search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chithannavasal cave"

    புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் மலை மீது சுனையில் மூழ்கியிருந்த சிவலிங்கத்திற்கு 26 ஆண்டுகளுக்கு பிறகு பூஜையும், வழிபாடும் செய்யப்பட்டது.
    புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள சித்தன்னவாசலில் இரு வேறு மலையில் வரலாற்று சிறப்பு வாய்ந்த குகை ஓவியம், சமணர் படுக்கைகள் உள்ளன. இவ்விரண்டு மலைகளுக்கும் இடையே உள்ள மலையில் சுனை ஒன்று உள்ளது. இது நாவல்சுனை என்று அழைக்கப்படுகிறது.

    இந்த சுனையானது சுமார் 10 அடி ஆழம் கொண்டது. இதன் அடியில் ஒரு பக்கத்தில் குடவறையில் சிவலிங்கம் உள்ளது. இந்த சுனையில் எப்போதும் தண்ணீர் இருப்பதால் இந்த சிவலிங்கம் தண்ணீரிலே மூழ்கிய நிலையிலேயே இருக்கும்.

    மலையை குடைந்து சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இது சுமார் 500 ஆண்டுகள் பழமையானதாகும்.

    இந்த நிலையில் சித்தன்ன வாசல் கிராமத்தினர் சார்பில் சுனையில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றி முற்றிலுமாக சுத்தம் செய்யப்பட்டது.

    நாவல்சுனையில் அமைந்துள்ள குகை போன்ற பகுதியையும், அதனுள் அமைந்துள்ள சிவலிங்கத்தையும் படத்தில் காணலாம்.

    பின்னர், நேற்று சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பூஜைகள் முடிந்து அடுத்த சிறிது நேரத்தில் மழை பெய்து சிவலிங்கம் மறைந்தது. கடந்த 26 ஆண்டுகளுக்குப் பிறகு சிவலிங்கத்தை காண ஏராளமானோர் குவிந்து தரிசித்தனர். அப்போது, சிவ பக்தர்கள் சிவபுராணம் பாடினர்.

    இது குறித்து யாதும் ஊரே, யாவரும் கேளிர் எனும் அமைப்பின் செயலாளர் எடிசன் கூறுகையில், எங்கள் அமைப்பின் சார்பில் மரபு நடைபயணம் மேற்கொண்டோம். அதில் கிடைத்த தகவலைத் தொடர்ந்து சுனையில் சிவலிங்கம் மூழ்கி இருப்பதை ஊர் மக்களிடம் தெரிவித்தோம். அதன் பிறகு, ஊரார் சார்பில் சுனையில் இருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது என்றார்.

    இது குறித்து சித்தன்னவா சலை சேர்ந்த பூஜகர் சின்னத் தம்பி கூறுகையில், கடந்த 1992-க்கு பிறகு தற்போது தான் சுனையில் இருந்து முழுவதுமாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது. கடந்த இரு நாட்களாக இந்தப் பணி நடைபெற்றது.

    நேற்று சுமார் 15 நிமிடம் மட்டும் பக்தர்கள் சிவலிங்கத்தை வழிபட்டனர். அதன் பிறகு மழை பெய்து படிப்படியாக சிவலிங்கம் மறைந்து விட்டது. தண்ணீர் மூழ்கியே இருப்பதுதான் இதன் சிறப்பாகும். இதன் பிறகு மழை பொழியும். விவசாயம் சிறக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
    ×