search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agatheeswarara"

    • அகத்தீஸ்வரர் கிழக்கு நோக்கி தரிசனம் தருகிறார்.
    • ஆனந்தவல்லி அம்பாளின் திருமேனி பச்சை மரகதத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து வடமேற்கில் சுமார் 28 கீ.மீ தொலைவில் கொல்கத்தா நெடுஞ்சாலையில் பஞ்சேஷ்டி பேருந்து நிலையம் உள்ளது. பேருந்து நிறுத்தத்திலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் சாலையில் 200 மீட்டர் தொலைவில் தெற்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் கூடிய "பஞ்சேஷ்டி" திருக்கோயில் அமைந்துள்ளது.

    திருக்கோவிலின் மூலவருக்கு அகத்தீஸ்வரர் என்று பெயர். இச்சிவலிங்கம் ஓர் சுயம்பு லிங்கம். அகத்தியர் இத்தலத்திற்கு வரும் முன்பு இச்சிவலிங்கம் இங்கு அமைந்திருந்தது.

    எனினும் அகத்தியர் வழிபட்டதால், அகத்தீஸ்வரர் என்று பெயர் பெற்றது. அகத்திய முனிவர் இச்சிவலிங்கத்தின் இடது பாகத்தில் அம்பாள் மனோன்மணி சக்தியை அரூபமான தோற்றத்தில் வைத்து, சிவசக்தி ரூபமாக பூஜித்துள்ளார்.

    அகத்தீஸ்வரர் கிழக்கு நோக்கி தரிசனம் தருகிறார். அம்பாள் ஆனந்தவல்லி தாயார் முக்கண் நாயகி உருவத்திலேயே மூன்று கண்களை கொண்ட அம்பாள் ஆனந்தவல்லி தெற்கு நோக்கி தரிசனம் தருகிறார். ஆனந்தவல்லி அம்பாளின் திருமேனி பச்சை மரகதத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இடது பாதம் முன் வைத்த தோற்றமாகக் காட்சியளிப்பது இத்தலத்தின் சிறப்பாகும்.

    பொதுவாக வலது காலை முன்வைத்து வா என்று அழைப்பதே வழக்கம். ஆனால், ஆனந்தவல்லி அம்பாள், அகத்திய முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது யாகங்களுக்கு இடையூறு செய்ய வந்த அசுர சக்திகளை அழிக்க, தன் இடது பாதத்தை முன்வைத்து, மூன்று கண்களைக் கொண்டு அசுர சக்திகளையும், தீய சக்திகளையும் அழித்ததால் இங்கு சத்ரூ சம்ஹார கோலத்தில் காட்சி தருகிறார்.

    தீய சக்திகளை அழிக்கும் பொருட்டு அம்பாள் தன்னுடைய இடது பாதத்தை முன்வைத்துச் சென்ற கோலத்தில் காட்சி தருகிறார். எனவே, இத்தலத்து அன்னை சத்ருசம்ஹாரியாக திகழ்கிறாள். இச்சத்ருசம்ஹாரியை வழிபாடு செய்தால் தீய சக்திகளின் தொல்லைகள் இருக்காது. செயல்களில் தடங்கல்கள் இருக்காது.

    ×