search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bullet Nagarajan"

    அதிகாரிகளை மிரட்டி ஆடியோ வெளியிட்ட பெரியகுளம் ரவுடி ‘புல்லட்‘ நாகராஜன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். #BulletNagarajan
    தேனி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலத்தை சேர்ந்தவர் ‘புல்லட்‘ நாகராஜன் (வயது 53). பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர், மதுரை சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு ஊர்மிளாவுக்கு மிரட்டல் விடுத்து ‘வாட்ஸ் அப்‘பில் ஆடியோ வெளியிட்டு இருந்தார்.

    மேலும், பெரியகுளம் தென்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனகலாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தும், தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் மற்றும் போலீசாரை விமர்சித்தும் ஆடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.



    இந்நிலையில் பெரியகுளத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த நாகராஜன் கடந்த 10-ந் தேதி கைது செய்யப்பட்டார். அவர் இடுப்பில் வைத்திருந்த 2 கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அவர் வைத்திருந்த பையில் துப்பாக்கிகள், பத்திரிகையாளர், வக்கீல் பெயரில் போலி அடையாள அட்டைகள், நீதிபதியின் பெயரில் ரப்பர் ஸ்டாம்ப், சார்பு நீதிபதி என்ற வாசகத்துடன் கூடிய அட்டை ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து வேலூர் சிறைக்கு அவர் மாற்றப்பட்டார். அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு, போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் ‘புல்லட்’ நாகராஜனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் பல்லவி பல்தேவ் நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு, சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.  #BulletNagarajan 
    பெண் எஸ்.பி, இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் விடுத்து நேற்று தேனி பெரியகுளத்தில் கைது செய்யப்பட்ட புல்லட் நாகராஜன் திருச்சி சிறையில் இருந்து வேலூர் சிறைக்கு இன்று மாற்றப்பட்டுள்ளார். #BulletNagarajan
    திருச்சி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல மங்கலத்தைச் சேர்ந்தவர் நாகராஜன் என்ற புல்லட் நாகராஜன் (வயது 53) ரவுடியான புல்லட் நாகராஜன் மீது நகைபறிப்பு, வழிப்பறி, கொலை மிரட்டல், உள்பட 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரை மத்திய சிறையில் கொலை வழக்கில் கைதாகி இருந்த ரவுடி நாக ராஜனின் அண்ணனை பரிசோதிக்க வந்த பெண் டாக்டரை அவர் தகாத வார்த்தையில் பேசியதால் அங்கு சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டாக உள்ள ஊர்மிளா, நாகராஜன் அண்ணன் மீது நடவடிக்கை எடுத்தார்.

    இது குறித்து ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்ததும் புல்லட் நாகராஜனிடம் அவரது அண்ணன் தெரிவித்தார். இதனால் புல்லட் நாகராஜன் போலீஸ் சூப்பிரண்டு ஊர்மிளா மீது ஆத்திரம் அடைந்தார்.

    உடனே வாட்ஸ்அப்பில் பேசி சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு ஊர்மிளாவிற்கு புல்லட் நாகராஜன் மிரட் டல் விடுத்தார். தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக புல்லட் நாகராஜனின் வாட்ஸ்அப் மிரட்டல் வைரலாக பரவியது. அதே போன்று புல்லட் நாகராஜன் தென்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனகலாவிற்கும் வாட்ஸ்அப் மூலம் மிரட்டல் விடுத்து பேசினார்.

    இது குறித்து சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு ஊர்மிளா மற்றும் தென்கரை இன்ஸ்பெக்டர் மதனகலா ஆகியோர் மதுரை போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசிர்வாதத்திடம் புகார் செய்தனர்.

    சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டையே ரவுடி நாகராஜன் வாட்ஸ் அப்பில் மிரட்டலாக பேசி வெளியிட்ட சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புல்லட் நாகராஜனை உடனே கைது செய்ய டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து தனிப்படை புல்லட் நாகராஜனை கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டை நடத்தியது.

    இந்த நிலையில் நேற்று பெரியகுளம் அருகே மூன்றாந்தல் என்ற கிராமம் அருகில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற புல்லட் நாகராஜனை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுருளிராஜா, போலீஸ் ஏட்டு காசிராஜன் ஆகியோர் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    அப்போதும் புல்லட் நாகராஜன் கத்தியை காட்டி போலீசை மிரட்டியுள்ளார். அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 2 டம்மி துப்பாக்கிகள், 3 செல்போன்கள், 2 கத்திகள், ரூ.10 லட்சம் கள்ள நோட்டுக்கள், 10-க்கும் மேற்பட்ட வித விதமான அடையாள அட்டைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    9 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்ட புல்லட் நாகராஜன் நேற்று மாலை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட பிறகு இரவு 7 மணிக்கு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டான். அவனுடன் மற்ற வழக்கில் கைதாகி சிறையில் உள்ள விசாரணை கைதிகள் உள்ளனர்.

    மதுரை சிறை போலீஸ் சூப்பிரண்டை மிரட்டியதால் புல்லட் நாகராஜன் மதுரை சிறைக்கு கொண்டு செல்லப் படாமல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    70 வழக்குகள், போலீஸ் அதிகாரியையே மிரட்டியவன் என்பதால் மற்ற கைதிகள் புல்லட் நாகராஜனை மிரட்சியுடன் பார்த்துள்ளனர்.  ஆனால், புல்லட் நாகராஜன் மிகவும் சோகத்துடன் இருந்தான். தன்னுடன் பழக்கத்தில் உள்ள போலீஸ் ஏட்டு ஒருவர் சரக்கு வாங்கி கொடுத்து போதை ஏற்றி விட்டு பெண் போலீஸ் சூப்பிரண்டுக்கு மிரட்டல் விடுக்க வைத்து மாட்டிவிட்டு விட்டதாக கூறியுள்ளான்.

    மது போதையில் போலீஸ் அதிகாரியையும், இன்ஸ்பெக்டரையும் வாட்ஸ்அப்பில் பேசி மிரட்டியதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் போலீஸ் அடியில் இருந்து தப்பிப்பதற்கு ரவுடி புல்லட் நாகராஜன், மது போதையில் ஏட்டு பேசி சிக்க வைத்து விட்டதாக கூறி நாடகம் ஆடுகிறானா? அவருடன் தொடர்பில் உள்ள போலீஸ் ஏட்டு யார் என தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே புல்லட் நாகராஜன் மீது உள்ள 70 வழக்குகளை வைத்து அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே புல்லட் நாகராஜன் ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    போலீசாரால் கைது செய்யப்படும் போது நல்ல உடல் நிலையுடன் காணப்பட்ட புல்லட் நாகராஜன் திருச்சி சிறையில் அடைக்க போலீசார் அழைத்து வரும் போது காலில் பெரிய காயம் பட்டதுபோல் நடந்து வந்துள்ளான்.

    இரவு முழுவதும் மரண பீதியில் தவித்த புல்லட் நாகராஜன் மற்ற கைதிகளால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் இருந்துள்ளான். கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதால் ஏராளமான எதிரிகள் இருப்பதாகவும், அதில் சிலர் திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகளாக அடைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியானது.

    எனவே அவர்களால் புல்லட் நாகராஜன் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என போலீசார் சந்தேகித்தனர். இது தொடர்பாக திருச்சி மத்திய சிறை போலீசார் மேலிட சிறைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் இருந்து புல்லட் நாகராஜனை வேலூர் மத்திய சிறைக்கு மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதுதொடர்பான கடிதம் இன்று காலை திருச்சி மத்திய சிறை காவலர்களுக்கு வழங்கப்பட்டது. உடனே புல்லட் நாகராஜனை வேலூர் மத்திய சிறைக்கு மாற்றும் நடவடிக்கையில் இறங்கினர்.

    காலை 11.30 மணிக்கு சிறையில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்ட புல்லட் நாகராஜனை போலீசார் வேனில் ஏற்றினர். அப்போது அவன் மிகுந்த உடல் சோர்வுடன், தயங்கியவாறு நடந்து வந்துள்ளான். பின்னர் அவனை அங்கிருந்து போலீசார் வேலூர் அழைத்து சென்றனர்.
    மாவட்ட கலெக்டர், போலீஸ் பெண் அதிகாரிகளுக்கு போன் மூலம் மிரட்டல் விடுத்து இன்று போலீசாரிடம் சிக்கிய புல்லட் நாகராஜனிடம் இருந்து ரூ.1 கோடி கள்ள நோட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #BulletNagarajan
    தேனி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலத்தை சேர்ந்தவர் நாகராஜன் என்ற ‘புல்லட்’ நாகராஜன். போலீஸ் தரப்பில் இவரை பிரபல ரவுடி என்று சொல்லப்படுகிறது. இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு ஊர்மிளாவுக்கு மிரட்டல் விடுத்து ஆடியோ வெளியிட்டு இருந்தார். அந்த ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

    அதையடுத்து, பெரியகுளம் தென்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனகலாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தும், ‘புல்லட்’ நாகராஜன் ஆடியோ வெளியிட்டு இருந்தார். இவை சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், அவருடைய மற்றொரு ஆடியோவும் வெளியாகி சமூக வலைதளங்களில் மீண்டும் பரபரப்பை பற்ற வைத்தது. இந்த முறை தேனி மாவட்ட கலெக்டரையும், மாவட்ட போலீசாரையும் விமர்சித்து பேசி இருந்தார்.

    தினம் தினம் பரபரப்பை ஏற்படுத்தி வந்த ரவுடி நாகராஜன், தேனி பெரிய குளம் டி.எஸ்.பி. ஆறுமுகத்தால் விரட்டிச் சென்று இன்று கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டுள்ள நாகராஜன் தென்கரை காவல்நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு போலீசார் விசாரணைக்கு உள்படுத்தினர்.

    இதற்கிடையே, அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 1 கோடி ரூபாய் கள்ள நோட்டு, நீதிபதி உடைகள், நீதிபதி முத்திரை, 4 கத்தி, 2 துப்பாக்கி, ஜாமீன் வழங்கிடும் ஆவணங்கள், வருவாய் துறை தொடர்பான முத்திரைகள் கைப்பற்றப்பட்டன.
    மதுரை சிறைத்துறை பெண் சூப்பிரண்டை தொடர்ந்து, பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் ரவுடி ‘புல்லட்’ நாகராஜன் கொலை மிரட்டல் விடுத்துள்ள ஆடியோ வெளியாகி உள்ளது. #BulletNagarajan #WomenInspector
    தேனி:

    தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலத்தை சேர்ந்த ரவுடி நாகராஜன் என்ற ‘புல்லட்’ நாகராஜன். இவர் மதுரை சிறைத்துறை பெண் போலீஸ் சூப்பிரண்டு ஊர்மிளாவுக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில், தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனகலாவுக்கும் ‘வாட்ஸ்-அப்’ மூலம் ‘புல்லட்’ நாகராஜன் கொலை மிரட்டல் விடுத்துள்ள ஆடியோ வெளியாகி உள்ளது.



    ஆடியோவில் ‘புல்லட்’ நாகராஜன் பேசியிருப்பதாவது:-

    இன்ஸ்பெக்டருக்கு நடிகை விஜயசாந்தி என்று நினைப்பா? சரியான பெண்ணாக இருந்தால் இரவு தனியாக ரெய்டுக்கு வரவேண்டியது தானே. 10 போலீஸ்காரர்களை வைத்துக்கொண்டு அடிப்பது பெரிது கிடையாது. இன்னொரு வாயாடி ஜெயமங்கலத்தில் இருந்தது. அதை இப்பதான் டிரான்ஸ்பர் பண்ணிவிட்டேன். ஒவ்வொரு ஆளையும் தூக்கிவிட்டுக்கொண்டே இருக்க முடியாது. இது நிரந்தர பணி நீக்கம் ஆகிவிடும்.

    இன்னொரு முறை என்னுடைய மண்ணில் உள்ள பெரியகுளத்துக்காரங்களை யாரை கைவைத்தாலும் நேரடியாக நான் வருவேன். பெண்ணாக இருப்பதால் ஒரு வாய்ப்பு தருகிறேன். 2-வது வாய்ப்பு தர நான் ஒன்றும் கடவுள் கிடையாது. பாவம் அனாதையாக ஈ மொய்த்துக்கிடக்கும் அளவுக்கு ஆகிவிடாதீர்கள்.

    உன் வீட்டை சுற்றிலும் 100 போலீஸ் போட்டுக்கோ. என்னை பிடித்துவிட்டால் நான் அதே இடத்தில் இறந்துவிடுகிறேன். உங்களுக்கு எங்கே தொட்டால் வலிக்கும் என்பது எனக்கு தெரியும். இனிமேல் என்னுடைய பசங்ககிட்ட வாலாட்டினால் நான் எடுக்கிற ஆக்‌ஷன் பயங்கரமாக இருக்கும்.

    இது, சினிமா கிடையாது. நீங்கள் ஒன்றும் நடிகை விஜயசாந்தி கிடையாது. சினிமா எல்லாம் பார்க்காதீர்கள். டியூட்டியை மட்டும் பாருங்கள். இல்லையென்றால் புழல் சிறைக்கு அனுப்பிவிடுவேன்.

    இவ்வாறு அந்த ஆடியோவில் பேசியுள்ளார்.

    இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மதனகலாவிடம் கேட்டபோது, ‘சில நாட்களுக்கு முன்பே இந்த ஆடியோ எனக்கு வந்தது. உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பி உள்ளார். இப்போது சமூக வலைதளங்களிலும் வெளியாகி உள்ளது. நான் இதுவரை புகார் எதுவும் அளிக்கவில்லை. எதற்காக இப்படி பேசுகிறார் என்று தெரியவில்லை’ என்றார்.  #BulletNagarajan #WomenInspector 
    ×