search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Claimed accident"

    • சிறுவன் ஆகாஷ் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான்.
    • போலீசார் வழக்குப்பதிந்து விபத்துக்கு காரணமான இரண்டு லாரிகளின் டிரைவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டம் சூரிக் காடு பீமநதி பகுதியை சேர்ந்தவர் சுதாகரன்(வயது 52). இவரது மனைவி அஜிதா(35). இவர்களுக்கு சவுரவ் என்ற மகன் இருக்கிறார். சவுரவ் கோழிக்கோட்டில் சி.ஏ படிப்பதற்கு, அங்குள்ள கல்லூரி ஒன்றில் சேர்ந்துள்ளார்.

    அவரை விடுதியில் விட்டுவிட்டு வருவதற்காக சுதாகரன், அவரது மனைவி, மாமனார் கிருஷ்ணன் (65) மற்றும் மனைவியின் அண்ணன் மகன் ஆகாஷ்(9) ஆகியோர் காரில் தலச்சேரியில் இருந்து காசர்கோடு நோக்கி சென்றனர்.

    காரை காசர்கோடு மாவட்டம் காளிச்சநடுக்கம் சாஸ்தம்பாறை பகுதியைச் சேர்ந்த பத்மகுமார் 59 என்பவர் ஓட்டிச் சென்றார். சவுரவ்வை விடுதியில் விட்டுவிட்டு சுதாகரன் உள்ளிட்ட மற்றவர்கள் காரில் திரும்பி வந்தனர். அவர்களது கார் கண்ணூர் செருக்குன்னு அருகே உள்ள புன்னச்சேரி பகுதியில் நேற்று இரவு வந்து கொண்டிருந்தது.

    அப்போது அவர்களுக்கு பின்னால் வந்த ஒரு லாரி, காரின் மீது மோதியதாக தெரிகிறது. இதனால் அவர்களது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே கியாஸ் சிலிண்டர்கள் ஏற்றிக்கொண்டு வந்த லாரி மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் அவர்களது கார், லாரியின் முன்பதிக்குள் புகுந்தது.

    காருக்குள் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இந்த கோரவிபத்து குறித்து கண்ணபுரம் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    முதலில் அவர்கள் லாரிக்குள் சிக்கியிருந்த காரை வெளியே எடுத்தனர். பின்பு காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். அப்போது காரில் இருந்த சுதாகரன், அவரது மனைவி அஜிதா, மாமனார் கிருஷ்ணன், டிரைவர் பத்மகுமார் ஆகிய 4பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசங்கி பலியாகியிருப்பது தெரியவந்தது.


    மேலும் அந்த காரில் இருந்த சிறுவன் ஆகாஷ் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். அவனை போலீசார் மீட்டு பரியாரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக இறந்துவிட்டான். இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. காரில் இருந்த டிரைவர் உள்ளிட்ட 5பேருமே விபத்தில் பலியாகிவிட்டனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விபத்துக்கு காரணமான இரண்டு லாரிகளின் டிரைவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோர விபத்தில் சிறுவன் உள்பட 5பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

    ×