search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "collector raman speech"

    வேலூரை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்ற ஒத்துழைக்க வேண்டும் என்று விழிப்புணர்வு பயிலரங்கத்தில் கலெக்டர் ராமன் பேசினார்.

    வேலூர்:

    வேலூர் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஒருமுறை உபயோகித்து தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளை தவிர்த்து அதற்கான மாற்றுப் பொருள் குறித்த விழிப்புணர்வு பயிலரங்கம் வேலூரில் இன்று நடந்தது. கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.

    இன்றைய காலத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் மனிதனின் வாழ்க்கையில் ஒன்றினைந்து விட்டது. இதற்கான காரணம் பெரும்பாலும் பொருட்களை கட்டுவதற்கு துணிகளை காட்டிலும் பேப்பரை காட்டிலும் பிளாஸ்டிக் வைத்து கட்டுவதற்கு மிகவும் எளிமையாகவும், சுலபமாகவும் உள்ளது.

    மிக முக்கியமாக சரக்கு போக்குவரத்திலும், துணிக்கடைகள், நொறுக்கு தீனிகள் போன்ற எல்லா கடைகளிலும் பொருட்களை கட்டுவதற்கு பிளாஸ்டிக், தெர்மாகோல் ஆகியவற்றின் பயன்பாடு அதிகளவில் இருந்து வருகிறது.

    பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்துவதால் அதனுடைய தாக்கம் பூமியின் சூழ்நிலையை கெடுக்கிறது என்று அமெரிக்கா 1960-ம் ஆண்டு கண்டறிந்தது.

    மேலும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் கடலில் தான் கலக்கிறது என்பதையும் கண்டறிந்தன. மற்றொரு ஆச்சரியமான தகவல் என்ன வென்றால் 2002-ம் ஆண்டு பங்களாதேஷ் என்ற சிறிய நாடு தான் முதன் முதலில் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்துள்ளது.

    இதற்கான காரணம் பங்களாதேஷ் நாட்டில் புயல் மற்றும் மழை வெள்ள காலத்தில் தண்ணீர் அடைப்பு ஏற்பட்டு வெளியேறாமல் தங்கிவிட்டதை ஆராய்ந்து பிளாஸ்டிக் பொருட்களால் தான் அடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து முற்றிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடைசெய்தது. இதனை தொடர்ந்து உலக நாடுகள் மற்றும் இந்தியா பிளாஸ்டிக் பொருட்களை தடைசெய்து வருகிறது.

    தமிழகத்தில் கிராமங்களில் அதிகளவில் பிளாஸ்டிக் குப்பை உள்ளது. இதனை தடுக்க உள்ளாட்சி அமைப்புகள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

    வேலூரை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்றிட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் சுற்றுசூழல் பொறியாளர் ராஜகோபால், மாவட்ட பொறியாளர் ரதி, பன்னீர் செல்வம், நகராட்சிகளின் மண்டல கமி‌ஷனர் விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×