search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chitrai ther festival"

    • சுவாமி திருவீதியுலா, 30-ந்தேதி கற்பக திருக்கல்யாணம், யானை வாகன காட்சிகள் நடைபெறுகிறது.
    • ஸ்ரீசண்டிகேஸ்வரர் தேர், ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் தேர் ஆகியன பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது.

    அவினாசி:

    கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதும், சுந்தரமூர்த்தி நாயனாரால் தேவாரம் பாடப்பெற்ற ஸ்தலமும், தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேர் என்ற பெருமை கொண்டதுமான அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா நாளை 25-ந் தேதி, அதிகாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    அன்று இரவு திருமுருகன்பூண்டியிலிருந்து திருமுருகநாத சுவாமி வருகை, 26-ந் தேதி சூரிய சந்திர மண்டல காட்சிகள், 27ந் தேதி அதிகார நந்தி, கிளி, பூதம், அன்னம் ஆகிய வாகன காட்சி, 28ந் தேதி கைலாச வாகனம், புஷ்ப பல்லாக்கு ஆகியன நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    வருகிற 29-ந் தேதி 63 நாயன்மார்களுக்கு பஞ்சமூர்த்திகள் காட்சியளித்தல், சுவாமி திருவீதியுலா, 30-ந்தேதி கற்பக திருக்கல்யாணம், யானை வாகன காட்சிகள் நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான ரதோற்சவம் மே 1-ந் தேதி நடக்கிறது.

    அன்றைய தினம் அதிகாலையில் பூர நட்சத்திரத்தில் பஞ்ச மூர்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 2 மற்றும் 3-ந் தேதி காலை 10 மணிக்கு அவிநாசியப்பர் தேரும் (பெரிய தேர்), 4-ந் தேதி காலை 10 மணிக்கு கருணாம்பிகை அம்மன் (சிறிய தேர்), ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீசண்டிகேஸ்வரர் தேர், ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் தேர் ஆகியன பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது.

    வருகிற 4-ந்தேதி இரவு வண்டித்தாரை, 5-ந்தேதி பரிவேட்டை, 6ந் தேதி இரவு தெப்போற்சவம், 7-ந்தேதி நடராஜப் பெருமான் தரிசனம், அன்று மாலை கொடி இறக்கம் ஆகியன நடைபெறுகிறது. 8-ந் தேதி காலை மஞ்சள் நீர் உற்சவம், இரவு மயில்வாகன காட்சியுடன் சித்திரை தேர் திருவிழா நிறைவு பெறுகிறது.

    அவிநாசி லிங்கேஸ்வரர் சித்திரை தேரோட்டம் மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த 3 நாட்களிலும், போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

    இதுகுறித்து அவிநாசி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் கூறியதாவது:-

    தேரோட்டம் நடக்கும் மே 2, 3 மற்றும் 4 ஆகிய மூன்று நாட்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி கோவையிலிருந்து அவிநாசி வழியாக ஈரோடு, சேலம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும், நாதம்பாளையம் பிரிவு - கணினி ரவுண்டானாவில் இருந்து பைபாஸ் வழியாக சென்று அவிநாசி திருப்பூர் ரோட்டின் வழியாக அவிநாசி புதிய பஸ் நிலையம் வந்து செல்ல வேண்டும்.

    ஈரோடு, சேலத்தில் இருந்து அவிநாசி வழியாக கோவை, கொச்சி ஆகிய ஊர்களுக்கு செல்லும் வாகனங்கள் பழங்கரை ரவுண்டானாவில் இருந்து பைபாஸ் வழியாக செல்லும் வகையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சத்தியமங்கலம், புளியம்பட்டி,கோபி, நம்பியூரில் இருந்து அவிநாசி மற்றும் திருப்பூர் நோக்கி வரும் வாகனங்கள் மடத்துப்பாளையம் ரோட்டில் நுழைந்து, ராயம்பாளையம், அரசு கலை கல்லூரி அருகே வெளியேறி அவிநாசி புதிய பஸ் நிலையம் சென்று செல்ல வேண்டும்.இந்த போக்குவரத்து மாற்றம் தேரோட்டம் நடக்கும், நான்கு ரத வீதிகளில் வலம் வரும் நேரத்தில் மட்டும் அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×