search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cuddalore jail"

    ஐஎஸ் பயங்கரவாதி அடைக்கப்பட்டுள்ள கடலூர் சிறையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடலூர்:

    சென்னையில் உள்ள புழல் சிறையில் கைதிகளுக்கு பல்வேறு உயர்ரக வசதிகள் செய்து கொடுத்ததால் அவர்கள் மிக மகிழ்ச்சியாக இருந்து வந்த படம் சமூக வலைதளங்களில் பரவியது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள சிறைச் சாலைகளை போலீஸ் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீர் சோதனை செய்து வந்தனர்.

    இதற்கிடையே புழல் சிறையில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதி அன்சார் மீரான் கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு உள்ளார். மேலும் சிறை தகர்க்கப்பட்டு ஐஎஸ் தீவிரவாதி அன்சார் மீரானை மீட்டு கொண்டு செல்வோம் என மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததின் பேரில் கடலூர் மத்திய சிறைச்சாலையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீஸ் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் கடலூர் மத்திய சிறைச்சாலையில் சோதனை நடத்தியதில் செல்போன், சிம்கார்டு உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை சுமார் 6 மணியிலிருந்து கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார், சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் மோப்ப நாய் வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் கடலூர் மத்திய சிறைச்சாலையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த முறை சிறைத்துறை வளாகத்தில் சோதனை செய்யும்போது மோப்ப நாயும் வெடிகுண்டு நிபுணர்களும் புதிதாக சோதனையில் ஈடுபடுத்தப்பட்டது.

    ஐ.எஸ். தீவிரவாதி அன்சார் மீரானை சிறையை தகர்த்து மீட்டு செல்வோம் என மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததின் பேரில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சிறை வளாகத்தில் சோதனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    காட்டுமன்னார்கோவில் அருகே விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள உத்தமசோழகன் கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 75), விவசாயி. இவர் தனது நிலத்தை உழுவதற்காக வேளாண் எந்திரத்தை மானியவிலையில் வாங்க முடிவு செய்தார்.

    இதைத்தொடர்ந்து அவர் காட்டுமன்னார்கோவில் உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவரது விண்ணப்பம் மீது அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து ராஜதுரை காட்டுமன்னார்கோவிலில் உள்ள வேளாண்துறை அலுவலகத்துக்கு சென்று அங்கிருந்த உதவி அலுவலர் பாரதிதாசனை (40) சந்தித்தார். அப்போது அவர் ரூ.39 ஆயிரம் கொடுத்தால்தான் உடனே வேளாண் எந்திரம் வழங்கப்படும் என்றார்.

    இதையடுத்து ராஜதுரை கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.24 ஆயிரத்தை பாரதிதாசனிடம் கொடுத்தார். அப்போது பணத்தை பெற்றுக்கொண்ட பாரதிதாசன் மீதி ரூ.15 ஆயிரத்தை கொடுங்கள் என்று கேட்டார். அதற்கு பிறகு தருகிறேன் என்று கூறிவிட்டு ராஜதுரை வந்துவிட்டார்.

    இதுகுறித்து கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் அவர் புகார் செய்தார். போலீசாரின் அறிவுரையின்படி ரசாயன பவுடர் தடவிய ரூ.5 ஆயிரத்தை ராஜதுரை பாரதிதாசனிடம் நேற்று வழங்கினார்.

    அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்சஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பாரதிதாசனை மடக்கிபிடித்து கைது செய்தனர். பின்பு அவரை கடலூர் லஞ்சஒழிப்புதுறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்த லஞ்சப்பணம் ரூ.5 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்பு அவரை கடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து பாரதிதாசன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    கடந்த மாதம் லால்பேட்டையில் துணை மின்நிலைய பணியாளர் ஒருவர் லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்டார். தற்போது விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கிய வேளாண் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். காட்டுமன்னார்கோவில் பகுதியில் அதிகாரிகள் தொடர்ந்து லஞ்சம் வாங்குவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    விருத்தாசலத்தில் ரூ.3 லட்சம் ஹவாலா பணத்தை கடத்தி வந்த போது போலீசாரிடம் சிக்கிய சென்னை வாலிபர்கள், கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டை சப்- இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் விஜயமாநகரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது விருத்தாசலத்தில் இருந்து மங்கலம் பேட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்களை போலீசார் நிறுத்தி வாகனத்துக்குரிய ஆவணங்களை கேட்டனர். ஆனால் அவர்கள் இல்லை என கூறி முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.

    இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் கொண்டு வந்த பையை சோதனை செய்த போது அதில் கட்டுக்கட்டாக ரூ.3 லட்சம் பணம் இருந்தது. அந்த பணம் குறித்து விசாரித்தபோது அந்த வாலிபர்கள் 2 பேரும் சப்-இன்ஸ்பெக்டரை தகாதவார்த்தைகளால் திட்டினர்.

    உடனே போலீசார் அவர்கள் 2 பேரையும் மங்கலம் பேட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் தலைமையிலான போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் அந்த வாலிபர்கள் சென்னை துறைமுகம் ஆதன்தெருவைச் சேர்ந்த லுக்மோன்அகமது (வயது 24), என்பதும், மற்றொருவர் சென்னை மன்னடியைச் சேர்ந்த ஷேக் அப்துல்காதர் (28) என்பதும் தெரியவந்தது.

    தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அந்த 3 லட்சம் பணத்துக்கு அவர்களிடம் எந்தவித கணக்கும் இல்லை, உரிய ஆவணங்களும் இல்லை என்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். கைதான 2 பேரும் ஹவாலா பணம் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களா? 3 லட்சம் பணத்தை யாருக்கு கொடுக்க கொண்டுச்சென்றனர்? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

    பின்னர் கைதான 2 பேரையும் விருத்தாசலம் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதன் பேரில் லுக்மோன் அகமது, ஷேக் அப்துல் காதர் ஆகியோர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ×