மி-காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் ஒருவரையொருவர் கண்டித்து போராட்டங்களை நடத்தினர்.

    பா.ஜ.க. வேட்பாளர் மனோஜ் சோங்கர் 16 ஓட்டுகள் பெற்றதாகவும், ஆம் ஆத்மி-காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளர் குல்தீப் சிங்கிற்கு ஆதரவாக 20 கவுன்சிலர்கள் இருந்த போதும் 12 வோட்டுகளே பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.

    20 கவுன்சிலர்கள் இருந்தும் ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்தது.

    முறைகேடுகளை சுட்டிக்காட்டி புதிய தேர்தல் நடத்த உத்தரவிடுமாறு வைக்கப்பட்ட கோரிக்கையை பஞ்சாப்/அரியானா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சியின் கவுன்சிலர் குல்தீப் சிங் வழக்கு தாக்கல் செய்தார். அவர் சார்பில் பிரபல வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார்.

    இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான 3-பேர் கொண்ட அமர்வு பெஞ்ச் அளித்த உத்தரவில், தேர்தல் அதிகாரி அனில் மசிஹ் (Anil Masih) கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

    அந்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:

    வாக்கு சீட்டை தேர்தல் கண்காணிப்பாளர் முறைகேடாக அழித்துள்ளது வெளிப்படையாக தெரிகிறது. அவர் தண்டனைக்குரிய குற்றத்தை புரிந்துள்ளார். அவர் ஜனநாயக படுகொலையில் ஈடுபட்டுள்ளார். ஒரு "ரிடர்னிங் ஆஃபீசர்" (Returning Officer) இவ்வாறு நடந்து கொள்ளலாமா?

    உச்ச நீதிமன்றம் பார்த்து கொண்டுதான் இருக்கிறது. ஜனநாயக படுகொலை நடைபெற நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

    ஜனநாயகத்தின் மாசற்ற தூய்மைதான் இந்த நாட்டை வழிநடத்தும் சக்தி.

    இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று, உச்ச நீதிமன்றம் பஞ்சாப்/அரியானா உயர் நீதிமன்ற பதிவாளர் மூலமாக சண்டிகர் மேயர் தேர்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யுமாறு கோரியுள்ளது.

    மேலும், இந்த உத்தரவில் வரும் பிப்ரவரி 7 அன்று நடைபெற இருந்த சண்டிகர் உள்ளாட்சி அமைப்பின் கூட்டங்களையும் ஒத்தி வைக்க உத்தரவிட்டது.

    ×