search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "boarding plane"

    கனடாவில் விமானம் ஏறிய சில நிமிடங்களில் 185 பயணிகளுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவுக்கான காரணம் பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. #185passengersick #boardingplane #QuebecCityairport
    ஒட்டாவா:

    கனடா நாட்டின் கியூபெக் சிட்டி விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஃபோர்ட் லாடெர்டேல் விமான நிலையத்துக்கு புறப்பட்டு செல்ல ஏர் டிரான்ஸாட் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் நேற்று காலை (உள்ளூர் நேரப்படி) சுமார் 11 மணியளவில் தயாராக இருந்தது.

    பயணிகள் ஒருவர்பின் ஒருவராக வந்து தங்களது இருக்கைகளில் அமரத் தொடங்கினர். சில நிமிடங்களில் அவர்கள் அனைவரும் கண் எரிச்சல், மயக்கம், குமட்டல் மற்றும் வாந்தி போன்ற உபாதைகளால் பாதிக்கப்பட்டனர்.



    விபரமறிந்து விரைந்துவந்த மருத்துவ குழுவினர் பயணிகள் அனைவரையும் பாதுகாப்பாக கீழே இறக்கி, முதலுதவி மற்றும் உரிய சிகிச்சை அளித்தனர். மிகவும் ஆபத்தான நிலையில் காணப்பட்ட சுமார் 10 பயணிகள் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதைதொடர்ந்து, அந்த விமானம் ஓடுபாதையில் இருந்து  நகர்த்தி, தனிப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

    வழக்கமாக பறக்க தொடங்குவதற்கு முன்னதாக விமானத்தின் மூக்கு, இறக்கை மற்றும் வால் பகுதிகளில் படிந்துள்ள பனிக்கட்டி அல்லது பனித்துகள்கள் ஓடுபாதையில் பாய்ந்து சீறிக்கிளம்ப முடியாத நிலையில் என்ஜின்களின் உந்துசக்தியை குறைத்து விடும்.

    இதை தவிர்க்கும் வகையில் பனிப்பிரதேசங்களில் இருந்து புறப்பட்டு செல்லும் விமானங்கள் மீது சில வாகனங்கள் சூழ்ந்து நின்றுகொண்டு வெந்நீரில் கலக்கப்பட்ட ‘கிளைக்கால்’ எனப்படும் ரசாயன கலவையை விமானத்தின் மூக்கு, இறக்கை மற்றும் வால் பகுதிகளில் தெளிப்பதுண்டு.

    இதன்மூலம் படிந்துள்ள பனிக்கட்டிகள் உருகி விடுவதுடன் பறக்கும்போது மேலும் சில மணி நேரங்களுக்கு மீண்டும் பனி படியாமல் தடுக்கப்படும். இதை விமானப் போக்குவரத்து தொடர்பான தொழில்நுட்பச் சொல்லில் ‘டிஐசிங்’ என்று அழைப்பதுண்டு.

    அவ்வகையில் ‘டிஐசிங்’ செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட தெளிப்பான்களின் நெடி காற்றுப்போக்கிகள் வழியாக விமானத்தின் உட்பகுதிக்குள் நுழைந்ததால் பயணிகளுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. எனினும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.  #185passengersick  #boardingplane #QuebecCityairport  #deicing

    ×