search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "damage to yield"

    • தரம் குறைந்த மஞ்சள் உற்பத்தியாவதால் வியாபாரிகளுக்கும் நிறுவனங்களுக்கும் தரமான மஞ்சள் அங்கு கிடைக்கவில்லை.
    • மஞ்சள் ஓராண்டு பயிர் என்பதால் அடுத்த ஆண்டு உற்பத்தியை கணக்கிட்டு மஞ்சள் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி சொசைட்டி என 4 இடங்களில், திங்கள் முதல் வெள்ளி வரை மஞ்சள் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. சராசரியாக நாள்தோறும் 5 ஆயிரம் மூட்டை வரை மஞ்சள் இங்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    கடந்த மாதங்களில் ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.6 ஆயிரத்து 500 முதல் ரூ.7 ஆயித்து 500 ரூபாய்க்கு விற்பனையானது. வடமாநிலங்களில் அதிக மழையால் மஞ்சள் விளைச்சல் பாதிக்கப்பட்டு தரம் குறைந்த மஞ்சள் உற்பத்தியாவதால் வியாபாரிகளுக்கும் நிறுவனங்களுக்கும் தரமான மஞ்சள் அங்கு கிடைக்கவில்லை. குறிப்பாக மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் தரம் குறைந்த மஞ்சளே அதிகம் கிடைப்பதால் வியாபாரிகள் ஈரோடு பகுதி மஞ்சளை அதிகம் வாங்க தொடங்கியுள்ளனர்.

    தமிழகத்தில், ஈரோடு, சேலம் பகுதி மஞ்சள் தரமாக உள்ளதால் படிப்படியாக விலை அதிகரித்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் 8,500 ரூபாயாக இருந்த ஒரு குவிண்டால் மஞ்சள் கடந்த வாரம் 10 ஆயிரம் ரூபாயை எட்டியது. கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு மஞ்சள் குவிண்டால் ரூ. 10 ஆயிரத்தை எட்டியது. கடந்த வெள்ளியன்று 10,500 ரூபாயாக உயர்ந்தது. இந்நிலையில் இன்று மேலும் 2 ஆயிரம் ரூபாய் உயர்ந்து, முதல் தர மஞ்சள் அதிகபட்சமாக 12,600 ரூபாய்க்கு விற்பனையானது.

    கடந்த 6 மாதங்களில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மஞ்சளின் அளவு 25 சதவீதம் உயர்ந்துள்ளதாலும், வட மாநிலங்களில் பெய்த மழையினாலும் ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை உயர்ந்துள்ளதாக கூறும் வணிகர்கள், இன்னும் விலை உயரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் பலரும் மஞ்சளை இருப்பு வைத்துள்ளதாக தெரிவித்தனர்.

    மஞ்சள் ஓராண்டு பயிர் என்பதால் அடுத்த ஆண்டு உற்பத்தியை கணக்கிட்டு மஞ்சள் விலை நிர்ணயிக்கப்படுகிறது. மராட்டியத்தில் மஞ்சள் மொத்த சாகுபடி பரப்பு அடுத்த மாதம் தெரியவரும் என்றும், அப்போது விலையில் மாற்றம் ஏற்படலாம், அதுவரை இதே விலை நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    மஞ்சள் விலை 3 மாதங்களில் குவிண்டாலுக்கு சுமார் 5 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்திருப்பது விவசாயிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மஞ்சளுக்கு திடீர் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் வெளி மாநில வியாபாரிகள் ஈரோடு நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

    ×