என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "anmiga kalanjiyam"
- சோலைகள் சூழ்ந்த திருக்காளத்தியில் ஈசன் கோயில் கொண்டிருக்கிறார்.
- திண்ணனார் வில்வித்தையில் பதினாறு ஆண்டுகளுக்குள் சிறந்த பயிற்சி பெற்றார்.
சந்தன மரமும், அகில் மரமும், நல்ல தேக்கு மரமும் பொருந்தி விரைந்து செல்லுகின்ற பொன்முகலியாற்றின் கரையில் உமாதேவியாரோடு மணமிக்க சோலைகள் சூழ்ந்த திருக்காளத்தியில் ஈசன் கோயில் கொண்டிருக்கிறார்.
அதன் அருகில் உள்ள பொத்தப்பி நாட்டின் தலைநகர் உடுப்பூர், நாகன் அதை ஆண்டு வந்தான். நாகனும், அவன் மனைவி தத்தையும் மகப்பேறின்றி வருந்தினர். முருகப்பெருமானை வழிபட்டனர். ஓர் ஆண் குழந்தை பிறந்தது.
திண் என்று இருந்தமையால் அவனுக்குத் திண்ணன் என்று பெயரிட்டனர். உரிய வயதில் வேட்டைத் தொழிலில் திண்ணன் நல்ல பயிற்சி பெற்றார். திண்ணனார் வில்வித்தையில் பதினாறு ஆண்டுகளுக்குள் சிறந்த பயிற்சி பெற்றார். தந்தை தன் மகனுக்குப் பட்டம் கட்டினார். திண்ணனார் அரசர் ஆனதும் வேட்டையாட சென்றார்.
ஒரு பன்றியைச் துரத்திக் கொண்டு நெடுதூரம் சென்றார். அவருடைய தோழர்களாகிய நாணனும் காடனும் உடன் சென்றனர். கடைசியில் பன்றியைக் கொன்றார். பன்றியைத் தூக்கிக் கொண்டு பொன்முகலியாற்றை நோக்கிச் சென்றனர்.
திண்ணனார் மலை மீதுள்ள தேவரை நோக்கினார். அவர் உடம்பில் இருந்து ஏதோ பாரம் குறைவது போன்ற உணர்வு தோன்றியது. பன்றியைச் சுட்டுப்பதம் செய்யுமாறு காடனிடம் சொல்லிவிட்டு நாணனுடன் மலை மீது ஏறினார்.
இறைவனைக் கண்டார், உடல் புளங்காகிதம் அடைந்தது. இறைவனைக் கட்டித் தழுவினார். அய்யோ தனியாக உள்ளீரே என்று வருந்தினார்.
இறைவன் மீதுள்ள நீரும், பூவும் எப்படி வந்தன...? என்று நாணனிடம் கேட்டறிந்தார். தானும் அவ்வாறே செய்ய வேண்டுமென்ற முடிவுக்கு வந்தார்.
இவர் கொண்ட முடிவை நாணனும், காடனும் விரைந்து சென்று பெற்றோர்க்குத் தெரிவித்தனர். அவர்கள் வந்து திருத்த முயன்றும் பயனில்லை.
திண்ணனார் கீழே இறங்கி வந்து பன்றியின் இறைச்சியை தீ அனலில் இட்டு பதப்படுத்தினார். தேக்கிலையில் அதை வைத்துக் கொண்டார்.
திருமஞ்சனத்திற்கு வேண்டிய நீரை வாயில் குடித்து தேக்கி வைத்து கொண்டார்.
பூக்களைத் தலைமுடியில் சொருகிக் கொண்டார். மேலே சென்று லிங்கத்தின் மேலிருந்த பூக்களைத் தன் காலால் அப்புறப்படுத்தினார். வாயில் இருந்த நீரால் அபிஷேகம் செய்தார்.
சுவையான இறைச்சியை ஊட்டினார். விருப்புடன் இறைவனும் உண்டார். இவ்வாறு ஐந்து நாட்கள் பூஜை நடைபெற்றது. திண்ணனார் வேட்டையாட சென்ற சமயத்தில் ஈசனுக்கு பூஜை வைக்கும் சிவச்சாரியார் அங்கு வந்தார்.
இறைவன் மீதுள்ள இறைச்சி துண்டுகளை அப்புறப்படுத்துவார். முறைப்படி வழிபாடு செய்து செல்வார். ஐந்தாம் நாள் இரவில் சிவச்சாரியார் கனவில் இறைவன் தோன்றி திண்ணனாரின் மெய்யன்பினைப் பற்றிக் கூறினார்.
மறுநாள் மறைந்திருந்து பார்க்கும்படி பணித்தார். ஆறாம் நாள் திண்ணனார் வழக்கம்போல் ஊனும், நீரும், மலரும் கொண்டு வந்தார். இறைவன் வலக்கண்ணில் ரத்தம் வழியக்கண்டார். அவர் நெஞ்சம் பதைபதைத்தார்.
ரத்தத்தை துடைத்தார். ரத்தம் நின்றபாடில்லை. பச்சிலையைக் கொண்டு வந்து சாறு பிழிந்து தடவினார். ரத்தம் பெருகிக் கொண்டேயிருந்தது. ஊனுக்கு ஊனிடல் வேண்டும் என்ற நியதி அவர் நினைவுக்கு வந்தது.
உடனே தன் கண்ணை அம்பினால் பெயர்த்து எடுத்து சிவபெருமானின் கண்ணில் அப்பினார். என்னே ஆச்சரியம் ரத்தம் நின்றது. மனநிறைவு கொண்டார். மகிழ்ந்தார். சற்று நேரத்திற்குப் பின் இடக்கண்ணில் ரத்தம் பெருகத் தொடங்கியது.
வைத்திய முறை தெரிந்து விட்டபடியால் இப்போது அவர் வருந்தவில்லை. அடையாளம் தெரிவதற்காக இறைவனது இடது கண்ணில் தன் செருப்புக் காலை ஊன்றிக் கொண்டு தன் இடது கண்ணை அம்பினால் பெயர்த்து எடுக்க முயன்றார்.
இறைவன் துணுக்குற்று தமது கையினால் திண்ணனார் கையைப் பிடித்துக் கொண்டு `நில்லு கண்ணப்பா' என்று தடுத்து நிறுத்தினார். ``என் வலது பக்கத்தில் நீ என்றும் நிலைத்திருப்பாயாக'' என அருளினார். இன்றும் திருக்காளத்திக்குச் செல்பவர்கள் கண்ணப்ப நாயனார் உயர்ந்த கற்சிலையாகக் கம்பீரமாய் நிற்பதைக் காணலாம். அன்று முதல் கண்ணப்பர் 63 நாயன்மார்களுள் ஒருவரானார். இவருடைய வரலாற்றை சேக்கிழார் பெருமான் தமது பெரிய புராணத்துள் 186 பாடல்களாகப் பாடி மகிழ்ந்துள்ளார்.
- பூதகணங்களின் தலைவியாக விளங்குபவள் காளி.
- மேற்கு வாயிலில் நாம் 101 லிங்கங்கள் இருப்பதினைக் காண முடியும்.
திருக்காளத்தி என்று இத்தலத்துக்கு பெயர் வந்தது மிகவும் சுவை ததும்பும் வரலாறு ஆகும். இங்கிருக்கும் சிவலிங்கத்திற்கு அருகே சிலந்தி ஒன்று வலையைப் பின்னி இருந்தது. இது சிவலிங்கத்திற்கு ஒரு பந்தலைப் போல காட்சியளித்தது.
தீப்பட்டு அந்த பந்தலானது அறுந்துப் போகாத வகையில் அவ்வப்போது பந்தலினை அந்த சிலந்தி புதுப்பித்துக் கொண்டே அந்த சிலந்தி செய்து வந்தது.
ஆனாலும் ஒரு சமயத்தில் சிலந்தி அமைத்திருந்த பந்தல் தீக்கு இரையாகியது. ஆனாலும் சிலந்தி அதிலிருந்து மீண்டது. பிறகு முக்தி பெற்றது.
அதே காலக்கட்டத்தில் காளன் என்கிற நாகம் ஒன்று இருந்தது. இது யாரையும் கடிப்பது கிடையாது. இது நதமது நஞ்சினை வீணாகாது காத்து அதனை நாகமணியாக திரளச் செய்தது. இந்த நாகமணியை சிவலிங்கத்தின் மீது உமிழ்ந்துத் திருப்பணியை மேற்கொண்டு வந்தது.
அங்கே அந்தி என்கின்ற சிவகணத் தலைவர் ஒருவன் யானையாக அவதாரம் செய்திருந்தான். இந்த யானை பொன் முகலியை கொண்டு வந்து திருக்காளத்தியப்பனுக்கு தம்முடைய துதிக்கையினால் திருமஞ்சனம் செய்து வந்தது. அதோடு பூவையும் சூட்டி மகிழ்ந்துது வந்தது. இது தூய வழிபாட்டு முறையாக காளன் என்கிற பாம்பிற்கு தோன்றவில்லை.
இதனால் நாகத்திற்கு கோபம் உண்டானது. ஒருநாள் யானையின் துதிக்கையில் நுழைந்து அதற்கு துன்பத்தினை தந்தது. இதனால் கோபம் கொண்ட யானை பாம்பினை சுற்றி தரையிலே அடித்துக் கொன்றது. ஆனால் பாம்பு அதனை தீண்டியபோது இருந்த விஷமானது யானையையும் கொன்று போட்டது. இதையடுத்து அந்த யானை, பாம்பு இரண்டும் முக்தி அடைந்து பெருமை பெற்றன.
சிலந்தி, யானை, பாம்பு ஆகிய மூன்றும் முக்தி பெற்ற தலம் என்பதினால் இது சீகாளத்தித் தலமானது சீ என்பது சிலந்தியையும் காளன் என்பது பாம்பையும், அந்தி என்பது யானையையும் குறித்து வரும் சொல்லாகும். இத்தலத்தின் பெயர் இவ்வகையிலேயே உருவானது. இதனால் இந்த தலத்தினை வணங்குகின்றவர்கள் வீடுபேற்றினை அடைவார்கள்.
கோவில் அமைப்பு
ஸ்ரீ காளஹஸ்தி கோவிலில் பல கல்வெட்டுக்கள் காணப்படுகின்றது. இவற்றிலே கோவில் வரலாறு மற்றும் திருப்பணி செய்யப்பட்ட செய்திகளை காணலாம்.
இங்குள்ள வாயில் மாடத்திலே கணபதியும், முருகனும் காட்சி தருகின்றார்கள். இதனையடுத்து விசுவநாதர் ஆலயமும், விசாலாட்சி ஆலயமும் காணப்படுகின்றது.
இதனையடுத்து தேவிமாடம் ஒன்று காணப்படுகின்றது.இங்குள்ள மற்றொரு முக்கியமான சந்நிதி பால கணகம்பாள் சந்நிதியாகும். பாலா என்பது அம்பிகையின் பெயராகும். பூதகணங்களின் தலைவியாக விளங்குபவள் காளி ஆவாள். இவ்விரண்டு பெயர்களும் சேர்ந்தே பாலகணகம்பாள் என்று அழைக்கப்பட்டது.
இவர் வாயிலிலேயே கொலுவீற்றிருப்பது மிகவும் பொருத்தமான ஒன்றாகும். இதற்கு காரணம் இவள் ஆவுடையாரிடம் கோபம் கொண்டு இவ்வாறு தவமியற்றுகின்றாள் என்று கூறுவார்கள்.
இதையடுத்து பாதாள விநாயகர் சந்நிதி உள்ளது. மேற்கு பகுதி இக்கோவிலிலே முடிகின்றது. இதனை அடுத்து மண்டபம் காணப்படுகின்றது.
தெற்குப்புற பெருவழியில் ஒரு மேடைக் கோவில் உள்ளது. இந்த மேடைக் கோவிலில் சிவலிங்கம், கணபதி, பைரவர் உள்ளனர். இவை வலதுபுறமாக அமைந்துள்ளது.
இடதுபுறமாக சுவற்றிலே துளை போட்டுள்ளனர். அந்த துளையில் நாம் பார்க்கின்றபோது நந்தி பெருமானை பார்க்க முடிகின்றது. இதற்கு பிறகு மேடைக் கோவிலில் நாம் சோமநாதர் மற்றும் மீனாட்சியம்மை சந்நிதிகளை பார்க்கலாம்.
இதற்கு அடுத்தப்படியாக மயில்வாகனன் காணப்படுகின்றார். பிறகு நாம் பொன்முகலியை அடையக்கூடிய வாயிற்படியை பார்க்கலாம். இங்கு தமிழிலே அர்ச்சனை நடைபெறுகின்றது.
ராமநாதன் செட்டியார் என்பவர் இந்த கோவிலுக்கு பல அறப்பணிகளைச் செய்துள்ளார். இவருடைய சிலையானது இங்கே வைக்கப்பட்டுள்ளது.
இவருடைய இச்சந்நிதியை அடுத்து நாம் காண்பது சூரியநாராயண சுவாமி கோவில் ஆகும். இங்கு தலவிருட்சம் உள்ள பகுதியாக இது விளங்குகின்றது.
இங்கு பாம்புப பிரதிஷ்டைகள் அதிகம் உள்ளன. இங்கு மகிழமரம் ஒன்று பட்டுப்போய் உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சம் கல்லால மரமும், வில்வ மரமும் ஆகும்.
இதனையடுத்து நாம் பார்த்தால் பொன் முகலியாறு ஓடுவதைக் காணலாம். இது மற்றொரு பாலாறு எனக் கூறப்படுகின்றது. இந்த ஆற்றங்கரையில்தான் கண்ணப்பர் நடந்து வந்து இறைவனை வணங்கியதாக கூறுகின்றார்கள்.
பொன்முகலி ஆற்றங்கரைக்கு நாம் வந்து விட்டால் கண்ணப்பரை வணங்காமல் போகக்கூடாது. இந்த பொன்முகலி ஆறே புனிதக் கங்கையாக ஆகியது. இங்கு பல ஈஸ்வர அருளாளர்கள் நீராடி மகிழ்ந்து பக்திப் பரவசத்திலே ஆழ்நடதுள்ளார்கள் எனக் கூறுவது பொருந்தும்.
இந்த ஆற்று நீரினை எடுத்துத் தலையிலே தெளித்துக் கொள்வதால் நாம் புண்ணியம் அடைந்தவர்கள் ஆகின்றோம். ஈஸ்வரனின் பேரருளைப் பெற்றவர்கள் ஆகின்றோம்.
இங்குள்ள மேற்கு வாயிலில் நாம் 101 லிங்கங்கள் இருப்பதினைக் காண முடியும். லிங்கத்தினை வழிபட்டு 108 அர்ச்சனைகளை செய்ய முடியாதவர்கள் இங்கு வந்து இந்த லிங்கங்களை வணங்கினால் அந்தப் பலனை நிச்சயமாக அடைந்தவர்கள் ஆகின்றனர்.
இந்தக் கோவிலின் கிழக்குப் பகுதியிலே கொடிமரமும் பலிபீட லிங்கமும் உள்ளன. இங்கு விளக்குத் தூண் ஒன்று இருக்கின்றது. இது கொடி மரத்தினையும் விட மிகவும் உயரமாகக் காணப்படுகின்றது.
இங்கு ஒரு மேடை உள்ளது. எட்டுத் திசை யானைகள், பைரவர்கள், திக்குப் பாலகர்கள் ஆகியோரை இந்த மேடையிலே காணலாம். இந்த எட்டுத் திசைகளிலும் நந்தித் தேவர் இருப்பார். இவரை வணங்கிய பின்னரே நாம் காளத்தியப்பரை வணங்க வேண்டும்.
நந்தி பெருமானை திசைக் காவலர்களே சுமக்கின்றார்கள். எனவே இவரோடு நாம் இவர்களையும் சேர்த்து வணங்குதல் வேண்டும். இந்தத் திருத்தலமானது யோகத்திற்குரிய சிறப்புத் தலமாக பேசப்படுகின்றது. இங்கு ஆங்காங்கே பல மாடங்கள் இருக்கின்றன. இவ்விடங்களில் பெரிய யானைலிங்கங்களை காணலாம்.
கருவறையில் உள்ள சிவலிங்கமே காளத்திப்பர் எனப்படுகின்றர். இந்தக் கருவறையின் வாயிலிலே நாம் ஸ்ரீ சக்கரம் இருப்பதைக் காணலாம். இந்தக் கோவிலுக்கு காளிதேவியின் அருள் அதிகமாகவே உள்ளது. இவை பழைமை, சிறப்பு, தலைமை, சித்தி முதலிய பெருமையை பெற்று விளக்குகின்றன.
இங்கு மேலும் மணிகண்டேசர் கோவில் தனியாக உள்ளது. இங்கு இறந்தவர்களை எழுப்பி அவர்கள் காதுகளிலே மந்திரம் ஓதி அனுப்புகின்றார் இவர். இங்குள்ள பொன் முகலியாறு மணிக் கங்கை யெனவும், மணிகர்ணிகை எனவும் அழைக்கப்படுகின்றது. இந்தக் கோவிலின் உட்கோவிலான காசி விஸ்வநாதர் சந்நிதி பூட்டியே உள்ளது.
கண்ணப்பர் ஈஸ்வரருக்குக் கண்களைத் தந்த இடம் இந்த மலையின் உச்சியிலே உள்ளது. கண்ணப்பர் ஆலயத்தினை யடுத்து நாம் சித்தீஸ்வரம் காணுகின்றோம்.இதனையடுத்து ஒற்றை மண்டபக் கோவில் காணப்படுகின்றது.
இங்குள்ள யோக மூர்த்தம் அய்யப்பனின் உருவத்தினை போன்று விளங்குகின்றது. மேலும் தட்சிணாமூர்த்தி செங்கல்வராயர் சந்நிதிகள் உள்ளன.
இங்கு செப்பு நந்தி, சலவைக் கல் நந்தி ஆகியன உள்ளன.இங்குள்ள நந்திகள் முகம் பன்றியைப் போல காணப்படுகின்றது. இது பல்லவர்களின் சின்னமாகிய பன்றியை உணர்த்துகின்ற வகையில் அமைந்து உள்ளது. இங்கு பஞ்சமுகமான லிங்கம் உள்ளது.
இங்கு நமது மனத்தினை கவர்வது காளத்தியார் மூர்த்தம் ஆகும். இங்குள்ள பாணம் மிகவும் முக்கியமானது ஆகும். இது உலோகத்தினால் ஆன கலசத்தினைக் கொண்டு விளங்குகின்றது.
இங்கு கணபதி, பெருமாள், சப்தமுனிவர், சனிபகவான் போன்றோர் ஸ்தாபித்த பல லிங்கங்கள் உள்ளன. கனகதுர்க்க, கார்த்தியாயினி, உடுப்பி பாலசுப்பிரமணியம் ஆலயங்களும் உள்ளன.
இக்கோவில் ஆதிசங்கரர் விஜயம் செய்த தலமாகும். இங்கு காணப்படுகின்ற சண்டிகேசுவரர் சந்நிதி மிகவும் வெளிச்சமாகக் காணப்படுகின்றது.
தேவாரம், திருவாசகம், கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி, திருக்கண்ணப்ப தேவர் திருமறம், திருவருட்பா, திருப்புகழ், ஞானப்பூங்கோதையார் துதி போன்ற பாடல்கள் பெற்றது இத்திருத்தலம்.
- எமனுடைய சகோதரனான சனியும் காளத்தீஸ்வரரை வழிபட்டு பூஜித்தான்.
- பட்டல பைரவர் என்ற சன்னதியில் நூல் சாற்றுவது மரபு.
கால பைரவர் வழிபட்டுப் பூஜை புரிந்த லிங்கம் காசி லிங்கம் என்ற பெயருடன் உள்ளது. சப்தரிஷிகள் காளத்தீஸ்வரரைப் பூஜித்த பின்னர் லிங்கப் பரம்பொருளைப் பிரதிட்டை செய்து வழிபட்டனர். இவர்கள் பூஜை செய்த ஏழு லிங்கங்களும் மற்றும் எமன் பூஜை செய்த எமலிங்கமும் சித்திரகுப்தன் வழிபட்ட சித்திரகுப்த லிங்கமும் பிரகாரத்தில் உள்ளன. எமனுடைய சகோதரனான சனியும் காளத்தீஸ்வரரை வழிபட்டுப் பூஜித்தான்.
மார்கண்டேயர், அகத்தியர், வியாசர் போன்ற பலப்பல முனிவர்களும் வாயுநாதனை வழிபட்ட பிறகு லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.
இவர்கள் பூஜித்த லிங்கங்கள் மார்கண்டேய லிங்கம், அகத்திய லிங்கம், வியாச லிங்கம் என்ற திருநாமங்களுடன் விளங்குகின்றன. மகாபாரதம் எழுதத் தொடங்குவதற்கு முன்பு வியாசர் வழிபட்ட திருத்தரங்களில் திருக்காளத்தியும் ஒன்று. விஷ்ணுவின் அவதாரங்களான சீனிவாசன், ராமன், கண்ணன் ஆகியோர் காளத்தி ஞானப்பிரகாசத்தைப் பூஜித்துப் பேறு பெற்றுள்ளனர்.
சீனிவாசனும், வேணுகோபாலன் கோவிந்தராஜன் என்ற பெயர்களுடன் கண்ணனும் உள்ளனர். ராமன் பிரதிட்சை செய்து பூஜித்த லிங்கம் ராமச் சந்திரலிங்கம் என்ற திருநாமத்துடன் உள்ளது.
சீதை, அனுமன், பரதன் ஆகியோர் பிரதிஷ்டை செய்த லிங்கங்களும் ராமன் சீதை உருவங்களும் உள்ளன. ராமனுக்கு அருள் புரிந்த காளத்தீஸ்வரர் ராமேஸ்வர் என்ற திருப்பெயருடன் தனிச் சன்னதியில் உள்ளார். இந்த லிங்கம் வெண்மையாக உள்ளது.
பஞ்ச பாண்டவர்களில் மூத்தவனான தருமன் பிரதிட்டை செய்து பூஜித்த லிங்கம் தருமலிங்கம் என்ற பெயருடன் திகழ்கின்றது. மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களுக்கு உரிய ஆறு ஆதாரச் சக்கர லிங்கங்களும் ஐந்து முகம் கொண்ட பஞ்சானன லிங்கமும் பூஜை செய்வதற்கு மிகச் சிறப்பாக விளங்குகின்ற ஸ்படிக லிங்கமும் உள்ளன. பின்புறம் எரிந்து கொண்டிரக்கும் விளக்கினால் ஸ்படிக லிங்கத்தில் அடிமுடியில்லாத ஜோதி தரிசனம் கிடைக்கின்றது.
திருக்காளத்திக் கோவிலுக்குக் கல்லாலமரம், வில்வ மரம் ஆகியவை தலமரங்களாகவும் பொன்முகலி எனப்படும் ஸ்வர்ணமுகி நதி புனிதத் தீர்த்தமாகவும் விளங்குகின்றது. காளத்தி நாதர்த் திருக்கோயில் கோபுரங்களையும் மண்டபங்களையும் பிரகாரங்களையும் பலப்பல சன்னதிகளையும் கொண்டுள்ள பெரிய கோயிலாகும்.
சோழர், பாண்டியர், விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயர், நகரத்தார் ஆகியோர்களால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. நூற்றியெட்டு லிங்கங்களைக் கொண்ட சத அஷ்டோத்திர லிங்கம், ஆயிரம் லிங்கங்களைக் கொண்ட சத அஷ்டோத்திர லிங்கம், ஆயிரம் லிங்கங்களைக் கொண்ட சகஸ்ரலிங்கம் ஆகியவற்றோடு சோழலிங்கம், பாண்டிய லிங்கம், தெனாலி லிங்கம் ஆகிய லிங்கங்களும் உள்ளன.
இத்திருக்கோவிலுக்குத் திருப்பணி செய்த ராமநாதன் செட்டியாரின் ஆள் உயரச் சிலையும் கோவிலில் உள்ளது. கிருஷ்ண தேவராயர் மிகப்பெரிய திருப்பணிக்கான திட்டம் வகுத்து அது அவருடைய வாழ்நாளுக்குள் முற்றுப் பெறாமல் நின்று போய் விட்டது என்பதைக் கோவிலுக்குச் சற்றுத் தொலைவில் உள்ள ஒரு பெரிய கோபுரம் தெரியப்படுத்துகின்றது.
கோவிலின் உள்ளே கல்வெட்டுக்களால் நிரம்பிய காசி விஸ்வநாதர்க் கோவில் மிகவும் சிதலமடைந்து உள்ளது. கொடி மரத்திற்கு அருகே பலிபீடம் லிங்கம் ஆகியவற்றை எட்டு யானைகள் சுமந்து நிற்பது போல் அமைந்துள்ளன. அருகே யோகியுடன் கூடிய சிறிய லிங்கம் உள்ளது.
ஓங்கார வடிவமாகிய லிங்கத்தில் மகரப் பகுதியாகிய பீடமும் உகரப் பகுதியாகிய ஆவுடையாரும் இல்லாமல் அகரப் பகுதியாகிய பாணம் மட்டுமே உள்ள லிங்கமும் மீனாட்சி சுந்தரரேஸ்வரர் சன்னதியும் மற்றும் பலப்பல லிங்கங்களும் காணப்படுகின்றன. சிற்பத் தூண்களுடன் கூடிய லிங்க சன்னதிகளும் சிலந்தி, யானை, பாம்பு ஆகியவை சிவபூஜை செய்யும் திருக்காளத்தில் தல வரலாற்றைக் காட்டுகின்ற தனிச் சன்னதியும் உள்ளன.
திரும்பிய பக்கமெல்லாம் சன்னதிகள்
திருவண்ணாமலையில் மாணிக்க வாசகப் பெருமானுக்குக் காட்சி தந்தருளிய பரமனின் திருவடிகளுக்குச் சன்னதியுள்ளது போன்று திருக்காளத்தியிலும் ஈசன் திருவடிகள் காணப்படுகின்றன. திருவடிச் சன்னதியில் திருவடிகளுக்கு முன்பு நந்தியும் எழுந்தருளியுள்ளது.
ஒருபுறம் விஸ்வநாதர் கோவில் சிதலமடைந்துள்ளது போன்றே மறுபுறம் மலையேறும் பாதையுள்ள கோபுரத்தின் அருகே மணிகங்கை என்னும் பொன் முகலி நதியைத் தோற்றுவித்த மணிகங்கேசர்க் கோவில் முற்றிலும் சிதைந்துள்ளது. உள்ளிருக்கும் மண்டபத்தின் சுவர்களில் பாம்பு சிலந்தி யானை ஆகியவை வாயுலிங்கப் பொருளை வழிபடுவதைக் காட்டும் வண்ண வண்ண அழகிய ஓவியங்கள் சிதைந்து போயுள்ளன.
இந்த மண்டபத்தில் உள்ள படிகளில் ஏறிச் சென்றால் மேலே நான்கு முக லிங்க சன்னதி உள்ளது. நான்கு முகங்களையும் நன்றாகச் தரிசனம் செய்யும் வகையில் நான்கு புறமும் சிறு சிறு சாளரங்கள் உள்ளன. எல்லாச் சிவலாயலங்களிலும் உள்ளது போல் திருக்காளத்தீஸ்வரர்க் கோவிலிலும் தட்சிணாமூர்த்தி உள்ளார்.
பெரிய நடராஜர், சிறிய நடராஜர் என்று இரண்டு ஆடல்நாயகன் திருவுருவங்கள் உள்ளன. அறுபத்து மூவர் சன்னதியோடு திருமுறைச் சன்னதியும் உள்ளது. நந்தியும் சண்டீசரும் பைரவரும் தங்கள் தங்கள் பதவிக்கு ஏற்ப அவரவர்கள் இடத்தில் அமர்ந்துள்ளனர். பட்டல பைரவர் என்ற சன்னதியில் நூல் சாற்றுவது மரபாக உள்ளது.
பிரம்மன் சிரம் அரிவதற்காக பைரவரைத் தோற்றுவித்த பைரவநாதர் எனப்படும் சிவ பைரவரும் வேட்டை நாய்கள் சூழத் தனிச் சன்னதியில் எதிரே நந்தியோடு எழுந்தருளியுள்ளார். பிரணவப் பெருமாள் உணர்ந்த மாணிக்கவாசகப் பெருமான் இந்தக் கோலத்தைப் போற்றியுள்ளார்.
சுந்தர கணபதி, பாலகணபதி, வல்லப கணபதி, இலக்குமி கணபதி, உக்தி கணபதி, பூத கணபதி, சக்தி கணபதி என்று பலப்பல விநாயகர் திருவுருவங்களும் சன்னதிகளும் உள்ளன. இவையே யன்றி பாதாள விநாயகர் சன்னதி சிறப்பு வாய்ந்தது. கிணற்றில் இறங்குவது போன்று குறுகலான படிகள் வழியே இறங்கிச் சென்று தரிசனம் செய்ய வேண்டும்.
உடுப்பி பால சுப்பரமணியர் சன்னதி, முருகன் சன்னதி என்று முருகனுக்குச் சன்னதிகள் உள்ளன.
திருவண்ணாமலையில் அண்ணாமலையாரின் திருக்காட்சி பெற்ற மாணிக்க வாசகப்பெருமானுக்கு ஆதியண்ணாமலையார்க் கோவில் கோவில் இருப்பது போன்று காளத்தியில் மலையுச்சியில் குடுமித் தேவரின் திருக்காட்சி பெற்ற கண்ணப்பருக்கு கோவில் உள்ளது. மலையுச்சியில் வில்வ மரத்தடியில் எழுந்தருளியுள்ள குடுமித் தேவரை சிவகோசரியார்எ ன்ற முனிவரும் கண்ணப்பரும் வழிபட்டனர்.
பதினாறே வயதான கண்ணப்பர் முதல் முறையாக வேட்டைக்குச் சென்ற போது மலைமேலுள்ள குடுமித் தேவரைக் கண்டு ஆராத அன்பு கொண்டு அங்கேயே தங்கி விட்டார். ஆறு நாட்கள் உணவும் உறக்கமும் இன்றி சதாசர்வ காலமும் சிவ நினைவோடு குடுமித்தேவரின் அருகே இருந்தார்.
ஒரு உறுப்புக்கு மாற்று உறுப்பு வைத்து சிகிச்சை செய்யும் மருத்துவம் உள்பட பல விதமான கலைகளையும் பதினாறே வயதான கண்ணப்பர் கற்றுத் தேர்ந்ததை Ôகலை மலிந்த சீர் நம்பி கண்ணப்பற்குÕ என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் போற்றுகின்றார். வேறு யாருக்குமே இருக்க முடியாத இறையன்பினைக் கண்ணப்பர் கொண்டிருந்ததை இறைவனால் வலிந்து ஆட்கொள்ளப்பட்ட மாணிக்க வாசகர் போற்றுகின்றார்.
திண்ணன் ஈசனுக்குக் கண்டு அப்பியதால் கண்ணப்பன் என்று பெயர் பெற்றார். திருமாலும் இறைவனுக்குத் தாமரை மலராகத் தன் கண்ணை வைத்துப் பூஜை செய்ததால் தாமரைக் கண்ணன் என்று பெயர் பெற்றார். இருவருடைய வழிபாட்டிலும் வானத்திற்கும் பூமிக்கும் இடையே உள்ள வேறுபாடு உள்ளது.
விஷ்ணுவின் வழிபாடு பிரதிபலனை எதிர்ப்பார்த்து. பரம்பொருளிமிருந்து சுதர்சனச் சக்கரத்தைப் பெறுவதற்காக சிவபூஜை செய்தார். சிவபூஜை தடைப்பட்டு விட்டால் சக்கரம் கிடைக்காமல் போய் விடுமோ என்பதால் பூஜையைத் தடையின்றி முடிப்பதற்காக குறைந்து போன தாமரை மலருக்குப் பதிலாகத் தன் கண்ணைப் பறித்து வைத்து அதிர்த்துப் பூஜையை முடித்தார். இத்தகைய அன்பினை, பக்தியை எல்லோரிடத்திலும் காண முடியும்.
ஆனால் கண்ணப்பர் வழிபாடு செய்தது இறைவனுக்காக எந்தவிதமான பிரதிபலனும் கருதாது ஈசனுக்காக தன் ஒரு விழியை மட்டுமன்று இரண்டாவது கண்ணையும் அர்ப்பணிக்கத் தொடங்கினார். இத்தகைய பக்தியை யாரிடத்திலும் காண முடியாது.
தாட்சாயிணியாக, பார்வதியாக, மீனாட்சியாகப் பிறந்து வளர்ந்த போதும் மற்றும் காமாட்சி, விசாலாட்சி என்று எந்தப் பெயரில் எங்கு வந்த போதும் பல்லாண்டுகள் தவமும் பூஜையும் செய்த பின்புதான் பராசக்தியால் பரமேஸ்வரனைக் காண முடிந்தது. பரம்பொருளைக் கணவனாக அடைய வேண்டும், குற்றம் குறை நீங்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது.
ஆனால் கண்ணப்பரோ ஆறே நாட்களில் அகிலாண்டேஸ்வரரின் திருக்காட்சி கண்டு அவனது திருக்கரத்தால் தீண்டப் பெறும் பெறுதற்கு அரிய பெரும் பேறு பெற்றார். அவருடைய தன்னலமில்லாத பக்தி, இறைவனுக்காக இறைவனை வழிபட்ட மெய்யன்பு ஆயிரம் ஆண்டுகள் தேடித் திரி¢ந்தாலும் பிரம்ம விஷ்ணுக்களால் காண முடியாத பரமேஸ்வரனது திருக்காட்சியை ஆறே நாட்களில் கூட்டு வித்தது. மீண்டும் வந்து பிறக்காத பேரின்ப முக்தியையும் அருளச் செய்தது.
கண்ணப்பரைப் போற்றாத பக்தர்கள் இல்லை எனலாம். சங்கப் புலவர்களின் பாடல் முதல் தற்காலத்துக் கீர்த்தனைகள் வரை கண்ணப்பர் போற்றப்படுகின்றார். கிடைத்துள்ள தேவாரத் திருமுறைகளை நோக்கும்போது ஏழு வயது வேதியர் சண்டீசரும் பதினாறு வயது கண்ணப்பருமே மிக அதிகமாகப் போற்றப்பட்டுள்ளனர்.
மலையுச்சியில் உள்ள கண்ணப்பர்க் கோவிலில் ஆள் உயரப் பெரிய கண்ணப்பருக்கு அருகே அப்புனிதப் பெருமனைப் பெற்றெடுத்து உலகத்திற்குத் தந்த தாயாரின் சிறிய உருவம் அமர்ந்த நிலையில் உள்ளது. கண்ணப்பர் சிவகோசரியார் வழிபட்ட லிங்க மெய்ப்பொருள் இன்றும் வில்வ மரத்தடியில் திறந்த வெளியிலேயே உள்ளது.
கண்ணப்பருக்கும் சிவகோசரியாருக்கும் திருக்காட்சி தந்த காட்சியருளிய நாதர்க் கோவிலும் கண்ணப்பர்க் கோவிலும் அருகருகே அமைந்துள்ளன. மலையுச்சியில் மட்டுமன்றி கீழே ஞானப்பிரகாசம் எழுந்தருளியுள்ள அடிவாரக் கோவிலில் கொடி மரத்திற்கு அருகேயும் கண்ணப்பர் உள்ளார்.
காளத்திக் கணநாதரை தரிசனம் செய்து வழிபடுகின்றவர்களுக்கு அஞ்ஞானம் விலகுகின்றது. தீராத நோய் தீர்கின்றது. பிறவிப் பிணி நீங்கிப் பிறவாப் போரின்பம் உண்டாகின்றது. எல்லாவிதமான கிரக தோஷங்களும் குற்றங்குறைகளும் நீங்குகின்றன.
- காத்யாயினி அம்மனுக்கும் தனி சன்னதி உள்ளது.
- காளியால் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்ட லிங்கங்கள் உள்ளன.
காளத்தியப்பரைத் திருமால், துர்க்கை, காளி, சீனிவாசப் பெருமாள், எமன், சனி, சித்திரகுப்தன், சப்தரிஷிகள், அகத்தியர் மார்க்கண்டேயர், வியாசர், ராமன் கண்ணன், அனுமன், சீதை, பரமதன், தருமர் ஆகியோர் வழிபட்டு பூஜை செய்துள்ளனர். அவர்களுடைய திருவுருவங்களும் இவர்கள் பிரதிஷ்டை செய்து பூஜித்த லிங்கங்களும் பிரகாரம் முழுவதும் காணப்படுகின்றன.
காளத்தீஸ்வரரை வழிபட்ட விஷ்ணு சூரியநாராயணர், காளத்திக் கணநாதரை வழிபட்ட துர்க்கையம்மன் காலகாம்பாள், கனக துர்க்கையம்மன் என்ற பெயர்களுடன் தனிச் சன்னதிகளில் உள்ளாள். காத்யாயினி அம்மனுக்கும் தனிச் சன்னதி உள்ளது.
கடவுளை பழித்துச் செய்யப்பட்ட தட்சன் நடத்திய யாகத்தில் தாட்சாயிணி நெருப்புக் குண்டத்தில் விழுந்து துவண்டுபோனதைக் கண்ட சப்தரிஷிகள் தட்சனின் கொடுமைகள் முற்றுப்பெற அருளுமாறு பரமேஸ்வரனைப் பூஜை செய்து தொழுதனர். வீரபத்திரர், பத்ரகாளி என்ற பெயருடைய இரண்டு தெய்வங்களை ஈசன் படைத்தருளினார்.
தட்சனின் யாகத்தில் பங்கு பெற்ற பாவத்திற்காக தேவியர்களை இருவரும் தண்டித்தனர். தட்சனின் தலையை அறுத்து எறிந்த வீரபத்திரர் வடக்கேயுள்ள கயிலைமலைக்கு சென்று சிவ நினைவில் மூழ்கினார். ஆனால் பத்திரகாளியோ வெறி அடங்காமல் கண்ணில் பட்ட எல்லோரையும் தாக்கி துன்புறுத்தினாள்.
காளியின் கொடுமைக்கு ஆளான மண்ணுலக வாசிகளும், விண்ணுலக வாசிகளும் மகேஸ்வரனை பூஜை புரிந்து தங்களை காத்தருளுமாறு வேண்டினர். ஆடல் நாயகனான கனகசபேசன் திருவாலங்காட்டில் வெளிப்பட்டுத் தோன்றி திருநடனம் ஆடினார்.
காளியும் போட்டி போட்டுக் கொண்டு ஆட வந்தாள். கால்கட்டை விரலை காது வரையிலும் உயர்த்தி ஆடும் ஊர்த்துவத் தாண்டவம் என்ற நடனத்தை அம்பலவாணர் ஆடினார்.
நடன நூல்களில் கூறப்படாத, நாட்டியக் கலைஞர்கள் அறியாத, முப்பத்தாறு தத்துவங்களுக்கு அப்பாற்பட்ட அருள்மேனி கொண்ட எல்லாம் வல்ல பரம்பொருளால் மட்டுமே நிகழ்த்தக்கூடிய இந்த நுணுக்கமான அரிய நடனத்தை காளி ஆட முடியாமல் போனதால் கோபமும் வெறியும் அடங்கி அமைதியடைந்தாள்.
ஈசனை தொழுது வணங்கினாள். அம்பலத்தரசனின் திருவருளால் எல்லைத் தெய்வமாக விளங்கும் பேறு பெற்ற காளி இரும்பை மாகாளம், அம்பர் மாகாளம் போன்ற பல தலங்களிலும் பரமேஸ்வரனை பூஜை செய்து வழிபட்ட பின் காளஹஸ்தியை அடைந்தாள்.
வாயுலிங்கப் பரம்பொருளைப் பூஜை செய்து வணங்கிய பின் உஜ்ஜயினிக்குப் பயணமானாள். திருக்காளத்தீஸ்வரரை வழிபட்ட காளிக்கு காளத்திநாதர்க் கோவிலில் தனி சன்னதியுள்ளது.
காளி சன்னதிக்கு அருகே காளியால் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்ட லிங்கங்கள் உள்ளன.
மேலும் பிரகாரத்திலும்உ ள்ளன. தனிச் சன்னதி கொண்டும் அமைந்துள்ளன. காளிகாதேவி சன்னதிக்கு உள்ளும் லிங்கம் உள்ளது.
- சக்தியின் மேனியை பொன்னிறமாக்கியதால் பொன்முகலி என்று மணிகங்கைக்கு பெயர்.
- கணநாதரை வழிபட்டு கல்யாண உற்சவம் செய்பவருக்கு விரைவில் திருமணம் நடக்கும்.
அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய தெய்வீக நால்வர் போன்று பிருங்கி முனிவரும் பிறப்புக்கு அப்பாற்பட்ட பரபிரும்மத்தை மட்டுமே வழிபடும் செம்மையான திருநெறியில் நிற்பவர். தோற்றம் அவதாரம் பிறப்பு போன்ற மாசு உள்ள ஜீவராசிகளான ஆண் தெய்வங்களையோ பெண் தெய்வங்களையோ எக்காரணத்தைக் கொண்டும் எந்த சூழ்நிலையிலும் பூஜை செய்து வணங்காத செம்மையான மனம் கொண்டவர். தன்னை பூஜை செய்து வழிபடவில்லை என்பதற்காக பராசக்தி பிருங்கி முனிவருக்கு எலும்புக் கூடாகப் போகுமாறு சாபம் கொடுத்தாள்.
ஒரு சிறந்த சிவபக்தையாக இருந்தும் சிவபக்தர்களின் அருமை பெருமைகளையும் சிவபக்தியின் மகிமையையும் உணர்ந்து கொள்ள முடியாத அஞ்ஞானத்தினால் ஒரு சிறந்த சிவனடியாரை துன்புறுத்திய தீவினையின் பலனை பராசக்தி அனுபவிக்க நேர்ந்தது. அம்மன் மேனி தெய்வத்தன்மையை இழந்து துர்நாற்றம் எடுக்கலாயிற்று.
மீண்டும் நறுமணத்தையும், தெய்வத்தன்மையையும் பெறுவதற்காக பராசக்தி திருக்காளஹஸ்திக்கு வந்தாள். நல்வினை, தீவினை என்ற இருவினைகளுக்கும் அப்பாற்பட்ட ஈசனை நினைத்து தவம் புரிந்தாள்.
ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு போவதும், வருவதும் இல்லாமல் எல்லா உலகங்களிலும் எல்லா இடங்களிலும் நிறைந்து மறந்து உள்ள காற்றுப்பெருமான் திருச்சடையிலிருந்து கங்கைநீரைத் தெளித்தருளினார். அந்த நீர்த்துளிகள் நதியாகப் பெருக்கு எடுத்து ஓடின.
கங்கை நீர்த்துளிகள் நதியானதால் அந்த நதி மணிகங்கை என்று பெயர் பெற்றது. சக்திதேவி அந்த மணிமங்கையில் சிவநாமம், ஓதி நீராடியபோது அவள் மேனியின் துர்நாற்றம் நீங்கிப் பொன்னிறமும், தெய்வத்தன்மையும் பெற்றாள். சக்தியின் மேனியை பொன்னிறமாக்கியதால் பொன்முகலி என்று மணிகங்கைக்கு பெயர் உண்டாயிற்று.
பொன்முகலியில் நீராடிய பராசக்தி வாயுலிங்க பரம்பொருளை பூஜை செய்து வழிபட்டாள். அம்மனின் ஆணவத்தையும், அஞ்ஞனத்தையும் நீக்கியருளிய காளத்தீஸ்வரர் பராசக்தியை மெய்ஞானப் பூங்கோதையாக்கி நறுமணம் வீசச்செய்தார். அம்மனுக்கு ஞானஒளி வழங்கியதால் பரமேஸ்வரனுக்கு ஞானப்பிரகாசம் என்று திருநாமம் உண்டானது.
திருமுறை ஞானப்பிரகாசத்தை போற்றுகின்றது. பராசக்தியை நறுமணம் வீசும் ஞானப்பூங்கோதையாக்கி அருளியதையே பரமேஸ்வரன் கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறை தும்பி....என்று தொடங்கும் பாடலில் எழுதிப் பாண்டியனிடமிருந்து பரிசில் பெறுவதற்காக தருமிக்குக் கொடுத்தருளினார்.
காளத்தீஸ்வரரின் திருவருளால் மெஞ்ஞானமும், ஆணவமும் துர்நாற்றம் நீங்கி மெய்ஞானமும் பூவின் நறுமணமும் பெற்ற அம்மன் ஞானப்பூங்கோதை என்ற திருநாமத்துடன் தனிச் சன்னதியில் உள்ளாள். தனிக்கோவில் போன்று உள்ள இந்த பெரிய சன்னதி காளத்தீஸ்வரருக்கு பின்புறம் எதிர்திசையை நோக்கியவாறு அமைந்துள்ளது.
கல்யாண உற்சவம்
அம்மன் திருநாமம் வடமொழியில் ஞானப்பிரசுனாம்பா என்று வழங்கப்படுகின்றது. அம்மன் பிரதிஷ்டை செய்து பூஜை புரிந்த லிங்கங்கள் அம்மன் சன்னதியில் உள்ளன. அம்மனை தான பூங்கோதையாக்கி அருளிய கல்யாணசுந்தரர் எழுந்தருளியுள்ள கல்யாண மண்டபத்தில் திருக்கோயிலின் சிறந்த உற்சவங்களில் ஒன்றான கல்யாண உற்சவம் நடக்கின்றது.
காளத்திக் கணநாதரை வழிபட்டு கல்யாண உற்சவம் நடத்துகின்றவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கின்றது. அம்மன் சன்னதிக்கு அருகே அக்கண்ணலிங்கம், நாதள்ளலிங்கம், காளத்தீசர் ஆகிய பல லிங்கங்கள் உள்ளன.
- ராகு, கேது தோஷங்களையும் நீக்கும் திருத்தலமாகும்.
- வாயுலிங்கப் பரம்பொருளின் மீது ஏணிப்படிகள் போன்று ஒன்பது கிரகங்கள் அமைந்துள்ளன.
நான்கு அடி உயரமுள்ள வாயுலிங்கத்தின் கீழே சிலந்தி பாம்பு, யானை ஆகியவற்றின் உருவங்கள் உள்ளன. காளான் என்ற பாம்பு மட்டுமன்று ராகு, கேது போன்ற பாம்புகளும் காளத்தீஸ்வரரை பூஜை செய்து நலம் பெற்றுள்ளன. இதனால் இத்திருத்தலம் நாகதோஷங்களையும் ராகு, கேது தோஷங்களையும் நீக்கும் திருத்தலமாக உள்ளது.
சனிதோஷம் போக்கும் திருநள்ளாற்றுப் தர்பாரண்யேஸ்வரர் போன்று காளத்தீஸ்வரர் ராகு, கேதுதோஷங்களை நீக்குகின்றனர். ராகு, கேது, மட்டுமின்று சூரியன் முதல் கேது வரையிலான ஒன்பது கிரகங்களும் வாயுநாதனை வழிபட்டு நலமடைந்துள்ளன. வாயுலிங்கப் பரம்பொருளின் மீது ஏணிப்படிகள் போன்று ஒன்பது கிரகங்கள் அமைந்துள்ளன.
உச்சியில் ஐந்து தலை நாகம் உள்ளது. நவக்கிரகங்களும் சிவபூஜை செய்து வழிபட்ட காரணத்தால் திருக்காளத்தியும் சப்த விடங்கத் தலங்கள் போன்று நவக்கிரக தோஷங்களை நீக்கும் திருத்தலமாக உள்ளது.
எந்த கிரக தோஷத்திற்கு எந்த கோவிலுக்கு சென்று என்ன பரிகரம் செய்வது என்ற குழப்பம் இல்லாமல் அனைத்து கிரக தோஷங்களையும் நீக்குகின்ற திருவாரூர், திருக்காறைவாசல் (திருக்காறாயில்), திருக்குவளை (திருக்கோளிலி), திருநாகைக் காரோணம், திருநள்ளாறு வேதாரண்யம் (திருமறைக்காடு), திருவாய்மூர் ஆகிய சப்த இடங்கலங்களுக்கும் திருக்காளஸ்திக்கும் சென்று தர்வேஸ்வனையும், விடங்கப் பெருமானையும் வழிபடலாம்.
பொருள் உடல் வசதியில்லாதவர்கள் அருகே உள்ள ஈஸ்வரன் கோவிலுக்கு சென்று தியாகராஜர் எனப்படும் விடங்கப் பெருமானையும், ஈஸ்வரனையும் வழிபடலாம்.
காஞ்சி ஏகாம்பரம், திருவானைக்காவல், திருவண்ணாமலை போன்று திருக்காளத்தியும், பராசக்தி சிவபூஜை புரிந்து சுகமடைந்த திருத்தலமாகும்.
சித்தம் சிவமாக்கிக் தவமும் பூஜைய-ம் புரிந்ததால் உப்பு நீரோடு கலந்து நீராவது போன்று சிவத்துடன் கலந்து சிவமான பராசக்தி என்னும் பெண் தெய்வம் அவ்வப்போது நான் எனது என்ற ஆணவ மலத்தால் போற்றப்படுவதால் தூய்மையான சிவத்துடன் கலந்திருக்க முடியாமல் செம்பொருளைப் பிரிந்து பூவுலகில் வாசம் செய்ய நேரிடுகின்றது.
- பரத்வாஜ் முனிவரால் வழிபட்ட லிங்கம் `லோபாவி' என்னும் இடத்தில் உள்ளது.
- ரோமச முனிவரது சமாதி திருக்காளத்தி கோவிலின் வெண்கல வாசற்படியில் உள்ளது.
பரத்வாஜர் ஒரு தடவை தன் சீடர்களுடன் சொர்ணமுகியில் நீராடி, ஆனந்தத்தை நல்கும் வாயுலிங்கத்தை பக்தியோடு தொழுதார். அவர் தியான நிலையில் ஆழ்ந்திருந்த போது, எத்தகைய இனிமையானது என்று விவரிக்க முடியாத ஒரு தெய்வீக வசனம் அவர் காதுகளில் ஒலித்தது.
`ஓ பரத்வாஜரே! இவ்விடத்தில் சமீபத்தில் தெற்குப்புறமாக ஜீவன்முக்தி அளிக்கவல்ல சாச்வத தலத்தினை அடைந்து வேதங்களின் பாகமாக இருக்கும் `ஸ்ரீருத்ரத்தை' உச்சரித்து என்னை வழிபடுவாயாக. எமது பக்தர்களின் வழிபாட்டிற்காக அவ்விடத்தில் ஒரு லிங்கமும், தீர்த்தமும் இருக்கின்றது என்று காதுகளில் கேட்டது.
இதை கேட்ட பரத்வாஜர் மெய்சிலிர்த்து தம் சீடர்களுடன், இறைவன் சுட்டிக்காட்டியு-ள்ள தலத்திற்கு விரைந்தார். அங்குள்ள தூய்மையான தீர்த்தத்தில் நீராடி, அங்குள்ள லங்கத்தை வணங்கி ஆராதித்தார். அப்போது உடனே பரமேஸ்வரன் அவருக்கு காட்சி அளித்தார்.
பக்தி பரவசத்தால் நெகிழ்ந்து போன பரத்வாஜ், ஈசனே உம்மை வணங்குகிறேன். ஓ! பரமேஸ்வரரோ! உம்மை பிரார்த்திக்கிறன். இந்த அண்ட சராசரத்திற்கும் காரணமான முதலோனே! வேதங்களினால் புகழப்படுவோனே! அனைத்து செயல்களிலும் உறைந்து முழுமுதலாகி நிற்போனே! உமது கருணையினால் நான் ஞானம் பெற்றவனானேன். எனது வணக்கங்களை ஏற்றுக் கொண்டு எமக்கு அருள் செய்வீராக! என கண்ணீர் மல்க கூறி நின்றார்.
அவரது பக்தியால் மனம் இரங்கிய ஈஸ்வரனும், லிங்கோத்பவரை குறித்து எடுத்துக்கூறி அவரை ஞானம் பெறச் செய்தார். முனிவரால் வழிபட்ட லிங்கமும், உபயோகிக்கப்பட்ட தீர்த்தமும் இனி அவரது நாமம் கொண்டே விளங்கட்டும் என திருக்காளத்தீஸ்வரர் அறிவித்தார். மேலும் அவ்விடத்தில் இறைவனை வழிபடுபவர்கள் சம்சார பந்தத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு மோட்சமென்னும் சாம்ராஜ்யத்தை அடையப் பெறுவர் என்றும் கூறி மறைந்தார்.
மகாதேவன் அருளால் பரத்வாஜ முனியின் விருப்பங்கள் அனைத்தும் பூர்த்தியாகி அவர் தன் நிலை உணர்ந்தவராய் மனஅமைதி அடைந்தார்.
ரோமச முனிவரும், சொர்ணமுகி நதியில் நீராடி திருக்காளத்தீஸ்வரரையும், திருஞானப்பிரசுனாம்பிகையையும் தரிசனம் செய்தார். பின்னர், தெற்குப்புற வாயிலில் தட்சிணாமூர்த்தி சிலைக்கு எதிராக முதலில் தர்பை புல்லினை பரப்பி அதன் மீது மான் தோலினை விரித்து, அதன் மீது பத்மாசன நிலையில் அமர்ந்து, தன் உடல், தலை, கழுத்து ஆகியவற்றை ஒருநிலைப்படுத்தி, கண்கள் மூக்கின் நுனியையே கூர்ந்து நோக்க, அவர்தம் மனதை அடக்கி, இறைவனை குறித்து தியானம் செய்தார்.
அவர் மனம் மிக உன்னதமான அமைதி நிலை அடையப்பெற்றது. `நிர்விகல்ப சமாதியினை' அடைந்தார். இறைவனது சிருஷ்களில் அனைத்து உயிருள்ள ஜீவன்களிளும், ஜடப் பொருள்களிலும் இறைவன் உறைந்திருப்பதை உணர்ந்தார் முனிவர். அனைத்து இடங்களிலும், ஏன் நம்மிலும் கூட சிவனையே கண்டார்.
இறுதியாக தான் என்பது வேறு யாருமல்ல. மிக உன்னதமான ஆத்மாவேயாகும் என்பதனை உணர்ந்து கொண்ட அவரது அசைவற்ற நிலையிலுள்ள உதடுகள் `சிவவோஹம்' என உச்சரித்தது. அது அக்கோவில் முழுவதும் சிவோஹத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டதுபோல் தோன்றியது. முனிவரிடம் இருந்து ஒரு ஜோதி எழும்பி திருக்காளத்தீஸ்வரருடன் ஐக்கியமானது.
இக்கதைகளை யார் பக்தியுடன் இறைவன் முன் அமர்ந்து அல்லது பில்வ மரத்தின் அருகில் அமர்ந்து கொண்டு படிக்கின்றனரோ அவர்கள் ஆரோக்கியமும், செல்வ பலமும் பெற்று அறிவாளிகளாக திகழ்வார்கள். இவ்வுலக வாழ்க்கையினை துறக்கும் போது மோட்சத்தை அடைவார்கள் என்பது உறுதி.
பரத்வாஜ் முனிவரால் வழிபட்ட லிங்கமும், தீர்த்தமும் `லோபாவி' என்னும் இடத்தில் இப்போதும் காணப்படுகின்றது. ரோமச முனிவரது சமாதி திருக்காளத்தி கோவிலின் வெண்கல வாசற்படியில் உள்ளது.
காளஹஸ்தி தலத்துக்கு செல்பவர்கள் இந்த லிங்கத்திடமும், ஜீவசமாதி பகுதியிலும் மனம் உருக பிரார்த்திக்க வேண்டும். அது அளவற்ற பலன்களை வாரி வழங்கி, உங்கள் வாழ்வை மேம்படுத்தும்.
- `ஸ்ரீராம், ஜெயராம், ஜெயஜெயராம்' என்ற மந்திரத்தை ஜெபிப்பது நல்லது.
- வீட்டில் ஆஞ்சநேயர் படத்தின் முன் அமர்ந்து அனுமன் சாலீசா துதியை பாராயணம் செய்யலாம்.
எந்த நேரமும் தன்னை மறந்து ஸ்ரீராமத்தியானத்தில் இருக்கும் அனுமானுக்கு, தன்னைத் துதிப்பதை விட தனது இறைவன் ஸ்ரீராமனைத் துதிப்பதே பிடிக்கும். எனவே, அனுமானைப் பூஜித்து எவ்வளவு தடவை முடியுமோ, அவ்வளவு தடவைகள். `ஸ்ரீராம், ஜெயராம், ஜெயஜெயராம்' என்ற மந்திரத்தை, குரு உபதேசம் பெற்று ஜெபிப்பது நல்லது.
அனுமானை வழிபடுபவர்கள், பூஜை நேரத்திலும் இதர முக்கிய புண்ணிய தினங்களிலும் கண்டிப்பாக, பிரம்மச்சர்ய விரதம் - புலனடக்கம் அனுஷ்டிக்க வேண்டும். அசைவ (புலால்) உணவை முழுமையாக ஒதுக்குங்கள். இதுவும் கண்டிப்பான நிபந்தனை.
வடை மாலை - வெற்றிலை மாலையை, காரிய சித்திக்காக அனுமானுக்கு சாற்றலாம். தினசரி `ஸ்ரீராமஜெயம்' முடிந்தவரை எழுதலாம். அனுமானின் வாலுக்கு, 1 மண்டலம் (48 நாட்கள்) சந்தனக் குங்குமப் பொட்டு வைத்துக் கொண்டே வந்து இறுதி நாளில், விசேஷ பூஜை செய்து காரிய சித்தி அடையலாம்.
கண் மூடி தியானித்து, `ராம், ராம்' என்று சொன்னாலே போதும்! அனுமானுக்கு இதை விட பிரியமானது எதுவும் இல்லை. தியாகராஜ சுவாமிகள் 96 கோடிகள் இம்மந்திரத்தை ஜெபித்து, ஸ்ரீராம தரிசனம் பெற்றார்!
ஆஞ்சநேயர் மாலா மந்திரததை தினமும் 3 முறையோ, 9 முறையோ, 28 முறையோ சொல்லி வரலாம். நல்ல ஆரோக்கியம், ஆயுள் விருத்தி, மனோ வலிமை போன்றவற்றிற்கு இந்த மாலா மந்திரம் கூற அவை கிடைக்கும்.
கடன்பட்டுக் கலங்கி நிற்பவர்கள் இந்த மாலா மந்திரத்தைச் சொல்லி வந்தால் கடன் நிவர்த்தியடையும். எதிரிகள் பயம் உள்ளவர்கள் இந்த மந்திரத்தைச் சொல்லிவர எதிரிகள் வசமாவர்.
சிறைவாச பயம் நீங்க இந்த மந்திரத்தைச் சொல்லி ஆஞ்சநேயரை வணங்க சிறைவாச பயம் நீங்கும். பிரயாணம் செய்யும் பொழுது இந்த மந்திரத்தை சொல்லிக் கொண்டு சென்றால் பிரயாணம் வெற்றிகரமாக முடியும்.
வீட்டில் வழிபடும் முறைகள்
ஆஞ்சநேயரை வீட்டில் பூஜை செய்யும் பக்தர்கள் தனியாக ஒரு பூஜை அறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
அங்கே ஆஞ்சநேயரின் படத்தையோ, சிலையையோ வைக்க வேண்டும். பூஜை காலத்தில் பரிசுத்தமாக இருக்க வேண்டும். விரத காலங்களில் பெண் வாசனை கூடாது. அந்த நாட்களில் பெண்கள் கண்டிப்பாக பூஜை அறை பக்கம் வரக்கூடாது.
பூஜை அறையினுள் துளசி இலைகள் போட்டு தீர்த்தம் வைத்திருக்க வேண்டும். சுவாமிக்கு பிடித்தமான நிவேதப் பொருட்களையும் வைத்திருக்க வேண்டும்.
பூஜை செய்பவர்கள் உடல் மட்டுமின்றி உள்ளமும் சுத்தமாக இருக்க வேண்டும்.அதுபோல பூஜை அறையையும் சுத்தமாக இருக்க வேண்டும். பூஜை அறை தரையை விளக்குமாறு கொண்டு பெருக்காமல், துணியால் துடைத்து சுத்தம் செய்ய வேண்டும்.
பூஜை அறையில் எப்போதும் ஆராதனை புகை மனம் வீச வேண்டும். இவையெல்லாம் நாம் ஆஞ்சநேயருடன் மனம் ஒன்று உதவும்.
வீட்டில் ஆஞ்சநேயர் படத்தின் முன் அமர்ந்து அனுமன் சாலீசா துதியை பாராயணம் செய்யலாம். செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் தொடர்ந்து பாராயணம் செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும். தொடர்ந்து ஒரு மண்டலம் பாராயணம் செய்தால் தடைப்பட்ட விவாகம் உள்பட சுபாகரியம் நிறைவேறும்.
- சுவர்ணமுகரி நதி இத்தலத்தில் உத்திரவாகினியாகப் பாய்கின்றது.
- அறுபத்து மூவரில் இறைவனிடம் அன்பு செலுத்துவதில் முதல் நிலையில் நிற்பவர் கண்ணப்பர்.
பஞ்சபூத தலங்களுள் காளஹஸ்தி வாயுத்தலமாக கருதப்படுகிறது. இதற்கு ஒரு புராணக் கதை உண்டு.
ஆதி சேஷனுக்கும் வாயு பகவானுக்கும் ஒரு பலப் பரீட்சை நடந்தது. மேரு மலையை ஆதிசேஷன் சுற்றி வளைத்துக் கட்டிப் பிடித்தது. வாயு தன் பலம் கொண்ட மட்டும் காற்றை எழுப்பி மலையை அசைத்தது.
இதனால் அம்மலையின் பிஞ்சுகள் மூன்றாகப் பிய்த்து எறியப்பட்டன. அப்படி எறியப்பட்ட மலைப் பிஞ்சு ஒன்று இங்கு விழுந்தது. அதுதான் காளத்தி மலையாக உருவாகி இருக்கிறது என்பது ஒரு செவிவழி செய்தி.
வாயுத்தலம் என்று அழைக்கப்படுவதினை உறுதிப்படுத்துவான் போல், இத்திருக்கோயிலின் கருவறைக்குள், சுடர்விட்டுக் கொண்டிருக்கும் விளக்குகளில், இறைவன் முகம் அருகே உள்ள ஒரு விளக்குச் சுடர் மட்டும் காற்றிலே அசைவுற்று கொண்டே இருக்கிறது.
இந்த விளக்குக்கு மட்டும் காற்று எங்கிருந்து வருகிறது என்பது இன்னும் கண்டறியாத அதிசயமாகவே இருக்கிறது. இதுதான் வாயுத் தலத்திற்குரிய நிதர்சனமான உண்மையாக கருதப்படுகிறது.
கண்ணப்ப நாயனார்
அறுபத்து மூவரில் இறைவனிடம் அன்பு செலுத்துவதில் முதல் நிலையில் நிற்பவர் கண்ணப்பர். எனவே தான் மணிவாசகப் பெருமான் ``கண்ணப்பன் ஒப்புதோர் அன்பு தம்மிடம் இல்லையே'' என உருகுகிறார்.
மாணிக்கவாசகப் பெருமானும், திருஞானசம்பந்தப் பெருமானும் போட்டி போட்டுக் கொண்டு பெருமை பாராட்டிய நாயனார் கண்ணப்பர்.
இத்தகைய பேரன்பு எதனையும் எதிர்பாராத அருளன்பு, தெய்வீக அன்பு. எனவே தான் சேக்கிழார் பெருமான் அனைத்து நாயன்மார்களையும் விட உயர்வாக உச்சிமீது வைத்துப் பாடி மகிழ்ந்தார்.
வெண்ணிறத்தோடு பிரகாசிக்கிற சிவலிங்கத்தை வாயுபகவான் பூசித்து அப்பேறு பெற்றான். ஆதலால் இதற்கு வாயுலிங்கம் எனப் பெயர் உண்டாயிற்று.
பிறகு பிரம்மதேவன் அதே லிங்கத்தை ஆராதித்து, பரமசிவனாக்கி, அந்த சிவானந்த நிலையம் எ¢ன்னும் சிரகத்தை பூமியில் கொண்டு வந்து வைத்ததினால் இத்தலம் தட்சண கைலாயம் எனப் பெயர் பெற்றது. இது வாயுலிங்கம் என்பதற்கு அடையாளமாக இச்சன்னதியிலிருந்து திருவிளக்கு எக்காலத்திலும் எந்த வேளையிலும் சதா அசைந்து கொண்டே இருப்பது ஒரு அதிசயம்.
சுவர்ணமுகரி நதி இத்தலத்தில் உத்திரவாகினியாகப் பாய்கின்றது. இதற்கு வியத்கங்கா, சர்வலோக தீர்த்த சேஷயா, அவிட்ட சின்தையா, பவானி, ஜெகத்தாத்திரி, பவித்திரீ, கிருதகின்முகா, சிவானந்த கரி, வேகவதி, யசல்ஹினி, வக்கிரஹ, கனநாதினி, பக்தபாச மூலநிகுர்தனி, மனோக்கிய சிக்கா என இருபத்தைந்து பெயர்கள் உண்டு.
கூர்மையான லிங்கம்
இப்பெருமான் சிவலிங்கத்தில் ஒரு புதிய உருவை ஏற்றிருக்கின்ற அற்புதக் கோலத்தைக் கண்டு வணங்கி மகிழலாம். நான்கடி உயரம். அடியில் பெருத்து; முடியில் கத்தி முனை போன்று கூர்மையாக ஒடுங்கிய நிலையில் உள்ள மூர்த்தி.
மாலை போட்டு அலங்கரிக்க என்று ஒரு தனிச் சட்டம். அதை விலக்கி விட்டு அர்ச்சகர் தீபாராதனை பண்ணினால், சிலந்தி, நாகம், யானைக் கொம்புகளோடு கண்ணப்பனது ஒரு கண்ணும் லிங்கத் திருவுருவில் தெரியும். அந்தராளயத்திலே கூப்பிய கையானாய் வில்லத்தை தாங்கிக் கொண்டு கண்ணப்பரும் சிலை உருவில் நிற்பதைக் கண்டு மகிழலாம்.
காளத்தி நாதரை வணங்கி மீண்டும் வலப்பக்கச் சுற்றில் திரும்பினால் கிழக்கு நோக்கியபடி ஞானப் பூங்கோதையின் கோயில் உள்ளது. கம்பீரமான தெய்வம் இது இங்கு பல சுற்றுக்கள் உள்ளன.
நகரத்தார் திருப்பணி
தமிழையும் சைவத்தையும் தம் இரு கண்களாகப் போற்றி மகிழும் நகரத்தார் பெரு வணிகர்களில் ஒருவரான தேவகோட்டை மே.அருநா.ராமநாதன் செட்டியார் குடும்பத்தினர் காளத்தி நாதர் திருக்கோயிலைப் பழுது பார்த்துப் புதுப்பித்துத் திருப்பணி செய்துள்ளனர். இவரது திருவுருவச் சிலை பொன்முகலி ஆற்றுக்குச் செல்லும் படிக்கட்டின் பக்கத்திலே ஒரு சிறு மண்டபத்திலே நின்ற நிலையில் இருப்பதையும் பார்க்கலாம்.
மணிகர்ணிகா கட்டம்
கோயிலின் பின்புறத்தில் இரண்டு குன்றுகள் உள்ளன. ஒன்றில் பேரிலே கண்ணப்பர் தொழுத இறைவனான குடுமித் தேவர் உள்ளார். மற்றொன்றில் துர்க்கையம்மை அருளாட்சி புரிவதை பார்க்கலாம்.
கண்ணப்பர் மலை ஏறும் மலைச்சரிவிலே மணிகண்டேசுவருக்கு ஒரு திருக்கோயில். அதை அடுத்து மலையைக் குடைந்து உண்டாக்கிய மண்டபம். இதற்கு மணிகர்ணிகா கட்டம் என்று பெயர்.
அந்திமத் தசையை நெருங்கிக் கொண்டிருப்பவர்களை இம்மண்டபத்துக்கு கொண்டு வந்து, வலப்பக்கமாக ஒருக்கச் சாய்த்துக் கிடத்தினால், சாகிற பொழுது உடல் திரும்பி, வலது காது வழியாக உயிர் உடலை விட்டுப் பிரிந்து செல்லும் என்கின்றார்கள்.
- திருமாலை தவிர வேறு தெய்வ வடிவங்களைப் படைப்பது மரபல்ல.
- சுருட்டப்பள்ளியில் சிவன் சயன கோலத்தில் காட்சி தருகிறார்.
கடல் நஞ்சினை ஈசன் வாங்கி உண்ட திருப்பதி என்று காவிரிக்கரையின் தென்கரைத் தலமான திருப்புள்ளமங்கை (பசுபதி கோயில், ஆலந்துறை) குறிப்பிடப்படுகிறது.
திருநீலக்குடி என்னும் தேவாரத் தலத்திறைவரும், அப்பருக்குக் கட்டமுதளித்த திருப்பைஞ்ஞீலி தலத்திறைவரும் `திருநீலகண்டேஸ்வரர்' என வழங்கப் பெறுகின்றனர்.
அதுபோல இலுப்பை பட்டு என வழங்கும் திருப்பழ மண்ணிப் படிக்கரையில் பஞ்சபாண்டவருள் முதல்வரான தருமனும், துணைவி திரவுபதியும் போற்றி வணங்கிய வடிவம் நீலகண்டேஸ்வரர் என்று கூறப்பெறுகின்றது.
திரு அம்பர் மாகாளம் என்ற ஊரில் உறை இறைவந் `காள கண்டேஸ்வரர்' எனப் பெறுகின்றார்.
பள்ளிகொண்ட பரமர்
திருமாலை தவிர வேறு தெய்வ வடிவங்களைப் படைப்பது மரபல்ல. ஆனால் ஆந்திர மாநிலத்தில் உள்ள சுருட்டப்பள்ளி என்னும் ஊரில் சிவன் சயனக்கோல கதை வடிவச் சிற்பம் காணப்பெறுகின்றது.
தாயார் மங்களேஸ்வரியின் மடியின் மேல் தலை வைத்து வானோக்கியவாறு சிவன், விஷம் அருந்தியபின் இருந்த சயன வடிவ தோற்றம் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தாரமங்கலதக் கோயில்
பிரதோஷ நாட்களில் மாலை நேரத்தில் சூரிய பூஜையும் நடைபெறும் அற்புதக் திருக்கோயில் தாரமங்கலம் என்னும் ஊரில் அமையப் பெற்றுள்ளது. மேற்கு பார்த்த இத்திருக்கோயிலில் அமைந்துள்ள மூன்று நந்தியின் கொம்புகள் வழியே சூரிய ஒளியானது கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் மேல் விழும் வண்ணம் ஆலயம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரதோஷ பூஜையுடன் சூரிய பூஜையினையும் ஒருங்கே தரிசித்துப் பேறு பெற விரும்புவோர் செல்ல வேண்டிய ஊர் தாரமங்கல்ம் ஆகும்.
பிற கோயில்கள்
பிரதோஷ நாயகரான திருநீலகண்டரைப் போற்றும் வகையில், கோவை மாவட்டத்தில் உள்ள காரமடையில் கலைச்சிறப்பு வாய்ந்த நஞ்சுண்டேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்றான பத்மநாபபுரத்தில் `நீலகண்டசுவாமி கோயில்' அமையப் பெற்றுள்ளது.
திருநீலகண்டப் பதிகம்
பிரதோஷ காலத்தில் படிக்க வேண்டிய செய்வினை
கோளாறுகளை நீக்கும் திருஞான சம்பந்தரின் திருநீலகண்டப் பதிகம்
அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லுமஃதறிவீர்
உய்வினை நாடாதிருப்பது முந்தமக் கூனமென்றே
கைவினை செய்தெம் பிரான்கழல் போற்றுது நாமடி யோம்
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்
காவினையிட்டுங் குளம்பல தொட்டுங் கனிமனத்தால்
ஏவினை யாலெயின் மூன்றெரித் தீரென றிருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுது நாமடி யோம்
தீவினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்
மூலைத்தட மூழ்கிய போகங் களுமற்றெவையு மெல்லாம்
விலைத்தலை யாவணங் கொண்டெமை யாண்ட விரிசடையீர்
இலைத்தலைத் சூலமுந் தண்டு முழவு மிவை யுடையீர்
சிலைத்தெமைத் தீவினை தீண்டப் பெறாதிரு நீலகண்டம்
விண்ணுலக காள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும்
புண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படம் புண்ணியரே
கண்ணிம யாதன மூன்றுடை யீரங் கழலடைந்தோம்
திண்ணிட தீவினை தீண்டப்பெ றாதிருநீலக்கண்டம்
மறக்கு மனத்தினை மாற்றியெம் மாவியை வற்புறுத்திப்
பிறப்பில் பெருமான் றிருந்தடிக் கீழ்ப்பிழை யாதவண்ணம்
பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும் பணியடியோம்
சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்
கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் கழலடிக்கே
உருகி மலர்க்கொடு வந்துமை யேந்துதுநாமடியோம்
செருவி லரக்கனைச் சீரிலடர்த்தருள் செய்தவரே
திருவிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்
நாற்ற மலர்மிசை நான்முக னாரணன் வாது செய்து
தோற்ற முடைய அடியு முடியும் தொடர்வரியூர்
தோற்றினுந் தோற்றந் தொழுது வணங்குதும் நாமடியோம்
சீற்றம தாம்பினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்
சாக்கியப் பட்டுஞ்சமணுரு வாகி யுடையழிந்தும்
பாக்கியமின்றி யிருதலைப் போகமும் பற்றும் விட்டார்
பூக்கமழ் கொன்றைப் புரிசடை யீரடி போற்றுகின்றோம்
தீக்குழித் தீவினை தீண்டப் பெறாதிரு நீலகண்டம்
பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வம் கழலடைவான்
இறந்த பிறவியுண்டாகி லிமையவர் கோனடிக்கண்
திறம்பயின் ஞானசம் பந்தன் செந்தமிழ் பத்தும்வல்லார்
நிறைந்த வுலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே.
- உற்சவருக்கு அர்ச்சனை செய்வது நன்மை தரும்.
- நந்திதேவருக்கு அருகம்புல் மாலையை அணிவிக்க வேண்டும்.
* விடியற்காலை எழுந்து நீராடி, தூய ஆடை அணிந்து நெற்றியில் சைவச் சின்னங்களை தரித்துக் கொள்ள வேண்டும்.
* முழு உபாவாசம் இருந்து, படுக்கையில் படுக்காமல், சிவபுராணம், சிவநாமாவளிகளை படித்துக்கொண்டு சிவசிந்தனையோடு இருக்க வேண்டும்.
* மாலையில் சூரியன் அஸ்தமானமாக நான்கு நாழிகைக்கு முன்பு மீண்டும் குளித்து தூய ஆடையுடுத்தி நெற்றியில் திருநீறு பூசிக்கொள்ள வேண்டும்.
* இல்லத்தில் சிவலிங்கமும், நந்தியும் கற்படிமமாகவோ, விக்ரகமாகவோ இருப்பின் அவற்றிற்கு அபிஷேகம் செய்து, வில்வ தளத்தால் அர்ச்சனை, ஆராதனை செய்ய வேண்டும்.
* மாலை பிரதோஷ வேளையில் சிவாலயத்திற்கு சென்று சிவபெருமானுக்கும், நந்தி தேவருக்கும் நடைபெறும் மஹன்யாச ருத்ர ஜபத்துடன் கூடிய அபிஷேகத்தை கண் குளிரக் காண வேண்டும்.
* நந்திதேவருக்கு அருகம்புல் மாலையை அணிவிக்க வேண்டும்.
* மாவினால் அகல் செய்து, தூய்மையன பசு நெய்விட்டு விளக்கெரிக்க வேண்டும்.
கார அரிசியில் வெல்லம் கலந்து நந்தி தேவருக்கு நிவேதனமாக வைக்க வேண்டும்.
* தீபாராதனை வேளையில் நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கிடையே சிவபெருமானைக் கண்டு `ஹர ஹர' என்று கூறி வணங்க வேண்டும்.
* பிரதோஷ நாளில் ஆலயத்தை வலம் வரும் போது அப்ரதட்சிணமாக வரவேண்டும்.
* பின்னர் சிவபெருமான் உமாதேவியாருடன் ரிஷபாரூடராய், பிரதோஷ நாயகராய், பிரதோஷ காலத்தில் (மாலை 5.45 மணி முதல் 6.30 மணி வரை) ஆலயத்தை வலம் வரும் பொழுது கண்டு தரிசிப்பது மிகப்பெரிய புண்ணியமாகும்.
* சிவ ஆலயங்களில் வேத பாராயணத்துடன் முதலிலும், திருமுறை பாராயணத்துடன் இரண்டாவதும், நாதஸ்வர மங்கல இசையுடன் மூன்றாவதுமான மூன்று முறை ஆலய வலம் நடைபெறும். இரண்டாவது வலம் வரும்போது இறைவனையும், இறைவியையும் ஈசான திக்கில் இருந்தளருச் செய்வார்கள். அப்போது காண்பிக்கப்படும் கற்பூர ஆரத்தியைக் கண்டு தரிசிப்போர்க்கு மிகுந்த பலன் உண்டு என்று கூறப்படுகிறது.
* சிவ தரிசனம் முடிந்ததும் இருவருக்காவது அன்னமிட்டு, அதன் பிறகு உண்பதே சிறப்பு என்று கூறப்படுகிறது.
* நந்தி தேவருக்கு அபிஷேகம் செய்யும்போது எண்ணை, பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் போன்றவை தரலாம். அபிஷேகம் முடிந்தபின் அருகம்புல், பூ சாத்திய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்து கொள்வது நமக்கு நன்மை தரும்.
* உற்சவருக்கு அபிஷேக நேரத்தில் பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம் இவைகளைக் கொடுக்கலாம். பூஜை நடக்கும் போதும், `சொர்ண அபிஷேகம்' செய்யும்போதும் நம்மிடம் உள்ள தங்க நகைகளைக் கொடுத்து உற்சவருக்கு சாத்தச் சொல்லி தீபாராதனை முடிந்தபின் அந்த நகைகளை வாங்கி அணிவது மிகவும் நல்லது.
* நந்தீஸ்வரருக்கு நைவேத்தியம் செய்யும் போது பச்சரிசியுடன் வெல்லம் கலந்து நந்தி தேவருக்கு முன் வைத்து நைவேத்தியம் செய்து கொள்ள வேண்டும்.
* நந்தி தேவருக்கு தீபாராதனை முடிந்த பின்பு மூலவருக்கு தீபாராதனை நடைபெறும். அப்போது நந்திதேவரின் பின்பக்கத்திலிருந்து இரண்டு கொம்புகளின் இடையில் தீபாரதனையைப் பார்த்தால் சகல தோஷமும், பாவமும் நீங்கும்.
* மூலவருக்கு தீபாராதனை முடிந்த பின்பு நந்தீஸ்வரர் காதில் யாரும் கேட்காதபடி தன்னுடைய குறைகளையும், வேண்டுதலையும் அவரிடத்தில் கூற வேண்டும். இப்படி நந்தி காதில் 12 பிரதோஷ பூஜை அன்று கூறியதையே கூறி வந்தால் 13-வது பிரதோஷ பூஜை அன்று செல்லும் போது அன்று செல்லும் போது கூறிய விஷயம் நிறைவேறிவிடும்.
நந்தியின் காதில் வேண்டாதவற்றைக் கூறுதல் கொடிய பாவச் செயல் ஆகும். பக்தர்கள் அவ்வாறு செய்வதனைத் தவிர்க்கவும்.
* நந்தி பகவானைத் தொடாமல் தூரத்தில் நின்று அடுத்தவர் காதில் விழாமல் கூற வேண்டும்.
* உற்சவருக்கு நைவேத்தியம், தீபாராதனை இவைகள் முடிந்த பின் தான் நம்மிடமுள்ள பால், வெல்லம் கலந்த அரிசி, பஞ்சாமிர்தம் ஆகியவற்றைத் தர ரேண்டும். இப்படித் தருவதாலும், அல்லது மற்றவர்கள் கொடுப்பதை வாங்கி உண்பதினாலும் நம்முடைய தோஷம், துன்பம், பாவம் நீங்க நன்மை பெறலாம்.
* உற்சவர் உள்வீதி உலா வரும்போது ஒவ்வொரு திசைகளிலும் தீபாராதனை செய்யும்போதும் இறைவனை வணங்கி அவருடைய திருநாமங்களையும், சிவபுராண பாடல்களையும் சொல்லிக் கொண்டோ அல்லது பாடிக்கொண்டோ வரவேண்டும். இதனால் தோஷம், பாபம், கஷ்டம், நீங்கி நன்மை பெறுவதுடன் வாழ்க்கையில் பல முன்னேற்றங்களும் ஏற்படும்.
* உற்சவர் உள்வீதி உலா முடிந்து நைவேத்தியம் செய்த பின்பு கோவிலின் உள்சென்று விடுவார். அப்போது நைவேத்தியம் செய்த சுண்டல், பொங்கல் போன்றவற்றைக் கொடுக்கவும் அல்லது கொடுப்பதை வாங்கி சாப்பிடுவதும் நல்லது. அது மட்டுமல்லாமல் உற்சவருக்கு அர்ச்சனை செய்வது நன்மை தரும்.
* பிரதோஷ நாளன்று கூடியவரை உப வாசம் இருந்து வர வேண்டும். அன்றைய தினம் தரிசனம் முடிந்த பின்னர் பால், பழம், மட்டும் அருந்தி வெறுந்தரையில் படுத்து உறங்கினால் பிரதோஷ பலன் முழுமையாகக்கிட்டும்.
- வழிபாடு முடிந்தபின் அன்னதானம் செய்ய வேண்டும்.
- வேதம் முதலிய பயிற்சியும் பிரதோஷ காலத்தில் செய்யக்கூடாது.
பிரதோஷ வழிபாட்டின் பயனாக வறுமை, பயம், மரண வேதனை முதலான பிரச்சினைகள் நீங்கும். அதுமட்டுமின்றி...
1. இன்பம் கிடைக்கும்.
2. மலடு நீங்கி மகப்பேறு பெறுவர்.
3. கடன் நீங்கித் தனம் நிறையப் பெறுவர்.
4. வறுமை ஒழியும்.
5. நோய் நீங்கி நலம் பெறுவர்.
6. அறியாமை நீங்கும்.
7. பாவம் தொலைந்து புண்ணியம் பெறுவார்கள்.
8. தடைகள் நீங்கித் திருமணம் நடைபெறும்.
9. சகல தோஷங்களும் நீங்கிச் சுகம் பெறுவர்.
10. அனைத்துக்கும் மேலாக முக்தி அடையவர்.
நந்தியெம் பெருமான் தன்னை நாடொறும் வணங்கு வோர்க்கு
புந்தியில் ஞானம் சேரும் பொலிவுறு செல்வம் கூடும்
குலமுறை தழைத்தே ஓங்கும் குணம்நிறை மக்கள் சேர்வர்
சிந்தையில் அமைதி தோன்றும் சிறப்புறும் வாழ்வு தானே!
பிரதோஷ காலத்தில் செய்யக்கூடாதவை
ஜீரணமாகாமல் விஷமாக மாறுவதால் சாப்பிடுதலும் யோகத்தை பேணுவதால் உறக்கமும், நல்லொழுக்கம் இயலாததால் பிரயாணமும், உடலை நிலைப்படுத்த முடியாததால் எண்ணைக் குளியலும், சிவனை, விஷ்ணு வணங்கும் நேரமாதலால் விஷ்ணுவைக் கண்டு வணங்குதலும், ஆன்மஹானம் வேண்டுவதால் பஞ்சாட்சரம் அல்லாத மற்ற விருப்பம் வேண்டும் (காம்ய) ஜபம் செய்தலும், அகத்தூய்மை வேண்டுவதால் தவம் செய்தலும், ஒரு நிலைப்பட்ட மனம் தேவையாதலால் வேதம் முதலிய பயிற்சியும் பிரதோஷ காலத்தில் செய்யக்கூடாது.
பிரதோஷ நோன்பு
பிரதோஷ நோன்பு இருப்பது மிகுந்த பலன் தரும். கஷ்ட நஷ்டங்கள் உடனே தீரும். அன்று அதிகாலையில் குளித்து, தூய உடை அணிந்து, நோன்பு தொடங்க வேண்டும். பகல் முழுக்க எதுவும் சாப்பிடக் கூடாது. பசி தாங்காதவர்கள் பால், பழம் சாப்பிட்டுக் கொள்ளலாம்.
மாலையில் பிரதோஷம் தொடங்கிய பின்பு சிவபூஜை பண்ண வேண்டும். வெல்லப் பொங்கல் படைக்க வேண்டும். நெய் விளக்கு ஏற்ற வேண்டும். வில்வ இலையால் அர்ச்சனை பண்ண வேண்டும்.
வழிபாடு முடிந்தபின், இரண்டு பேருக்காவது அன்னதானம் செய்ய வேண்டும். அதன்பின்தான் சாப்பிட வேண்டும். அன்னதானம் செய்யாவிட்டால் நோன்பு இருந்தும் பலன் இல்லை. சிவனே பிச்சாண்டிதானே! மாலையில் கோவிலுக்கு போய் வழிபாடு செய்வதும் நல்லது. அப்போது வெல்லப்பொங்கல் செய்து எடுத்து போக வேண்டும். முடியாவிட்டால் கார அரிசியில் வெல்லம் கலந்து நந்திக்கு படைக்க வேண்டும். அன்னதானம் செய்வது முக்கியம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்