search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "contemplating getting"

    முல்லைப்பெரியாறு அணை பகுதியில் இயற்கை பேரிடரை சமாளிக்க செயல்திட்டம் வகுக்க மத்திய துணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
    புதுடெல்லி:

    கேரளாவை சேர்ந்த ரஸ்ஸல் ராய் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘முல்லைப்பெரியாறு அணையின் ஆயுட்காலத்தை நிர்ணயிக்கும் வகையில் சர்வதேச ஆணையம் நியமிக்க வேண்டும், அந்த அணை காலாவதியாகும் பட்சத்தில் எந்த மாநிலம் புதிய அணையை கட்ட வேண்டும் என்பது குறித்தும், அணை உடைந்தால் அது தொடர்பான இழப்பீட்டை எந்த மாநில அரசு வழங்க வேண்டும் என்பது குறித்தும் முடிவு செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடந்த ஜனவரி மாதம் 11-ந் தேதி முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் பேரிடர் மேலாண்மையை உறுதி செய்யும் வகையிலும் இயற்கை பேரிடரின்போது உரிய நடவடிக்கை எடுக்கும் வகையிலும் ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.

    இதனையடுத்து மத்திய நீர்வளத்துறை அமைச்சக செயலாளர் தலைமையில் அதே அமைச்சகத்தின் துணைச்செயலாளரை ஒருங்கிணைப்பாளராக கொண்டு துணைக்குழு அமைக்கப்பட்டது.

    இதில் மத்திய பேரிடர் மேலாண்மைத்துறை, சுற்றுச்சூழல் துறை, மின்துறை, தொலைதொடர்பு துறை, வேளாண்மை துறை, உள்துறை அமைச்சகம் மற்றும் தமிழக, கேரள அரசு அதிகாரிகள் இடம்பெற்றனர்.

    இந்த துணைக்குழுவின் கூட்டம் நேற்று டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சக செயலாளர் யு.பி.சிங் தலைமையில் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், மதுரை முல்லைப்பெரியாறு அணை செயற்பொறியாளர் டி.சுப்பிரமணியம் ஆகியோரும், கேரள அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் முல்லைப்பெரியாறு அணையை இயற்கை பேரிடரின்போது பாதுகாக்கும் வகையில் செயல்திட்டம் வகுக்க துணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. 
    ×