search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "collector innocent divya speech"

    இளைஞர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தாமாகவே முன் வரவேண்டும் என்று ஊட்டி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசினார்.

    ஊட்டி:

    ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் தேசிய வாக்காளர் தின விழா நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    அனைத்து வாக்காளர்களும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் 73 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. மீதமுள்ள 27 சதவீத வாக்குகள் பதிவாகவில்லை. எனவே இன்றைய இளைஞர்கள் 31.1.2019 அன்று வெளியிடப்படவுள்ள வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். நமது மாவட்டத்தில் 18 மற்றும் 19 வயதுடைய வாக்காளர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகும் தங்களது பெயர்களை சேர்த்து கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் தங்களது முகவரி பெயர் நீக்கல், சேர்த்தல், பிழைகள் போன்றவைகள் ஏதேனும் இருப்பின் அதனை சரி செய்து கொள்ள வேண்டும். 

    நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 683 வாக்குச்சாவடி மையங்களும், 354 வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளிடம் பள்ளி பருவத்திலேயே வாக்களிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஏனெனில் 18 வயதை அடைந்தவுடன் அவர்கள் தாமாகவே வாக்களிக்க முன் வரவேண்டும். நமது மாவட்டத்தில் சராசரியாக 5 லட்சத்து 62 ஆயிரத்து 883 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2 லட்சத்து 72 ஆயிரத்து 625 ஆண் வாக்காளர்களும், 2 லட்சத்து 90 ஆயிரத்து 280 பெண் வாக்காளர்களும், 8 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு வாக்காளர் தொடர்பான குறைகள், கருத்துக்கள், தகவல்கள் குறித்து இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி,கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் அவர் வழங்கினார்.

    முன்னதாக வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் உறுதி மொழி கலெக்டர் தலைமையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    அனைத்து வாக்காளர்களும் தேர்தல் சம்மந்தப்பட்ட தகவல்கள் பெற கருத்துக்கள் கூற புகார்கள் அளிக்க கலெக்டர் அலுவலகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள வாக்காளர் உதவி மையத்தினையும், நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களில் புதிதாக ஏற்படுத்தப்பட்டள்ள வாக்காளர் விழிப்புணர்வு மையத்தினை அதற்கான வழிகாட்டு புத்தகத்தினை மாவட்ட அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு பகுதி மேம்பாடு திட்ட இயக்குநர் அமர்குஷ்வாஹா, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், குன்னூர் சப்-கலெக்டர் ரஞ்சித்சிங், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கீதா பிரியா, ஊட்டி கோட்டாட்சியர் சுரேஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நசுருதீன், உட்பட அரசுத்துறை அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×