search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alandur water work"

    ஆலந்தூரில் குடிநீர் பணிகளை மேற்கொள்ள விடுபட்ட 82 தெருக்களுக்கு ரூ.13 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.

    சென்னை:

    ஆலந்தூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் தா.மோ. அன்பரசன் சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குனரை நேற்று நேரில் சென்று சந்தித்தார்.

    அப்போது ஆலந்தூர், முகலிவாக்கம், மணப்பாக்கம் பகுதிகளில் விடுபட்ட பகுதிகளுக்கு மெட்ரோ குடிநீர் கிடைக்க நிதி ஒதுக்குமாறு வலியுறுத்தினார்.

    ஆலந்தூர் பகுதியில் ரூ.66 கோடி செலவில் மெட்ரோ குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்ட போது அங்குள்ள 160,161,162, 164,165,166 ஆகிய வட்டங்களில் உள்ள 82 தெருக்களிலும் மெட்ரோ குடிநீர் பணிகள் செயல்படுத்தப்படாமல் விடுபட்டுள்ளதை சுட்டிக் காட்டினார்.

    இது பற்றி சட்டமன்றத்தில் ஏற்கனவே பேசியதாகவும், அமைச்சர் இதை நிறைவேற்றி தருவதாக கூறியதையும் சுட்டிக்காட்டினார்.

    விடுபட்ட 82 தெருக்களிலும் குடிநீர் பணியை மேற்கொள்ள ரூ.13 கோடியே 71 லட்சம் அளவுக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு நிதி ஒதுக்காமல் உள்ளதால் விரைந்து நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

    ஆலந்தூரில் குடிநீர் பிரச்சினையை போக்க நெம்மேலி கடல் குடிநீரையும் வழங்குமாறு வலியுறுத்தினார்.

    இதே போல் மணப்பாக்கம், முகலிவாக்கம் பகுதிகளில் உள்ள 156,157 ஆகிய வட்டங்கள் சென்னை மாநகராட்சியோடு இணைக்கப்பட்டு 7 ஆண்டு ஆகியும் மெட்ரோ குடிநீர் இணைப்பு வழங்காமல் உள்ளதை சுட்டிக்காட்டியதுடன் அங்கும் மெட்ரோ குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யும் படி கேட்டுக் கொண்டார்.

    ஆதம்பாக்கம் பாலாஜி நகரில் 96- 2001-ம் ஆண்டில் அமைக்கப்பட்ட கழிவு நீர் வெளியேற்றும் நிலையத்தின் திறன்- குடியிருப்பு பகுதி அதிகரித்ததால் போதிய திறன், சக்தி இல்லாமல் உள்ளது.

    எனவே கூடுதலாக ஒரு வெளியேற்றும் நிலையம் அமைத்து தர வேண்டும் என்றும், 156,157,158 ஆகிய வட்டங்களில் பாதாள சாக்கடை வசதிகளை அமைத்து தருமாறும் கேட்டுக் கொண்டார்.

    இது தொடர்பாக தனித் தனியாக 5 கோரிக்கை மனுக்களையும் வழங்கினார்.

    ×