search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Central and state governments"

    • ஜவுளிப்பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
    • ஏற்றுமதி செய்யப்பட்ட பின்னலாடைகளின் மதிப்பு குறித்த விவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

    திருப்பூர் :

    இந்திய ஜவுளித்துறையில் திருப்பூர் மாவட்டம் முக்கிய தொழில் மையமாக உள்ளது. பின்னலாடை உள்ளிட்ட பல்வேறு ஜவுளிப்பொருட்கள் திருப்பூரில் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால் ஏராளமான அந்நிய செலாவணி வருவாயை திருப்பூர் ஈட்டித் தருகிறது.

    எனினும் அண்மைக்காலமாக திருப்பூரில் இருந்து ஜவுளி ஏற்றுமதி சரிந்து வருவதாக தெரிகிறது. இதுகுறித்து ஏற்கனவே திருப்பூர் ஜவுளித் துறையினர் குறை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் திருப்பூரில் இருந்து பின்னலாடை ஏற்றுமதி சரிந்துள்ளதாக மத்திய அரசே தெரிவித்துள்ளது.

    திருப்பூரில் இருந்து கடந்த 4 காலாண்டுகளாக ஏற்றுமதி செய்யப்பட்ட பின்னலாடைகளின் மதிப்பு குறித்த விவரத்தை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி சரிந்துள்ளதாக தெரிகிறது.

    2021ம் ஆண்டு அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் திருப்பூர் ஜவுளித்துறையின் பின்னலாடை ஏற்றுமதி மதிப்பு 110.7 கோடி டாலர். அதன்பின் 2022ம் ஆண்டு ஜனவரி - மார்ச் காலாண்டில் பின்னலாடை ஏற்றுமதி மதிப்பு 116 கோடி டாலராக இருந்துள்ளது.

    இதன்பின்னர் 2022 ஏப்ரல் - ஜூன் காலாண்டில் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி 120.3 கோடி டாலராக இருந்துள்ளது. ஆனால் கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி 97.4 பில்லியன் டாலராக சரிந்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல் மூலமாக தெரிகிறது.

    ஏற்கனவே கடந்த சில மாதங்களாக திருப்பூரில் இருந்து ஏற்றுமதி குறைந்துள்ளதாகவும், ஆர்டர்களின் எண்ணிக்கை சரிந்துவிட்டதாகவும் ஜவுளித்துறையினர் கூறிவந்தனர்.

    முதலில் நூல் விலை உயர்வால் ஜவுளித்துறையினர் நஷ்டத்தை சந்தித்தனர். பின்னர் உலக அளவில் பொருளாதார மந்தநிலை தொடங்கிவிட்டதாக அச்சம் எழுந்தது. இதனால் திருப்பூருக்கு வரும் ஜவுளி ஏற்றுமதி ஆர்டர்கள் குறைந்தன. இதன் காரணமாக ஏற்றுமதி வாயிலான வருவாய் குறைந்து ஜவுளித்துறையினர் தவித்து வருகின்றனர்.

    இந்த சூழலில் திருப்பூர் ஜவுளித்துறையினருக்கு உதவும் வகையில் மத்திய-மாநில அரசுகள் சில சலுகைகளை வழங்க வேண்டும் என ஜவுளித்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×