search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arumugasamy inquiry commission"

    ஜெயலலிதா மரணம் குறித்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் புதன்கிழமை மீண்டும் தொடங்க உள்ளது. #JayaDeathprobe #OPanneerselvam
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி கமி‌ஷன் விசாரணை நடத்தி வருகிறது.

    விசாரணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மீண்டும் விசாரணை தொடங்க ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளது.

    இதையடுத்து, அப்பல்லோ டாக்டர்கள் 10 பேருக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி இருக்கிறது. இவர்கள் வருகிற புதன்கிழமை அல்லது அதற்கு முன்பு ஆஜராக வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. எனவே, புதன்கிழமை முதல் விசாரணை நடைபெறுவது உறுதியாகி உள்ளது.

    அப்பல்லோ ஆஸ்பத்திரி சார்பில் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆஸ்பத்திரி சார்பில் ஒரு மருத்துவ குழு அமைத்து அவர்களிடம் விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. எனவே, சுப்ரீம் கோர்ட்டை அணுக முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மீண்டும் ஆறுமுகசாமி கமி‌ஷன் விசாரணை தொடங்குகிறது. இதுபற்றி, சசிகலா தரப்பில் குறுக்கு விசாரணை செய்யும் ராஜா செந்தூர் பாண்டியன் கூறியதாவது, “துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் இதுவரை விசாரணைக்கு ஆஜராகவில்லை. தற்போது தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அவருக்கு உடனே சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும் என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் கோரிக்கை வைத்துள்ளோம்” என்றார். எனவே துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் சம்மன் அனுப்பப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. #JayaDeathprobe #OPanneerselvam
    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் வருகிற 1-ந்தேதி ஆஜராகி சாட்சியம் அளிக்கிறார். #OPS #JayaDeathProbe
    சென்னை:

    முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் கமி‌ஷன் விசாரணை நடத்தி வருகிறது.

    அப்பல்லோ ஆஸ்பத்திரி, எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் என பல்வேறு தரப்பினருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணை இறுதிக் கட்டத்தை நெருங்கிய நிலையில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் சிலருக்கு ஆணையம் சம்மன் அனுப்பியது. இதை ஏற்று ஓ.பன்னீர் செல்வம் வருகிற 1-ந்தேதி ஆணையத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்கிறார்.

    ஏற்கனவே அவர் 2 முறை ஆஜராக முடிவு செய்த தேதி கடைசி நேரத்தில் ஒத்தி வைக்கப்பட்டது. இப்போது 1-ந்தேதி ஆஜராக முடிவு செய்துள்ளார்.

    ஜெயலலிதா மரணம் விசாரணையில் ஓ.பன்னீர் செல்வம் சாட்சியம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஓ.பன்னீர்செல்வம், முதல்- அமைச்சர் ஆனார்.


    ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் பதவி விலகிய ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். ஜெயலலிதா மரணம் பற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும். இதற்காக தர்ம யுத்தத்தில் ஈடுபட்டுள்ளேன் என்று கூறி வந்தார். அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்கு முக்கிய நிபந்தனையாக இந்த கோரிக்கையை வைத்தார். இதைத்தொடர்ந்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

    இந்தநிலையில் விசாரணை ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் முதல் முறையாக சாட்சியம் அளிப்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்துச்செல்லாதது ஏன்? பார்வையாளர்களை அனுமதிக்க மறுத்தது யார்? என்பன உள்பட பல திடுக்கிடும் தகவல்களை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    விசாரணை ஆணையத்தில் சாட்சியம் அளிப்பவர்களிடம் சசிகலா வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை செய்து வருகிறார். அதுபோல் ஓ.பன்னீர்செல்வத்திடமும் அவர் குறுக்கு விசாரணை நடத்த முடிவு செய்துள்ளார். #OPS #JayaDeathProbe
    ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது அமைச்சரவை கூடியது உண்மை தான் என குறுக்கு விசாரணையின்போது அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாக, சசிகலாவின் வக்கீல் தெரிவித்தார். #Vijayabaskar #Rajasenthurpandian
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.

    ஆணையத்தில் விஜயபாஸ்கர் என்ன சொன்னார்? என்பது பற்றி ராஜா செந்தூர் பாண்டியன் கூறியதாவது:-

    சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நாங்கள் குறுக்கு விசாரணை நடத்தியபோது பல்வேறு கேள்விகளுக்கு ஒரு தெளிவான விடை கிடைத்தது.

    அவர் கூறும்போது ஜெயலலிதாவை டிரக்கியாஸ்டமி சிகிச்சைக்காக 7.10.2016 அன்று அழைத்து சென்ற போது தன்னை கடந்துதான் ஸ்டிரெச்சரில் ஜெயலலிதாவை கொண்டு சென்றதாகவும், நான் அவரை மிக அருகில் பார்த்தேன் என்றும் சாட்சியம் அளித்தார்.


    ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டு சிகிச்சை தேவையா? அமைச்சரவை கூடியதா? ஜெயலலிதாவுக்கு எப்படிப்பட்ட சிசிச்சை அளிக்கப்பட்டது? எய்ம்ஸ் டாக்டர்களுக்கு எப்படி தொடர்பு ஏற்பட்டது? மத்திய அரசு எந்த அளவு உறுதுணையாக இருந்தது? என்பது உள்ளிட்ட பல வி‌ஷயங்கள் குறித்து ராதாகிருஷ்ணன் என்னவெல்லாம் சொன்னாரோ அதையே அமைச்சர் விஜயபாஸ்கரும், விசாரணையில் குறிப்பிட்டு சொன்னார்.

    விஜயபாஸ்கரிடம் எனது தரப்பிலும், அப்பல்லோ தரப்பிலும் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. இதில் பல விஷயங்களை அவர் தெளிவாக பதிவு செய்தார்.

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே என்ன சொல்லி இருந்தார். இவர் என்ன சொன்னார்? என்பதற்கும் பதில் கிடைத்தது.

    டாக்டர் பாபு மனோகரன் சாட்சியம் அளித்தபோது, ஓ.பன்னீர்செல்வம் 7.10.2016 அன்று ஜெயலலிதாவை பார்த்ததாக கூறி இருக்கிறாரே என்று கேட்டதற்கு, மருத்துவர் சொல்லி உள்ளார் என்றால் அது சரியாகத்தான் இருக்கும் என்று விஜயபாஸ்கர் கூறினார்.

    29.12.2016 அன்று சசிகலாவை, ஓ.பன்னீர் செல்வம் உள்பட முழு மனதாக எல்லோருமே பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தார்கள் என்ற விவரம், 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முதலில் நடைபெற்றபோது எதிர்தரப்பினர் ஜெயலலிதாவின் உருவ பொம்மையை சவப்பெட்டியில் வைத்து பிரசாரம் செய்தார்கள் என்பது உள்பட பல வி‌ஷயங்களை அமைச்சர் விஜயபாஸ்கர் அடுக்கடுக்காக சொன்னார்.

    எய்ம்ஸ் டாக்டர்கள் என்ன செய்தார்கள், என்ன மாதிரி சொன்னார்கள் என்பது பற்றியும் பேசினார். நான் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பல கேள்விகள் கேட்டேன்.

    கேபினட் மீட்டிங் (அமைச்சரவை கூட்டம்) நடந்ததா? யார் தலைமையில் நடந்தது என்று கேட்டேன். அதற்கு அவர் அமைச்சர்கள் எல்லோரும் சேர்ந்துதான் முடிவெடுத்தோம் என்றார்.

    அன்றைக்கு 2-வது இடத்தில் இருந்த ஓ.பன்னீர் செல்வமும், 3-வது இடத்தில் இருந்த திண்டுக்கல் சீனிவாசனும், எடப்பாடி பழனிசாமியும் அங்கு இருந்தார்களா? என்று கேட்டதற்கு ஆமாம், எல்லோரும் இருந்தார்கள் என்று பதில் அளித்தார்.


    ஆனால் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கேபினட் மீட்டிங் நடக்கவே இல்லை என்றும், அதற்கு நான்தான் சான்று என்றும் கூறியிருந்தார். இன்று அதே அமைச்சரவையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் கேபினட் மீட்டிங் நடைபெற்றது என்று ஆணையத்தில் கூறி உள்ளார்.

    இதே கருத்தைத்தான் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கொடுத்த கடிதத்திலும் தெளிவாக உள்ளது.

    19.10.2016 அன்று கேபினட் மீட்டிங் நடைபெற்றது. எல்லா அமைச்சர்களும் சேர்ந்து அம்மாவுக்காக பிரார்த்தனை செய்து அவர் விரைவில் பூரண நலம் பெற்று முதல்வராக பணி தொடரவேண்டும் என்று போட்ட தீர்மானத்தையும் சொன்னார்.

    அந்த கேபினட் மீட்டிங்கிலும் ஓ.பன்னீர்செல்வம் உள்பட யாராவது ஜெயலலிதாவை வெளிநாடு சிகிச்சைக்கு கொண்டு போவது பற்றி பேசினார்களா? என்று கேட்டேன். அதற்கு அவர் அந்த மாதிரி எதுவும் பேசவில்லை. அந்த மாதிரி சூழ்நிலை எதுவும் எழவில்லை என்று கூறினார்.

    கேபினட் மீட்டிங்கை யார் கூட்டியது? இதற்கான நடைமுறை என்ன? என்று கேட்டதற்கு பொதுத்துறையிடம் இருந்து எல்லோருக்கும் கடிதம் வரும் என்றார்.

    பொதுத்துறை எப்படி கடிதம் அனுப்புவார்கள் என்று கேட்டதற்கு, தலைமை செயலாளர்தான் கடிதம் எழுதி அதை நடைமுறைப்படுத்துவார் என்பதை விஜயபாஸ்கர் தெளிவுபடுத்தினார். இப்படி பலதரப்பட்ட வி‌ஷயங்களை தெரிவித்தார்.

    ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை 2017 மார்ச் மாதம் 5, 6-ந்தேதிகளில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஒரு கமி‌ஷன் வைக்க வேண்டும் என்று சொல்லப்பட்ட வி‌ஷயத்தில் அவர் சொன்ன பேட்டியில், ‘தம்பி விஜயபாஸ்கர், விசாரிக்க வேண்டும் என்று சொன்னால் உன்னைத்தான்பா முதன் முதலில் விசாரிக்கவேண்டும். அதில் முதல் குற்றவாளியா நீதான் இருப்பாய்’ என்று சொன்ன வீடியோ பதிவு பற்றியும், அதற்கு அப்போது விஜயபாஸ்கர் கூறிய பேட்டியில் ‘கமி‌ஷன் போடும்போது முதலில் ஓ.பன்னீர்செல்வத்தைதான் விசாரிப்பார்கள்’ என்று கூறிய பேட்டி பற்றியும் விஜயபாஸ்கரிடம் கேட்டேன். அதற்கு அவர் இந்த பேட்டியும் உண்மை. அந்த பேட்டியும் உண்மை என்று கூறினார்.

    உடனே நான் இதுவும் உண்மை, அதுவும் உண்மை என்றால் எது சரியானது என்று கேட்டேன். அதற்கு அவர் கருத்து சொல்ல விருப்பமில்லை என்றார்.

    நீங்கள் கருத்து சொல்ல விருப்பம் இல்லாததற்கு 29.8.2017-ல் இருந்து இப்போது துணை முதல்-அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் உங்கள் அமைச்சரவையில் இருக்கிறாரே? அதுதான் காரணமா? என்று கேட்டேன். அதற்கும் கருத்து சொல்ல விருப்பம் இல்லை என்றார்.

    ஓ.பன்னீர்செல்வம் தொடர்பாக காழ்ப்புணர்ச்சியோடு தான் அவர் செயல்பட்டார். எல்லாம் அறிந்து கொண்டும், தெரிந்துகொண்டும் மருத்துவ சிகிச்சை பற்றி முழுமையாக தெரிந்திருந்தும் அவர் மறைத்து சொன்னார் என்பது போன்ற பல வி‌ஷயங்களை விஜயபாஸ்கர் வாயிலாகவே நான் சாட்சியமாக வாங்கி இருக்கிறேன்.

    விஜயபாஸ்கர் இதற்கு ஒத்துழைத்தார் என்று சொல்ல முடியாது. மிக கடினமாக பல கேள்விகளை போட்டு அதில் இருந்து கிடைக்க கூடிய பதில்களை வைத்து எங்களுக்கு உபயோகமாக இருக்கும் வகையில் ஆதாரங்களை உருவாக்க உள்ளேன்.

    இவ்வாறு ராஜா செந்தூர் பாண்டியன் கூறினார்.  #Vijayabaskar #Rajasenthurpandian
    அமைச்சர் சி.வி.சண்முகம் ஆதாரம் இன்றி பேசி வருவதால் சம்மன் அனுப்பி அவரை அழைத்து விசாரிப்பதற்கு கமி‌ஷனிடம் அனுமதி கேட்போம் என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார். #CVShanmugam
    சென்னை:

    ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், சிறப்பு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று பரபரப்பாக கூறி இருந்தார். அதுமட்டுமல்ல ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தபோது அமைச்சரவை கூடி விவாதிக்கவில்லை என்றும் கூறி இருந்தார்.

    நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமி‌ஷனில் சசிகலா தரப்பில் ஆஜராகி வரும் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியனிடம் இதுகுறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:-

    அமைச்சர் சி.வி.சண்முகம் ஆதாரம் இன்றி பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தி வருகிறார். ஜெயலலிதா அமைச்சரவையில் அன்று முதல் இன்று வரை இவர் அமைச்சராக இருந்தவர். தினமும் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்து சென்றவர். அவருக்கு எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல் பேசுகிறார்.


    சசிகலா குடும்பத்தினர் சாப்பிட்டு தான் இவ்வளவு பில் வந்ததாக அமைச்சர் குற்றம் சாட்டுகிறார். அது தவறு. அப்பல்லோவில் தரப்பட்ட டீ, காபி, சமோசா, வடை, பிஸ்கட், மதிய உணவு ஆகியவற்றை யார் யாரெல்லாம் சாப்பிட்டார்கள் என்பது பத்திரிகையாளர்களுக்கு தெரியும். காலையில் இருந்து இரவு வரை இருந்த அமைச்சர்களுக்கும் தெரியும்.

    ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது ஒருமுறை கூட அமைச்சரவை கூட்டம் நடைபெறவில்லை என்றும் ஒரு குற்றச்சாட்டை கூறி இருக்கிறார். அது தவறு.

    உண்மை என்னவென்றால் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தபோது 19.10.2016 அன்று கேபினட் கூட்டம் நடைபெற்றதாகவும், அதில் அம்மா பூரண நலம் பெற வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் இப்போதைய தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் 31.10.2018 அன்று ஆணையத்தில் கடிதம் சமர்ப்பித்துள்ளார்.

    ஆனால் வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெறுவது குறித்து அதில் எந்த அம்சமும் இடம்பெறவில்லை என தெரிகிறது. இதுபற்றி அப்போதைய தலைமை செயலாளராக இருந்த ராமமோகன ராவிடம் ஆணையத்தில் கேள்விகள் கேட்கப்பட்டது. அவரும் கேபினட் கூட்டம் நடந்ததை தெரிவித்துள்ளார்.

    எனவே அமைச்சர் சி.வி.சண்முகம் ஆதாரம் இன்றி பேசி வருவதால் சம்மன் அனுப்பி அவரை அழைத்து விசாரிப்பதற்கு கமி‌ஷனிடம் அனுமதி கேட்போம்.

    ஆறுமுகசாமி விசாரணை கமி‌ஷன் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார். எங்களுக்கு தெரிந்தவரை இடைக்கால அறிக்கை வழங்க ஆணைய விதிகளில் இடம் இல்லை என தெரிகிறது.

    சி.வி.சண்முகம் இப்போது புதுப்புது தகவல்களை கூறுவதை பார்க்கும் போது கமி‌ஷன் விசாரணை இன்னும் 6 மாதத்துக்கு மேல் செல்லும் என தெரிகிறது.

    சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் மருத்துவத்தை தாண்டி அரசியல் நடைபெறுவதாகவே கருத வேண்டி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #CVShanmugam #RajaSenthurpandian
    ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தில் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆஜர் ஆனார். #JayaDeathProbe #Radhakrishnan
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.

    இந்த ஆணையத்தில் ஜெயலலிதாவின் உதவியாளர்கள், பாதுகாவலர்கள், கார் டிரைவர்கள், அப்பல்லோ டாக்டர்கள், அரசு டாக்டர்கள், எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. இதுவரை 142 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இவர்களில் சிலரிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார். சசிகலா தனது வாக்குமூலத்தை வக்கீல் மூலம் கடந்த மாதம் தாக்கல் செய்தார்.

    தற்போது விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    இந்த நிலையில் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற விவரங்கள் அனைத்தும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு தெரியும் என்பதால் அவரிடம் விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்திருந்தது. அவர் இன்று ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.


    அதன்படி ராதாகிருஷ்ணன் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இதனிடையே ஜெயலலிதாவின் வீட்டுப் பணிப்பெண்களான தேவிகா, பூமிகா, சிவயோகம் ஆகியோரும் விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்கள்.

    வருகிற 18-ந்தேதி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடமும், 20-ந்தேதி துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடமும் ஆணையம் விசாரணை நடத்த உள்ளது. #JayaDeathProbe #Radhakrishnan
    ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்தில் இன்று அப்பல்லோ டாக்டர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். #JayaDeathProbe #ArumugasamyInquiryCommission
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமி‌ஷன் விசாரணை நடத்தி வருகிறது.

    ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரையும் அழைத்து விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.

    இந்த விசாரணைக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள் முரளிதர், ராஜ கோபால், பார்வதி பத்மநாபன் ஆகியோரை ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது.


    இருவரும் தோல் சிகிச்சை நிபுணர்கள் ஆவார்கள். இன்று காலை 10.30 மணியளவில் விசாரணை ஆணையத்துக்கு இருவரும் வந்தனர்.

    நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் அவர்கள் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சைகள் பற்றி தெரிவித்தனர்.

    2 மணி நேரத்துக்கும் மேலாக அவர்களிடம் விசாரணை நடைபெற்றது. #JayaDeathProbe #ArumugasamyInquiryCommission
    ஜெயலலிதாவின் ரத்தத்தில் பிரச்சனைக்குரிய அறிகுறிகள் எதுவும் இல்லை என்று அப்பல்லோ மருத்துவர் வாக்குமூலம் அளித்துள்ளார். #Jayalalithaa #JayaDeathProbe #ApolloHospital
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அப்பல்லோ மருத்துவமனையின் ரத்தவியல் துறை மருத்துவர் பிரபு, தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர் அசோக்குமார் ஆகியோர் நேற்று ஆஜராகினர்.

    ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது பல்வேறு காலகட்டங்களில் ரத்த மாதிரி எடுத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரத்தத்தில் சர்க்கரை அளவு, சிவப்பு, வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை போன்ற பல்வேறு பரிசோதனை முடிவுகளை மருத்துவர் பிரபு ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளார். அதன்படி, ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.


    இதுதொடர்பாக மருத்துவர் பிரபு வாக்குமூலம் அளித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு ‘ஸ்லோ பாய்சன்’ கொடுத்ததாக பேசப்பட்டு வரும் நிலையில், ‘ஜெயலலிதா உடலில் இருந்து எடுக்கப்பட்ட ரத்தத்தில் ஏதேனும் மாறுபாடுகள் இருப்பது பரிசோதனை மூலம் தெரிந்ததா?’ என்று பிரபுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு அவர், ‘சந்தேகப்படும்படியான மாறுதலோ, பிரச்சனைக்குரிய அறிகுறிகளோ ரத்தத்தில் இல்லை’ என்று பதில் அளித்தார். ரத்தத்தில் பாக்டீரியா கலந்ததன் மூலம் நோய் தொற்று ஏற்பட்டு ஜெயலலிதாவுக்கு இதயம் மற்றும் நுரையீரல் பாதிக்கப்பட்டதாக அப்பல்லோ தரப்பில் அளிக்கப்பட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவர் பிரபு, ரத்தத்தில் பாக்டீரியா கண்டறியப்படவில்லை என்றும், சிறுநீரில் தான் பாக்டீரியா கண்டறியப்பட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது.

    மருத்துவர் அசோக்குமார் தீவிர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த போது, ஜெயலலிதாவுக்கு 4 நாட்கள் மட்டும் சிகிச்சை அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வாக்குமூலம் அளித்தார். #Jayalalithaa #JayaDeathProbe #ApolloHospital #ArumugasamyInquiryCommission
    ஜெயலலிதா மரணம் குறித்து சர்ச்சை கருத்து கூறிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை, ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் பேசினார். #Thangatamilselvan #DindigulSreenivasan
    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் நேற்று முன்தினம் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ஜெயலலிதா ‘ஸ்லோ பாய்சன்’ (மெதுவாக கொல்லக்கூடிய விஷம்) கொடுத்து கொல்லப்பட்டதாக கூறினார். இந்த நிலையில் நேற்று அ.ம.மு.க. சார்பில் நிலக்கோட்டையில் உண்ணாவிரதம் நடைபெற்றது.

    இதில் அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் பேசுகையில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சை குறிப்பிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கவர்னரிடம் மனு கொடுத்த 18 பேரை, சபாநாயகர் தகுதிநீக்கம் செய்துள்ளார். ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க அரசுக்கு எதிராக வாக்களித்தவர்கள், சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. நான் அறிந்த வரை, ஜனவரிக்குள் 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வர வாய்ப்பு இல்லை.

    உள்ளாட்சி தேர்தலையே நடத்த துணிவு இல்லாதவர்கள், இடைத்தேர்தலை எப்படி நடத்துவார்கள். ஒருவேளை துணிச்சல் வந்து இடைத்தேர்தலை நடத்தினால், 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. டெபாசிட் இழக்கும். அ.தி.மு.க.வுடன் யாரும் கூட்டணி வைக்கமாட்டார்கள் என்பதால், நாடாளுமன்ற தேர்தலுடன் 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்தலாம்.


    தமிழகத்தில் இதுவரை எந்த முதல்-அமைச்சர் மீதும் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது இல்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமி மீது சி.பி.ஐ. விசாரணை வந்துள்ளது. அந்த அளவுக்கு தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டது.

    ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, இட்லி, இடியாப்பம் சாப்பிட்டார் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முன்பு கூறினார். ஒரு மாதம் கழித்து ஜெயலலிதா இட்லி, இடியாப்பம் சாப்பிடவில்லை என்றும், தான் பொய் சொன்னதாகவும் கூறினார். தற்போது ‘ஸ்லோ பாய்சன்’ கொடுத்து ஜெயலலிதா கொல்லப்பட்டதாக, திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருக்கிறார்.

    ‘ஸ்லோ பாய்சன்’ கொடுப்பதை கூட அறியாமல் சாப்பிடும் அளவுக்கு எப்போதும் ஜெயலலிதா இருந்தது இல்லை. என்ன மருந்து சாப்பிடுகிறோம் என்பதை ஜெயலலிதா அறிந்து வைத்திருப்பார். அந்த அளவுக்கு ஜெயலலிதா புத்திக்கூர்மையுடன் செயல்படுவார்.

    எனவே, விசாரணை ஆணையம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரம் திண்டுக்கல் சீனிவாசன் தவறாக பேசி இருந்தால் அவருடைய அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #Thangatamilselvan #DindigulSreenivasan
    அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை பார்த்த போது மயக்க நிலையில் இருந்தததாக ஜனாதிபதிக்கு முன்னாள் கவர்னர் வித்யாசாகர் ராவ் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். #Jayalalithaa #ApolloHospital #VidyasagarRao
    சென்னை:

    ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

    அவரை பார்ப்பதற்கு யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் மற்றும் அவரது மரணத்தில் மர்மங்கள் இருப்பதாக சந்தேகம் எழுந்தது.

    இது தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அவர் ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு சென்று பார்த்தவர்களிடம் தகவல் பெற்று விசாரணை நடத்தி வருகிறார். அந்த வகையில் அப்போது கவர்னராக இருந்த வித்யாசாகர் ராவிடமும் தகவல்கள் பெறப்பட்டதாக தெரிகிறது.

    இந்த நிலையில் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பாக ஜனாதிபதிக்கு 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ந்தேதி கவர்னர் வித்யாசாகர் ராவ் எழுதிய கடிதம் தற்போது வெளியாகி உள்ளது. அந்த கடிதத்தில் வித்யாசாகர் ராவ் கூறி இருப்பதாவது:-

    ஜெயலலிதா 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந்தேதி காய்ச்சல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது. மறுநாள் நான் அவர் விரைவில் குணமாக வேண்டி கடிதம் அனுப்பினேன். அதற்கு அவர் நன்றி தெரிவித்து பதில் கடிதம் அனுப்பி இருந்தார்.

    இந்த நிலையில் செப்டம்பர் 26-ந்தேதி ஜெயலலிதா பெயரில் வெளியான அரசாணையில் சாலை விபத்தில் பலியான 11 பேருக்கு நிதி உதவி அளிப்பதாக அறிக்கை வெளியானது. அதுபோல 27-ந்தேதி அவர் மருத்துவமனையில் இருந்தபடியே சுப்ரீம்கோர்ட்டில் நடைபெற இருக்கும் காவிரி வழக்கு விசாரணை தொடர்பாக அதிகாரிகளுக்கு சில அறிவுரைகள் வழங்கியதாகவும் தகவல்கள் வெளியானது.

    அதற்கு அடுத்த நாள் ஜெயலலிதா பெயரில் அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு போனஸ் வழங்கும் அறிவிப்பு ஜெயலலிதா பெயரில் வெளியாகி இருந்தது. ஆனால் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவின.

    ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி வதந்தி பரப்பியதற்காக பிரான்சில் வசிக்கும் தமிழச்சி என்பவர் மீது தமிழக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இத்தகைய சூழ்நிலையில் 1-10-2016 அன்று நான் மும்பையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்தேன்.

    உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றேன். நேரிடையாக ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறைக்கு சென்று பார்த்தேன். அப்போது அவர் மயக்க நிலையில் இருந்தார்.


    இதையடுத்து முதல்- அமைச்சருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களிடமும், அப்பல்லோ மருத்துவமனை தலைவரிடமும் நான் கலந்துரையாடினேன். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றி கேட்டு அறிந்தேன்.

    பிறகு தலைமை செயலாளரை அழைத்து முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவமனையில் இருந்து சரியான மருத்துவமனை அறிக்கை வெளியிடுவதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினேன். மேலும் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை கண்காணிக்குமாறும் உத்தரவிட்டேன்.

    இதுதொடர்பாக அன்றே அறிக்கை ஒன்றையும் நான் வெளியிட்டேன். நான் அப்பல்லோ மருத்துவமனைக்கு அன்று சென்று விட்டு வந்தபிறகு அப்பல்லோ மருத்துவமனை சார்பில் தினமும் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி மருத்துவ அறிக்கைகள் தொடர்ந்து வெளியிடப்பட்டன.

    ஜெயலலிதாவுக்கு வழங்கப்படும் ஆண்டிபயாடிக் சிகிச்சைகள் பற்றி அப்பல்லோ மருத்துவமனை தெளிவாக தகவல்கள் வெளியிட்டது.

    ஜெயலலிதா உடல் நிலை நன்றாக தேறி வருவதாகவும் அவர் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் மேலும் சில நாட்களுக்கு மட்டும் அவர் மருத்துவமனையில் தங்கி இருக்க வேண்டியதுள்ளது என்றும் அப்பல்லோ மருத்துவமனை ஒரு குறிப்பை வெளியிட்டது. மேலும் லண்டன் டாக்டர் ரிச்சர்ட்பீலே மூலம் சிகிச்சை அளிப்பது பற்றியும் அப்பல்லோ மருத்துவமனை தகவல் வெளியிட்டது.

    அதன் பிறகு ஜெயலலிதா உடல்நிலை மற்றும் சிகிச்சைகள் தொடர்பான வதந்திகள் பற்றிய சந்தேகங்கள் கணிசமாக குறைந்தன. இதன் தொடர்ச்சியாக ஜெயலலிதா விரைவில் குணமாக எதிர்க்கட்சிகளும் வாழ்த்து தெரிவித்தன.

    இதற்கிடையே ஜெயலலிதா உடல்நிலை குறித்து டிராபிக் ராமசாமி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒருபொது நல வழக்கு தொடர்ந்து இருந்தார். அவர் தனது மனுவில், "ஜெயலலிதா முழுமையாக குணம் அடையும் வரை இடைக்கால முதல்-அமைச்சர் ஒருவரை நியமனம் செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தார்.

    அந்த வழக்கு 2016-ம் ஆண்டு அக்டோபர் 6-ந்தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதற்கிடையே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் சென்னைக்கு வந்து ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றி ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்கள்.

    நானும் சென்னையில் முகாமிட்டுள்ளேன். இந்த பிரச்சனை தொடர்பாக நான் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் கவர்னர் வித்யாசாகர் ராவ் குறிப்பிட்டுள்ளார். #Jayalalithaa #ApolloHospital #VidyasagarRao
    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை தீபாவளி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #JayaDeathProbe
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

    சேப்பாக்கம் எழிலகம் கட்டிடத்தில் நடைபெறும் இந்த ஆணையத்தில் தினமும் சாட்சிகளிடம் விசாரணை நடக்கிறது. இதில் இதுவரை 150-க்கும் மேற்பட்டவர்களிடம் குறுக்கு விசாரணை நடந்துள்ளது.

    சமீபத்தில் டி.டிவி. தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செல்லும் என்று தீர்ப்பு வந்துள்ளதால் அந்த வழக்கில் மேல் முறையீடு செய்வதற்காக வக்கீல்கள் தீவிரமாக இருப்பதால் இன்றும், நாளையும் ஆறுமுகசாமி விசாரணை ஆணைய வழக்குகளில் ஆஜராக இயலாது என்று கூறி ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதை ஏற்றுக்கொண்ட ஆணையம் இன்றும், நாளையும் விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.

    ஏற்கனவே விசாரணை ஆணையத்துக்கு 4, 5,6, 7 ஆகிய நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் இனிமேல் ஆணைய விசாரணை தீபாவளிக்கு பிறகு தான் நடைபெறும் என்று வக்கீல்கள் தெரிவித்துள்ளனர். #JayaDeathProbe
    ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகராவ் ஆஜராகி விளக்கம் அளித்தார். #RamaMohanaRao
    சென்னை:

    ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    இதில் அப்பல்லோ டாக்டர்கள், அரசு டாக்டர்கள், ஜெயலலிதாவின் உறவினர்கள், பாதுகாவலர்கள், உதவியாளர்கள், அரசு செயலாளர்கள் என 150-க்கும் மேற்பட்டவர்கள் ஆஜராகி தங்களுக்கு தெரிந்த தகவல்களை கூறி உள்ளனர்.

    இவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சசிகலாவின் வக்கீல்கள் குறுக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகனராவ் ஏற்கனவே விசாரணை ஆணையத்தில் 3 முறை ஆஜராகி இருந்தார்.

    இப்போது அவரிடம் மேலும் சில விவரங்களை கேட்பதற்கு ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது. அதன் அடிப்படையில் ராமமோகனராவ் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். #RamaMohanaRao
    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று அப்பல்லோ டாக்டர்கள் நரசிம்மன், தங்கராஜ், பால் ரமேஷ் ஆகியோர் ஆஜர் ஆனார்கள். #ApolloDoctors #JayaDeath
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று அப்பல்லோ டாக்டர்கள் நரசிம்மன், தங்கராஜ், பால் ரமேஷ் ஆகியோர் ஆஜர் ஆனார்கள். அவர்களிடம் வக்கீல்கள் குறுக்கு விசாரனை மேற்கொண்டனர்.

    விசாரணை ஆணையத்தில் இதுவரை 140-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடந்துள்ள நிலையில் அரசியல் கட்சி பிரமுகர்களிடம் இன்னும் விசாரணை நடைபெறாமல் உள்ளது. எனவே அவர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட உள்ளதாக வக்கீல்கள் தெரிவித்தனர். #ApolloDoctors #JayaDeath
    ×