search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "confident vote"

    சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால் அ.தி.மு.க. அரசுக்கு ஆதரவாக செயல்படுவோம் என்று எம்.எல்.ஏ.க்கள் கலைச்செல்வன், பிரபு ஆகியோர் கூறியுள்ளனர். #kalaiselvanmla #admk #prabhumla

    கள்ளக்குறிச்சி:

    சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபாலை சந்தித்து அரசு கொறடா ராஜேந்திரன், அமைச்சர் சி.வி.சண்முகம், அ.தி.மு.க.அமைப்பு செயலாளரும், வக்கீலுமான மனோஜ்பாண்டியன் ஆகியோர் மனு ஒன்று கொடுத்தனர்.

    அதில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.பிரபு, விருத்தாசலம் எம்.எல்.ஏ.கலைச்செல்வன், அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி ஆகிய 3 பேரும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும், அவர்கள் கட்சியை பாதிக்கும் வகையில் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    எனவே 3 எம்.எல்.ஏ.க்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். அதனைத்தொடர்ந்து 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. பிரபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலை சந்தித்து எங்கள் மூன்று பேரையும் தகுதி நீக்கம் செய்ய மனு அளித்துள்ளார். நாங்கள் அரசு கொறடாவின் உத்தரவை எதிர்த்து எப்போதும் வாக்களிக்க வில்லை.


    சட்டமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தான் வாக்களித்துள்ளோம். அ.ம.மு.க என்பது அ.தி.மு.க.வின் அங்கம் தானே தவிர இது தனிக்கட்சி கிடையாது. எதற்காக அரசு கொறடா எங்களை தகுதி நீக்கம் செய்வதற்கு மனு அளித்துள்ளார் என்பது தெரியவில்லை.

    எனவே அதிகாரப்பூர்வமாக நோட்டீஸ் கிடைத்தவுடன் நாங்கள் சட்டபூர்வமாக அதனை சந்திப்போம். தொடர்ந்து நான் அதிமுக உறுப்பினராகவே உள்ளேன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வாக தான் செயல்படுகிறேன்.

    நாங்கள் வேறு எந்தக் கட்சியிலும் சேர்ந்து விடவில்லை. நடைபெறுகின்ற இடைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால் அரசு கொறடாவின் உத்தரவின் படியே செயல்படுவேன். அ.தி.மு.க.வை அழிப்பதற்காக நாங்கள் செயல்படவில்லை. முதல்-அமைச்சர் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க.அரசின் கீழ்தான் செயல்பட்டுகொண்டு இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ. கலைச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் உருவான எம்.எல்.ஏ.வாக நான் இருந்து வருகிறேன். ஜெயலலிதா முதல்-அமைச்சராக வர வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தொகுதி மக்கள் என்னை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுத்தார்கள். அன்று முதல் இன்று வரை அ.தி.மு.க.விற்கும், இந்த அரசுக்கும் ஆதரவாக செயல்பட்டு வருகிறேன்.

    கடந்த சட்டசபை தொடர் முழுவதும் கலந்து கொண்டுள்ளேன். எந்த காலகட்டத்திலும் தி.மு.க.வுடனோ மற்றவர்களுடனோ எந்தவித தொடர்பும் கிடையாது. இது அனைவருக்கும் தெரியும். ஜெயலலிதாவின் கனவு, 100 ஆண்டுகள் இந்த இயக்கம் தமிழகத்தை ஆளும் என்று சொன்னார்கள். அந்த நல்ல எண்ணத்தில் நானும் ரத்தினசபாபதி எம்.எல்.ஏ.வும் அனைவரையும் இணைத்து செயல்பட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இணைந்து பேசியிருக்கிறோம்.

    ஜெயலலிதாவை பாதுகாத்த சசிகலா தலைமையில் அ.தி.மு.க. அம்மா அணி என்று இயங்கிய போது கூட நாங்கள் இருந்தோம். ஆனால் இப்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்று ஆரம்பித்து பதிவு செய்துள்ளார்கள். அதிலே நான் உறுப்பினராக கூட இல்லை. அந்த நிகழ்ச்சிகளில் எதிலும் நான் கலந்து கொள்ளவில்லை, என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன்.

    குறிப்பாக அரசுக்கு ஆதரவாகவும், அ.தி.மு.க.விற்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறோம். இனியும் செயல்படுவோம் என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன். அரசு கொறடா சபாநாயகரை சந்தித்து ஏதோ ஒரு கடிதம் அனுப்புவதாக தொலைக்காட்சியில் பார்த்தேன். என்ன கடிதம் வருகிறது என்று தெரியவில்லை. வந்ததற்குப் பிறகு அதில் என்ன கேள்வி கேட்கப்பட்டுள்ளது, என தெரிந்துகொண்டு அதற்கான பதிலை சபாநாயகரை நேரில் சந்தித்து தெரிவிப்பேன்.

    அ.தி.மு.க.விற்கு எதிராக நான் செயல்படவில்லை. சசிகலா தலைமையில் அம்மா அணி இயங்கிய போது எடுத்த போட்டோக்கள் அவர்களிடம் இருக்கலாம். அந்த ஆதாரத்தை வைத்துக் கொண்டு அவர்கள் பேசலாம். இரட்டை இலை எங்கு இருக்கிறதோ அங்கு தான் இருப்பேன். ஜெயலலிதா ஆட்சி தொடர வேண்டும். அதற்கு தொடர்ந்து அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆதரவாக செயல்படுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #kalaiselvanmla #admk #prabhumla

    ×