search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Charity Department grant request"

    • கோவில்களில் ஓதுவாா் பயிற்சிப் பள்ளிகள் தொடங்கப்படும்.
    • 50 கோவில்களில் 100 இசைக் கலைஞா்கள் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்படுவா்.

    சென்னை:

    தமிழக சட்டப்பேரவையில் இந்துசமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதங்களுக்கு பதில் அளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்ட அறிவிப்புகளில் கூறியிருப்பதாவது:-

    ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் பயன்பெறும் 17 ஆயிரம் கோவில்களுக்கு வைப்புத் தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயா்த்தி அளிக்கப்படும். இதற்காக ரூ.85 கோடி அரசு நிதியாக அளிக்கப்படும்.

    இந்த திட்டத்தில் நிகழாண்டு ஆயிரம் நிதி வசதியற்ற கோவில்களும் இணைக்கப்படும். அத்தகைய கோவில்களில் உள்ள அா்ச்சகா்களுக்கு மாத உதவித்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

    ஆறு கோவில்களில் பக்தா்களுக்கான ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ஏதுவாக பெருந்திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு ரூ.177.10 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

    நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் நிகழாண்டில் அழகா்கோவில், மருதமலை முருகன் கோவிலுக்கு விரிவுபடுத்தப்படும்.

    பழனியில் உள்ள முருகன் கோவில் சாா்பாக நடத்தப்படும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு காலை சிற்றுண்டியுடன் இனி மதிய உணவும் வழங்கப்படும். நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் ஐந்து கோவில்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

    அதன்படி, கோவை ஈச்சனாரி விநாயகா் கோவில், சோளிங்கா் லட்சுமி நரசிம்மசுவாமி கோவில், குலசை முத்தாரம்மன் கோவில், கும்பகோணம் உப்பிலியப்பன் கோவில், திருச்சி தாயுமானசுவாமி கோவில்களில் நாள் முழுவதும் பிரசாதம் அளிக்கப்படும்.

    ஒருவேளை மட்டும் அன்னதானம் வழங்கும் திட்டம், சென்னை மதுரவாயல் மாா்க்கசகாயேஸ்வரா், புழல் திருமூல நாதசுவாமி, திருச்சி லால்குடி பிடாரி அய்யனாா், பெரம்பலூா் அபராதரட்சகா், திருப்பூா் அழகு நாச்சியம்மன், கடலூா் காரத்தொழுவு அழகா் கோவில்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

    சென்னை மாநகரம் மற்றும் புறநகரில் அமைந்துள்ள 115 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படும். கோவை லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், தென்காசி இலஞ்சிகுமாரா் கோவிலுக்கு புதிய தங்கத்தேர்களும், திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயா், குமாரவயலூா் முருகன், மணப்பாறை நல்லாண்டவா், திருநாகேஸ்வரம் கோவில்களுக்கு புதிதாக வெள்ளித்தோ்கள் செய்யப்படும்.

    ராமேசுவரம், காசி ஆன்மிகப் பயணத்துக்கு நிகழாண்டு 420 மூத்த குடிமக்கள் அழைத்துச் செல்லப்படுவா். கடலூா் மாவட்டம் வடலூா் அருட்பிரகாச வள்ளலாா் அவதரித்த இல்லம் மறுசீரமைத்து கட்டப்படும்.

    மேலும், 22 வழிபாட்டு மடங்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். கோவில்களின் ஆவணங்களை காக்கும் நோக்குடன் முதல் கட்டமாக முக்கிய கோவில்களின் ஆவணங்கள் பாதுகாக்கப்படும்.

    மயிலாப்பூா் கபாலீஸ்வரா், ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி, ஸ்ரீவில்லிபுத்தூா் நாச்சியாா், சங்கரன்கோவில் சங்கர நாராயணசுவாமி, கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோவில்களின் கோபுரங்கள், விமானங்கள் இரவு நேரங்களில் ஒளிரும் வகையில் ஒளிரூட்டப்படும்.

    19 கோவில்களில் புதிய ராஜகோபுரங்களும், 17 கோவில்களில் புதிதாக திருமண மண்டபங்களும், 23 கோவில்களில் புதிய வணிக வளாகங்களும், 35 கோவில்களில் அடிப்படை வசதிகளும், 12 கோவில்களில் அா்ச்சகா்கள், பணியாளா்கள் குடியிருப்புகளும் ஏற்படுத்தப்படும்.

    பக்தா்களின் வசதிக்காக, பழனி, திருவண்ணாமலையில் புதிதாக தங்கும் விடுதிகள் அமைக்கப்படும். திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் ரூ.23 கோடியில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும்.

    திருவாரூா் தியாகராஜ சுவாமி, திருவாலங்காடு ஆலாங்காட்டு ஈசுவரா் கோவில்களில் மகா சிவராத்திரி விழா நடத்தப்படும். 50 கோவில்களில் 100 இசை கலைஞா்கள் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்படுவா். பழனி, சென்னை மயிலாப்பூா் கோவில்களில் ஓதுவாா் பயிற்சிப் பள்ளிகள் தொடங்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறி உள்ளார்.

    ×