search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ayodhya Ram Temple Kumbabhishekam"

    • அயோத்தி கும்பாபிஷேக விழா நேற்று விமர்சியாக நடந்தது.
    • ராமர் சிலைக்கு முன்பாக பீடத்தில் சமர்ப்பித்து பூஜை செய்யப்பட்டது.

    திருச்சி:

    அயோத்தி கும்பாபிஷேக விழா நேற்று விமர்சியாக நடந்தது. முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி ராமர் தொடர்பான கோவில்களில் சாமி தரிசனம் செய்தார். அந்த வகையில் ராமரின் குலதெய்வமான ஸ்ரீரங்கம் ரங்கநாதரை கடந்த 20-ந் தேதி நேரில் தரிசனம் செய்தார்.

    அப்போது அயோத்தி ராமருக்கு ரங்கநாதருக்கு சாத்தப்பட்ட பட்டு வேஷ்டிகள், தாயாரின் திருப்பாவாடை, திருமஞ்சன கைலி போன்ற பகுமானங்கள் பட்டர்கள் சார்பில் பிரதமரிடம் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று காலை அயோத்தியில் பால ராமர் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட பின்னர் நடந்த சிறப்பு பூஜையின் போது பிரதமரிடம் வழங்கப்பட்ட ரங்கநாதருக்கு சாற்றிய பட்டு வஸ்திரம் பால ராமர் சிலைக்கு முன்பாக பீடத்தில் சமர்ப்பித்து பூஜை செய்யப்பட்டது.

    இந்த புகைப்படங்களை ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கநாதர் பக்தர்கள், பொதுமக்கள், சமூக ஊடகங்களில் பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    மேலும் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்ட பாலராமர் சிலைக்கு மேலே ஸ்ரீரங்கம் ரங்கநாதர் போன்று பள்ளி கொண்ட பெருமாள் சிலை அமைக்கப்பட்டுள்ளதையும் அவர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

    • நவீன வசதிகளுடன் ரெயில் நிலையம் கட்டப்பட்டுள்ளது.
    • அயோத்தி நகரத்தை சீரமைக்க வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன.

    அயோத்தி நகரத்தை கட்டமைக்க ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. அதில் தற்போது மட்டும் ரூ.66 ஆயிரம் கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அடுத்த 3 ஆண்டுகளில் இன்னும் ரூ.34 ஆயிரம் கோடிக்கு பணிகள் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

    நகரில் அத்தியாவசிய பணிகளான குடிநீர், பாதாள சாக்கடை, தெரு விளக்கு மற்றும் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. கோவில் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் சுமார் ரூ.1,000 கோடி அளவுக்கு அழகுப்படுத்தும் பணிகள் நடக்கின்றன. அயோத்தி நகரை கட்டமைக்க மத்திய, மாநில அரசுகள் போட்டி போட்டு கொண்டு திட்டங்களை நிறைவேற்றி வருகின்றன.

    தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் ரூ.37 ஆயிரம் கோடி செலவில் அயோத்தி நகரை இணைக்கும் அனைத்து சாலைகளும் நான்கு வழிச்சாலைகளாக மாற்றப்பட்டு உள்ளன. இதுதவிர மாநில அரசின் நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.4 ஆயிரத்து 500 கோடிக்கு அயோத்தியில் சாலைகள், மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    நகரில் உள்ள சரயு நதிக்கரை அழகுப்படுத்தப்பட்டு உள்ளது. அங்குள்ள ராமர் படித்துறை சீரமைக்கப்பட்டு, இரவு நேரங்களில் மின்விளக்கு அலங்கார காட்சி நடத்தப்படுகிறது. சரயு நதி மூலம் 14 லட்சம் ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறும் வகையில் ரூ.9 ஆயிரம் கோடியில் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    மேலும் சுமார் ரூ.350 கோடி செலவில், மரியதா புருஷோத்தம் ஸ்ரீ ராம் சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டு உள்ளது. அதே போல் அயோத்தி ரெயில் நிலையம் ரூ.430 கோடியில் சீரமைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு விமான நிலையங்களை விட நவீன வசதிகளுடன் இந்த ரெயில் நிலையம் கட்டப்பட்டு உள்ளது.

    * அயோத்தியில் உள்ள ஆராய்ச்சிக் கழகத்துக்கு சர்வதேச அந்தஸ்து பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

    * அயோத்தியில் அமைச்சரவை கட்டிடத்தை முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நடத்தி அந்த நகருக்கு சிறப்பு சேர்த்துள்ளார்.

    * அயோத்தியை இணைக்கும் சாலைகள் தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டுள்ளன.

    * அயோத்தியில் 1407 ஏக்கரில் பசுமை நகரம் உருவாக்க ரூ.2182 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    * அயோத்தியில் ரூ.1,463 கோடி செலவில் அதி நவீன வசதிகளுடன் மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது.

    * அயோத்தியில் சக கஞ்ச் பகுதியில் இருந்து நயாகாட் சாலை வரை 1.94 கி.மீ. தூரத்துக்கு ரூ.845 கேடி செலவில் ராமர் பாதை உருவாக்கப்பட்டுள்ளது.

    * அயோத்தியில் ரூ.246 கோடி செலவில் ராஜரிஷி தசரதர் பெயரில் தன்னாட்சி அந்தஸ்து கொண்ட மருத்துவக் கல்லூரி உருவாக்கப்பட்டுள்ளது.

    * அயோத்தி ரெயில் நிலையம் ரூ.241 கோடி செலவில் சீரமைத்து புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    * அயோத்தியில் உள்ள அனைத்து மின் கம்பிகளும் ரூ.167 கோடி செலவில் பூமிக்குள் புதைக்கப்பட்டுள்ளன.

    * அயோத்திக்குள் ரெயில் பாதைகள் மீது ரூ.74 கோடியில் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

    * அயோத்தி முழுக்க ரூ.72 கோடி செலவில் பாரம்பரிய அலங்கார கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளன.

    * மகரிஷி அருந்ததி பெயரில் ரூ.68 கோடி செலவில் வாகனம் நிறுத்தும் இடங்கள் கட்டப்பட்டுள்ளன.

    * பக்தி பாதையில் இருந்து ராமஜென்ம பூமி வரை 29 கி.மீ. தொலைவுக்கு ரூ.68 கோடி செலவில் பாதை கட்டப்பட்டுள்ளது.

    * ரூ.65 கோடி செலவில் அயோத்தி முழுவதும் சாலைகள் அகலப்படுத்தப்பட்டுள்ளன.

    * கலெக்டர் அலுவலகம் அருகே ரூ.37 கோடி செலவில் பிரமாண்டமான கார் நிறுத்தம் கட்டப்பட்டுள்ளது.

    * தீப உற்சவம் காட்டும் போது பக்தர்கள் வசதியாக உட்கார்ந்து பார்ப்பதற்காக ரூ.23 கோடியில் காலரிகள் கட்டப்பட்டுள்ளன.

    * ரூ.18 கோடியில் கழவுநீர் அகற்ற நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    * அயோத்திக்குள் வரும் 4 திசை சாலைகளிலும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் அழகுபடுத்தப்பட்டுள்ளன.

    * அயோத்தி முழுக்க முக்கிய இடங்களில் 410 பகுதிகளில் ரூ.12 கோடி செலவில் சூரிய சக்தி மின்சாரம் மூலம் விளக்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

    * அயோத்தியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 264 விதமான திட்டப்பணிகளை மத்திய- மாநில அரசுகளின் பல்வேறு துறைகள் மேற்கொண்டுள்ளன.

    * அயோத்தியை 2031-ம் ஆண்டுக்குள் பூலோக சொர்க்கமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 34 நிறுவனங்களிடம் 250 திட்டப்பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளை ரூ.80 ஆயிரம் கோடி செலவில் செய்து முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    * எதிர்காலத்தில் லக்னோவில் இருந்து அயோத்திக்கு காரில் சுமார் 2 மணி நேரத்துக்குள் செல்லும் வகையில் சாலைகள் மேம்படுத்தப்பட உள்ளன.

    * அயோத்தியில் செய்யப்படும் வசதிகள் மற்றும் பக்தர்கள் வருகை காரணமாக அந்த ஊர் மக்களின் வாழ்வாதாரம் கணிசமாக உயர உள்ளது.

    • ராமர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
    • சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடத்தப்பட்டது.

    நெல்லை:

    ராமஜென்ம பூமியான அயோத்தியில் பால ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதனையொட்டி அயோத்தி நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ராமர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. நெல்லை மாவட்டத்தில் உள்ள ராமர் கோவில்களிலும் இன்று சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடந்தது. அதன் ஒரு பகுதியாக சுத்தமல்லி விலக்கு வ.உ.சி. நகரில் உள்ள ஸ்ரீ ஜெய் மாருதி ஞான தர்ம பீடத்தில் சிறப்பு அபிஷேக தீபாராதனையுடன் நாம ஜெபம் நடைபெற்றது. மேலச்சேவல் நவநீதகிருஷ்ணன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

    மேலும் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள், பெண்களுக்கு கோலப் போட்டி நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    பிரசித்தி பெற்ற வரலாற்று சிறப்புமிக்க கோவில்களில் ஒன்றான நெல்லையை அடுத்த அருகன்குளம் காட்டு ராமர் கோவிலில் இன்று அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் மற்றும் கோவில் புகைப்படத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    தொடர்ந்து கோவிலில் அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டு சீதா பிராட்டி சமேத ஸ்ரீ ராமபிரான், லட்சுமணர் மற்றும் ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    பின்னர் பால், தயிர், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • ஒவ்வொரு தூண்கள் மற்றும் சுவர்களில், தெய்வங்களின் சிலை உள்ளது.
    • சிறப்புமிக்க, பழங்காலத்து கிணறு ஒன்று உள்ளது.

    1. யோத்தியில் ராமர் கோவில் நாகர் பாரம்பரிய முறையில் 3 மாடிகளை கொண்டதாக கட்டப்பட்டு உள்ளது.

    2. கோவில் 380 அடி நீளத்திலும், 250 அடி அகலத்திலும், 161 அடி உயரத்திலும் உள்ளது.

    3. ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் கொண்டது. அதில் 392 தூண்களும், 44 கதவுகளும் உள்ளன.

    4. கோவிலில் பிரதான கருவறையில் ராமர் சிலையும், முதல் தலத்தில் ஸ்ரீராம் தர்பாரும் அமைக்கப்பட்டு உள்ளது.

    5. நித்திய மண்டபம், ரேங் மண்டபம், சபா மண்டபம், பிரார்த்தனை மண்டபம் மற்றும் கீர்த்தனை மண்டபம் என 5 மண்டபங்கள் உள்ளன.

    6. கோவிலின் ஒவ்வொரு தூண்கள் மற்றும் சுவர்களில், தெய்வங்களின் சிலை உள்ளது.

    7. கோவிலின் கிழக்கு திசையில் இருந்து 32 படிக்கட்டுகளை பயன்படுத்தி பக்தர்கள் கோவிலுக்குள் நுழையலாம்.

    8. கோவிலில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்களின் வசதிக்காக சாய்வுதளம் மற்றும் லிப்ட் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    9. கோவில் வளாகத்தின் நான்கு மூலைகளிலும் சூரிய பகவான், பகவதி அம்மன், விநாயகர், மற்றும் சிவ பெருமான் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட நான்கு கோவில்கள் உள்ளன.

    10. அதேபோல் வடக்கு பகுதியில் அன்னபூரணியின் ஆலயமும், தெற்குப் பகுதியில் அனுமன் ஆலயமும் உள்ளன.

    11. கோவில் அருகே, வரலாற்று சிறப்புமிக்க, பழங்காலத்து கிணறு ஒன்று உள்ளது.

    12. கோவில் வளாகத்தில், மகரிஷி வால்மீகி, மகரிஷி வசிஷ்டர், மகரிஷி விஸ்வாமித்ரர், மகரிஷி அகத்தியர், நிஷாத் ராஜ், மாதா ஷப்ரி மற்றும் தேவி அஹில்யாவின் மனைவி ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட சன்னதிகள் உள்ளன.

    13. கோவில் வளாகத்தின் தென்மேற்கு பகுதியில், குபேர் திலாவில், ஜடாயு சிலை, பகவான் சிவனின் பழங்கால கோவில் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

    14. கோவிலில் கட்டுமானத்தில் எங்குமே இரும்பு பயன்படுத்தப்படவில்லை.

    15. கோவிலின் அடித்தளம் 14 மீட்டர் தடிமனான ரோலர்-காம்பாக்ட் செய்யப்பட்ட கான்கிரீட் அடுக்குடன் கட்டப்பட்டுள்ளது, இது செயற்கை பாறையின் தோற்றத்தை அளிக்கிறது.

    16. கோவிலின் நிலத்தடி ஈரப்பதத்தில் இருந்து பாதுகாப்பதற்காக, கிரானைட்டை பயன்படுத்தி 21 அடி உயர பீடம் கட்டப்பட்டுள்ளது.

    17. கோவில் வளாகத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், நீர் சுத்திகரிப்பு நிலையம், தீ பாதுகாப்புக்கான நீர் வழங்கல் மற்றும் ஒரு சுயாதீன மின் நிலையம் உள்ளது.

    18. கோவிலில் 25,000 பேர் தங்கும் வசதி கொண்ட யாத்ரீகர்கள் வசதி மையம் (PFC) கட்டப்பட்டு வருகிறது, இது யாத்ரீகர்களுக்கு மருத்துவ வசதிகள், லாக்கர் வசதியை வழங்கும்.

    19. கோவில் வளாகத்தில் குளியலறை வசதிகள், கழிப்பறைகள், கை கழுவும் தொட்டிகள், திறக்கும் குழாய்கள் போன்ற வசதிகளும் உள்ளது.

    20. கோவில் முற்றிலும் பாரதத்தின் பாரம்பரிய மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டமைக்கப்படுகிறது.

    21. 70 ஏக்கர் நிலப்பரப்பில் 70 சதவீதம் பசுமையாக இருப்பதால், சுற்றுச்சூழல்-நீர் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து கட்டப்படுகிறது.

    22. கோவிலைச் சுற்றி, 732 மீட்டர் நீளத்திலும் 14 அடி உயரத்திலும் சுற்றுச்சுவர் உள்ளது.

    23. கோவில் 57 ஆயிரத்து 400 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

    24. ஆலயத்தின் ஒரு பகுதியில் ராமர் பற்றிய அருங்காட்சியகம் கட்டப்பட உள்ளது.

    25. ஆலய வளாகத்துக்குள் 2 ஏக்கரில் மெழுகு பொம்மைகள் கொண்ட அருங்காட்சியகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

    26. அயோத்தி சரயு நதிக்கரையில் உணவு கூடங்கள், பொழுதுபோக்கு கூடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

    27. அயோத்திக்கு வர இருக்கும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளை கருத்தில் கொண்டு ஆங்காங்கே குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    28. அயோத்தியில் ஒரு இடத்தில் மிகப்பெரிய திறந்தவெளி உணவு மண்டபம் திறக்கப்பட உள்ளது. அனைத்து மாநில உணவுகளும் கிடைக்கும் வகையில் அங்கு தரமான ஓட்டல்கள் செயல்படும்.

    29. அயோத்தி நகரம் 8 விதமான அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

    30. செயற்கை நுன்னறிவு தொழில்நுட்பம் கொண்ட முதல் நகரமாக அயோத்தி இருக்கும்.

    31. உத்தரபிரதேசத்தின் முதல் சூரிய சக்தி நகரமாகவும் அயோத்தி மாற்றப்பட்டு வருகிறது.

    32. அயோத்தி தீப உற்சவம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

    33. அயோத்தி கோவில் வளாகம் மொத்தம் 71 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

    34. அயோத்தி கோவில் கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்படும் மார்பிள் கற்களில் 95 சதவீதம் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வெட்டி எடுத்துக் கொண்டு வரப்பட்டுள்ளது.

    35. கோவில் முக்கியமான கட்டுமான பணிகளுக்கு 17 ஆயிரம் கிரானைட் கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிரானைட் கல்லும் சுமார் 2 டன் எடை கொண்டது.

    36. மொத்தம் கோவில் அடித்தளம் பகுதியில் 21 லட்சம் கியூபிக் அடி கிரானைட் கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    37. நிபுணர்களின் ஆலோசனைப்படி கட்டுமான இணைப்புகளில் சாதாரண சிமெண்ட் கலவை பயன்படுத்து வதை தவிர்த்துள்ளனர்.

    38. கோவில் அடித்தளம் 12 மீட்டர் ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்படடு கட்டப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வை மேற்கொண்டு ஆலோசனைகளை வழங்கியது சென்னை ஐ.ஐ.டி. நிபுணர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    39. ராமர் ஆலய அஸ்திவாரத்தில் பயன்படுத்தப்பட்ட மணல் 28 நாட்களில் வலிமையான கல்லாக மாறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

    40. கட்டுமானத்தின் ஒவ்வொரு பகுதியும் நவீனத்துடன் அதே சமயத்தில் பாரம்பரிய தொழில்நுட்பத்தை கடைபிடித்து கட்டப்படுவதால் அடுத்த ஆயிரம் ஆண்டுகள் வரை எந்த பழுதுபார்ப்பு பணிகளுக்கும் அவசியம் இருக்காது.

    41. அயோத்தியில் 6.5 ரிக்டர் அளவு கோலுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டாலும் ஆலயத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் கட்டுமானம் நடந்து வருகிறது.

    42. அயோத்தி ஆலயத்தை 3 பிரிவுகளாக கட்டி முடிக்க உள்ளனர். தற்போது முதல் பிரிவு மட்டுமே தயாராகி வருகிறது. அடுத்து இன்னும் 2 பிரிவுகள் கட்டப்பட வேண்டியுள்ளது.

    43. ராமர் கோவில் வளாகத்தில் 7 உப சன்னதிகள் கட்டப்பட உள்ளன.

    44. கருவறையில் மூலவர் சிலை 51 இஞ்ச் உயரம் கொண்டதாக இருக்கும்.

    45. மூலவர் ாாமர் சிலை 25 அடி உயர பீடத்தில் நிறுவப்படும். எனவே நீண்ட வரிசையில் தூரத்தில் இருந்து வரும் போதே ராமரை பார்த்து வழிபட வழிவகை செய்யப்படுகிறது.

    46. மூலவர் சிலை அருகில் ஒவ்வொரு பக்தரும் அதிகபட்சம் 20 வினாடிகள் தான் நின்று வழிபட முடியும்.

    47. 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு முன் அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகள் அனைத்தையும் முடித்துவிட திட்டமிடப்பட்டுள்ளது.

    48. அயோத்திக்கு 2019-ம் ஆண்டுவரை தினமும் சராசரியாக 6 ஆயிரம் பக்தர்கள் வந்தனர். இந்த ஆண்டு தினமும் 60 ஆயிரம் பேர் வருவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் தினமும் 1 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

    49. அயோத்தி ராமர் கோவிலில் மூலவர் சிலை பிரதிஷ்டை நடைபெறுவதை முன்னிட்டு வெள்ளிக்கிழமை முதல் 11 நாள் விரதத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி உள்ளார்.

    50. ராமர் கோவில் மொத்த கட்டுமான செலவு ரூ.18,000 கோடி.

    • தெலுங்கானாவில் இருந்து 2 தங்க பாத காலணிகள்.
    • காலனி மோதிரத்தில் பச்சைக்கல் பொருத்தப்பட்டு உள்ளது.

    அயோத்தி ராமர் சிலைக்கு பொருத்துவதற்காக தெலுங்கானாவில் இருந்து 2 தங்க பாத காலணிகள் 12 கிலோ 600 கிராம் எடையில் விசேஷமாக தயார் செய்யப்பட்டுள்ளன. இதில் வெவ்வேறு முத்திரைகள் பதிக்கப்பட்டு உள்ளன.இடது பாத காலணியின் மேல் பகுதியில் கோமாதா, ஸ்வஸ்திக், கல்ப விருட்சம், யானை, அங்குசம், விஷ்ணுவின் மச்ச அவதாரம், கமல பூ மற்றும் 5 சின்ன பூக்கள் செதுக்கப்பட்டு உள்ளன. காலனி மோதிரத்தில் பச்சைக்கல் பொருத்தப்பட்டு உள்ளது.

    வலது பாத காலணியின் மேல் பகுதியில் சங்கு சக்கரம், சூரியன், சந்திரன், அங்குசம், கல்ப விருட்சம், ஜண்டா, கலசம், மற்றும் பத்மம் செதுக்கப்பட்டு உள்ளது. காலணியின் உள்பகுதியில் பஞ்ச உலோகத்தால் உருவாக்கப்பட்டு உள்ளது. 25 நாட்களாக 6 பேர் கொண்ட கலைஞர்கள் இந்த தங்க பாதத்தை தயார் செய்து உள்ளனர்.

    சாஸ்திர சம்பிரதாயப்படி தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும் எவ்வளவு நாட்கள் ஆனாலும் மெருகு குறையாமல் இருக்க பிருத்தியேகமாக தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    • அயோத்தியில் ராமருக்காக ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளது.
    • கும்பாபிஷேக நேரத்தில் சொல்ல வேண்டிய மந்திரம்.

    உத்திரப்பிரதேச மாநிலத்தில் அயோத்தியில் ராமர் பிறந்த அந்த பூமியில், ராமருக்காக ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளது. அந்த கோவில் கும்பாபிஷேகமானது இன்று நடைபெறுகிறது. இது நம்மில் பல பேருக்கு தெரிந்த விஷயம் தான். இருந்தபோதிலும் நாம் எல்லோரும் அயோத்திக்கு சென்று அந்த கும்பாபிஷேகத்தை பார்க்க கூடிய பாக்கியத்தை பெற முடியாது. நிறைய தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பாகும்.

    வாய்ப்பு கிடைப்பவர்கள் பார்த்து அந்த ராமபிரானின் ஆசிர்வாதத்தை பெறலாம். இதோட மட்டுமல்லாமல் ராமருக்கு கும்பாபிஷேகம் நடக்கக்கூடிய அன்றைய தினம், ராமபிரானின் ஆசீர்வாதத்தை முழுமையாக பெற, கும்பாபிஷேகத்தை நேரடியாக பார்த்த பலனை பெற, சொல்ல வேண்டிய ஒரு வரி மந்திரத்தை பற்றியும், நம் வீட்டில் செய்ய வேண்டிய சின்ன ஆன்மீகம் சார்ந்த வழிபாடு பற்றியும், இந்த பதிவை மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.

    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நேரத்தில் சொல்ல வேண்டிய மந்திரம்

    காலையில் வீட்டில் இருக்கும் பெண்கள் குளித்துவிட்டு உங்கள் வீட்டில் பெருமாளின் படம், ராமரின் பட்டாபிஷேகப்படம், அல்லது அனுமனின் திருவுருவப்படம் எது இருந்தாலும் சரி, அதை சுத்தபத்தமாக துடைத்து அதற்கு துளசி இலைகளை சூட்டிவிடுங்கள். பிறகு ஒரு சின்ன மண் அகல் விளக்கில் முதலில் நெய் ஊற்றி பஞ்சி திரி போட்டு தீபம் ஏற்றி `ஜெய் ஸ்ரீ ராம்' என்ற மந்திரத்தை சொல்லலாம். அப்படி இல்லை என்றால் `ஸ்ரீ ராம ஜெயம்' என்ற மந்திரத்தை சொல்லலாம்.

    இந்த இரண்டில் எந்த மந்திரத்தைச் சொன்னாலும் தவறு இல்லை. இரண்டு மந்திரத்தையும் மாற்றி மாற்றி சொன்னாலும் தவறு இல்லை. 27 முறை இந்த மந்திரத்தை சொல்லுங்கள். பிறகு அந்த தீபம் உங்களுடைய வீட்டில் திங்கட்கிழமை முழுவதும் இரவு 7 மணி வரை அணையா தீபமாக ஏற்றுவது ரொம்ப ரொம்ப சிறப்பு. முடியாதவர்கள் 1 மணி நேரம் தீபத்தை ஏற்றி வைத்து, குளிர வைக்கலாம் தவறு கிடையாது.

    முதல் 1 மணி நேரம் நெய்யில் தீபம் ஏற்றுபவர்கள், அடுத்தடுத்து நெய் ஊற்றி நாள் முழுவதும் விளக்கு எரிய வைக்க முடியாது என்ற சூழ்நிலையில் இருப்பவர்கள், நல்லெண்ணெய் ஊற்றி அந்த தீபத்தை நாள் முழுவதும் ஏற்றி வைக்கலாம். கும்பாபிஷேகம் நடக்கும் சமயத்தில் உங்களுடைய வீட்டில் இந்த தீப ஒளி சுடர் பிரகாசமாக இருந்தால் அந்த ஸ்ரீராமரை இந்த தீபச்சுடரின் மூலம் நீங்கள் தரிசனம் செய்யலாம்.

    சரியாக கும்பாபிஷேகம் நடக்கப் போகும் சமயத்தில் `ஸ்ரீ ராம ஜெயம்' மந்திரத்தை நம் மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருந்தால், அயோத்திக்கு சென்று ராமரை தரிசனம் செய்யவில்லை என்றாலும் சரி, அந்த ராமபிரானின் பரிபூரண ஆசியை நம்மால் பெற முடியும்.

    பூஜை அறையில் ஏற்ற வேண்டிய விளக்கை, சரியாக ராமபிரானுக்கு கும்பாபிஷேகம் நடைபெறக்கூடிய அந்த நேரத்திலும் ஏற்றுக்கொள்ளலாம் தவறு கிடையாது. காலையில் இருந்து நம் வீட்டில் தீபம் ஏற்றி, ராம மந்திரத்தை மனதிற்குள் உச்சரிப்பது, ராமபிரானை நினைப்பது நமக்கு கோடி புண்ணியத்தை தரும்.

    • மகா விஷ்ணுவின் 7-வது அவதாரமாக பார்க்கப்படுபவர் ஸ்ரீ ராமர்.
    • ராம அவதாரத்தில் சாதாரண மனிதனாகவே வாழ்ந்தார்.

    மகா விஷ்ணுவின் 7-வது அவதாரமாக பார்க்கப்படுபவர் ஸ்ரீ ராமர். அவர் தனது ராம அவதாரத்தில் சாதாரண மனிதனாகவே வாழ்ந்தார் என்று புராணங்கள் கூறுகிறது.

    ராம ராஜ்ஜியம்

    அயோத்தியை தலைநகராக கொண்டு கோசல நாட்டை ஆட்சி செய்த தசரதரின் மகனான ராமர், கடவுள் விஷ்ணுவின் 7-வது அவதாரமாக பார்க்கப்படுகிறார். அவர் ஜனக மன்னரின் மகளான சீதாதேவியை மணமுடித்து அயோத்தியில் வசித்து வந்தார். தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்ற வாக்கை, வாழ்வியல் முறையாக கடைபிடித்து வந்த ராமர், அயோத்தி அரசராக முடிசூடும் வேளையில் தந்தையின் கட்டளையால் வனவாசம் சென்றார்.

    என் கணவர் இருக்கும் இடமே எனக்கு அயோத்தி என்று ராமருடன், சீதா தேவியும் கானகம் புறப்பட்டார். அண்ணனுக்கு சேவகன் நானே என்று ராமரின் தம்பியான லட்சுமணனும் அவர்களுடன் புறப்பட்டார்.

    கானகத்தில் தங்கி இருந்தபோது யாரும் இல்லாத நேரத்தில், இலங்கை வேந்தனான ராவணன், சீதா தேவியை இலங்கைக்கு கடத்தி சென்றான். அந்த ராவணனை இலங்கைக்கு சென்று வதம் செய்து, சீதாவை மீட்டு ராமேசுவரம் வருகிறார் ராமர்.

    சிவனை வழிபாடு செய்த பின், ராமர் மீண்டும் அயோத்திக்கு திரும்பி பட்டாபிஷேகம் செய்து பல ஆண்டுகள் நல்லாட்சி செய்கிறார். அவரது ஆட்சியில் மக்கள் சீரும், சிறப்புடனும் வாழ்ந்தனர். இத்தகைய சிறப்புமிக்க ஆட்சியைதான் மக்கள் ராம ராஜ்ஜியம் என்று சொல்கின்றனர்.

    ராம ஜென்ம பூமியில் கோவில்

    கடவுள் ராமருக்கு இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் கோவில்கள் இருக்கின்றன. ஆனால் அவரது பிறந்த பூமியான அயோத்தியில் ஒரு ராமர் கோவில் கூட இல்லை என்பதுதான் இந்துக்களின் ஏக்கமாக இருந்தது. ஆனால் இந்த ஏக்கத்தை போக்கும் விதமாக, அயோத்தியில் ரூ.2 ஆயிரம் கோடியில் மிகப்பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு உள்ளது.

    அயோத்தியில் ராமர் பிறந்தார் என்று நம்பப்படும் இடத்தில் தான் இந்த கோவில் கட்டப்பட்டு உள்ளது. 3 தளங்கள், 161 அடி உயர கோபுரத்துடன் கட்ட திட்டமிடப்பட்ட ராமர் கோவிலின் 70 சதவீத கட்டுமான பணிகள் முடிந்து விட்டன. அழகிய வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்ட இந்த கோவிலின் கருவறையில் வைக்கப்படும் சிலை மட்டும் சாதாரணமாக இருக்குமா என்ன?

    ஆம்! அதுவும் சிறப்பு வாய்ந்ததுதான். இதற்காக மைசூருவில் சுமார் 300 கோடி ஆண்டு பழமை வாய்ந்த, தனித்தன்மை வாய்ந்த பாறை வெட்டி எடுக்கப்பட்டது. அதனை மைசூருவை சேர்ந்த சிற்பிஅருண் யோகி ராஜ் என்பவரால் வடிவமைக்கப்பட்டது.

    5 வயதுடைய பால ராமர் நின்ற கோலத்தில் இருக்கும் அந்த சிலை, கோவில் கருவறையில் வைக்கப்பட்டது. சிலையில் கண்கள்  மட்டும் மஞ்சள் துணியால் மூடிவைக்கப்பட்டுள்ளது.

    கண்களை திறக்கும் ராமர்

    சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் ராமர் கோவில் கும்பாபிஷேம் இன்று நடைபெற உள்ளது. ராமரின் கண்களில் மூடப்பட்டுள்ள துணி அகற்றும் பிரான் பிரதிஷ்டை விழா, பிரதமர் மோடி தலைமையில் இன்று பகல் 12.20 மணிக்கு நடக்கிறது. இந்த விழாவில் ராமர் கண்ணை மறைத்து கட்டப்பட்டுள்ள மஞ்சள் நிற துணி அகற்றப்பட்டு, சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

    ×