என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Deepavali2022"

    • உடலுக்கு மட்டும் தண்ணீர் ஊற்றி குளித்துவிட்டு குளியல் என்று கூறக்கூடாது.
    • தலைக்கு குளிர்ந்த தண்ணீர் அல்லது இளம்சூடான தண்ணீரை பயன்படுத்தலாம்.

    தீபாவளி கொண்டாடப்படும் இந்த மகிழ்ச்சியான வேளையில் ஆரோக்கியமாக வாழ தினமும் காலை பொழுதில் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் குறித்து பார்த்து வருகிறோம். இத்தொடரில் குளியல் பற்றிய கட்டுரை தீபாவளி திருநாள் வரும் வேளையில் அமைந்து இருப்பது மிக்க மகிழ்ச்சி.

    தீபாவளிக்கும் குளியலுக்கும் என்ன சம்பந்தம் என்றால், தீபாவளி பண்டிகை அன்று அனைத்து நீர்நிலைகளிலும் கங்கா வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். எனவே தீபாவளி திருநாளில் எண்ணெய் தேய்த்து குளிப்பதை கங்கா ஸ்நானம் என்பார்கள்.

    தமிழ் மொழி நல்லொழுக்க நெறிமுறைகளை ஆரோக்கிய வாழ்விற்காக பலவற்றை நூல்கள் மூலமாகவும் பழமொழிகள் மூலமாகும் வழங்கியுள்ளது. அவற்றில் ஒன்று "கந்தையானாலும் கசக்கி கட்டு, கூழானாலும் குளித்துக் குடி என்பது ஆகும். அதாவது அழுக்கான கந்தை ஆடையாகயிருந்தாலும் அதனை துவைத்து தான் உடுத்த வேண்டும். அதேப்போல் கூழ் என்ற எளிமையான உணவாக இருந்தாலும் அதனை குளித்துப் பின்பு தான் உண்ணவேண்டும் என்பதே அதன் பொருள்.

    ஒப்பற்ற மருத்துவ முறையான ஆயுர்வேதம் தினமும் குளிக்க வேண்டும் என்றும் மேலும் அதனை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்றும் மிக தெளிவாக விளக்கி கூறுகிறது. உடலை குளிர்விப்பதே குளியல் என்று மருவிற்று. குளியல் என்பது தலைக்கு சேர்த்து தான். உடலுக்கு மட்டும் தண்ணீர் ஊற்றி குளித்துவிட்டு குளியல் என்று கூறக்கூடாது. குளியலால் உடல் தூய்மை மட்டுமல்ல, உள்ளமும் தூய்மை அடைகிறது. ஆம் குளியலால் அகமும் புறமும் பசுமை அடைகிறது.

    குளிப்பதால் தூக்கம் போகும், சிரமம் குறையும், உடல் எரிச்சல் போகும், வியர்வை, அரிப்பு, இவற்றை போக்க வல்லது. மனதில் ஒருவித உற்சாகம், புத்துணர்ச்சி பிறக்கும். மேலும் உடம்பில் உள்ள அழுக்குகளை போக்குகிறது. ஐம்புலன்களுக்கும் புத்துணர்ச்சியை கொடுக்குகிறது. சோம்பலை போக்குகிறது. ஆண்மையை அதிகரிக்கிறது. பசி தீயை அதிகரித்து நன்றாக ஜீரணம் செய்ய வழிவகைச்செய்கிறது. ரகத்தை சுத்தம் செய்ய உதவுகிறது.

    இவ்வளவு நன்மைகளை கொண்ட குளியலை எவ்வாறு மேற்கொள்ளுவது. இது என்ன கேள்வி, கோடை காலம் என்றால் குளிர்ந்த தண்ணீர், குளிர் காலம் என்றால் வெந்நீர் கொண்டு குளிக்க வேண்டியது தானே என்று என்ன தோன்றுகிறதா... ஆனால் இது முற்றிலும் தவறு. ஆம் இதற்கு ஆயுர்வேதம் ஒரு வழிகாட்டுதலை வழங்குகிறது.

    தற்போது மக்கள் என்ன செய்கிறார்கள் என்றால், தலைவலியோ அல்லது மூக்குஒழுகுதல் போன்ற பிரச்சனை இருந்தால் தலைக்கு சுட சுட தண்ணீர் ஊற்றுதல் நன்மை தரும் என கருதுகிறார்கள். ஆனால் இதனை தப்பான நடைமுறை என்று ஆயுர்வேதம் கண்டிக்கிறது. ஆம் தலைக்கு சுடுதண்ணீர் ஊற்றினால் தலைமுடிக்கும் கண்ணுக்கும் ஆபத்து. எனவே சுடுத்தண்ணீர் தலைக்கு கீழே மட்டும் பயன்படுத்த வேண்டும். தலைக்கு குளிர்ந்த தண்ணீர் அல்லது இளம்சூடான தண்ணீரை பயன்படுத்தலாம்.

     

    Dr. ரா. பாலமுருகன், அரசு ஆயுர்வேத மருத்துவர், 9025744149

    முக வாதம், கண் வலி, கண்ணில் நீர்வடிதல், காது வலி, காதில் நீர் வடிதல், சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள், காய்ச்சல், வயிற்றுப்போக்கு, அஜீரணம் உள்ளவர்கள் அந்த தொந்தரவுகள் சரியாகும் வரை தலைக்கு குளிப்பதை தவிர்க்கலாம். சரி எவ்வாறு குளிக்க வேண்டும் என்பதை காண்போம்.

    இதுநாள் வரையிலும் குளியலறைக்கு சென்று இருக்கிற தண்ணீரில் குளித்து விட்டு அவசரமாக தலையை துவட்டி செல்லுவது வழக்கம். இதற்கும் வழிகாட்டுதலை வழங்குகிறது ஆயுர்வேதம். அதாவது முதலில் தலையை நனைக்காமல் உடலில் தண்ணீர் ஊற்றக்கூடாது. இது எதனால் கூறப்பட்டு இருக்கலாம் என்றால் முதலில் தண்ணீரை உடலுக்கு ஊற்றும்போது ஏற்கனவே சூடாகயிருக்கும் உடலில் தண்ணீர் பட்டவுடன் சூடு எழும்பி அது தலையை தாக்க வாய்ப்புள்ளது. எனவே முதலில் குளியலுக்கு சிறிதளவு தண்ணீரைக்கொண்டு தலையை நனைத்து குளியலுக்கு உடலை தயார் செய்ய வேண்டும்.

    அடுத்தபடியாக மிகுந்த குளிர்ச்சியான நீரில் குளிக்கக்கூடாது. ஆடையில்லாமல் குளிக்கக்கூடாது. ஒற்றை ஆடையுடன் குளிக்க வேண்டும். குளித்தபின்பு வேகமாக உடலையும் தலைமுடியையும் துவட்டிக்கொள்ளக்கூடாது. அவசரமாக துவட்டினால் தோலின் வனப்பும், முடியின் உறுதி தன்மை கேள்விக் குறியாகிவிடும்.

    ஒரு நாளைக்கு ஆண்கள் இரண்டு வேளையும், பெண்கள் ஒரு வேளையும் குளிக்க வேண்டும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. ஏன் இந்த பாலின வேறுபாடு என்று பார்ப்போமேயானால் அக்காலத்தில் ஆண்கள் பணி நிமித்தமாக வெளியே சென்று வீட்டுக்கு திரும்பினார்கள். அதனால் இரு வேளை குளிக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அக்கால பெண்கள் அவ்வாறு இல்லை. அதன் காரணமாக ஒரு வேளை குளிக்க சொல்லியிருக்கலாம். மேலும் ஆண்களை விட பெண்களுக்கு முடி அதிகம் என்பதினால், முடியை உலர்த்துவது கடினம் என்ற காரணத்தினால் கூட இருக்கலாம். ஆனால் இக்காலத்தில் அனைவரும் சமம் என்றாகிவிட்டது. எனவே அனைவரும் இருவேளை குளிக்க வேண்டும். இதில் விதியை சற்று தளர்த்தி தேவைப்படுவோர் மட்டும் ஒரு தடவை உடலுக்கும் தலைக்கும், மற்றொரு தடவை உடலுக்கு மட்டும் குளிக்கலாம்.

    குளியலின் வகைகள் - ஒன்னு சுடுத் தண்ணீர் குளியல் மற்றொன்று குளிர்ச்சியான தண்ணீர் குளியல் என்று தான் அனைவரும் அறிந்தது. ஆனால் சாஸ்திரங்கள் பல குளியல்களை கூறுகின்றன. அவற்றில் ஒன்று தான் ஐவகை குளியல். 1. நிலம் சார்ந்த குளியல் உதாரணத்திற்கு மண் குளியல். 2. நீர் சாந்த குளியல் - இது தான் நடைமுறையில் உள்ள குளியல். 3. நெருப்பு சார்ந்த குளியல் - நீராவி குளியல், சூர்ய ஒளியில் இருந்துக்கொண்டு வியர்வை மூலமாக குளித்தல். 4. வாயு சார்ந்த குளியல் - வெளிக்காற்று உடலில் படும்படியிருத்தல் அல்லது மூலிகைக்கொண்டு புகை எழுப்பி அப்புகை உடலில் படும்படி செய்தல். 5. ஆகாயம் சார்ந்த குளியல் - வெட்ட வெளியில் உலாவுதல். இதற்கும் மேல் மற்றொரு குளியல் இருக்கிறது. அது தான் மானசீக குளியல். இவை தான் மனதளவில் உள்ள அழுக்குகளை போக்க வல்லது.

    இவை இருக்கட்டும். நாம் தற்போது நடைமுறையில் நோயற்றவர்களுக்கு உள்ள குளியல், நோயுள்ளவர்களுக்கு உள்ள குளியல் என இரண்டாக பிரித்து பார்ப்போம். ஆம் இன்றைய காலகட்டத்தில் நீண்ட நாள் நோயினால் அவதியுறுபவர்கள் ஏராளம். அவர்களுக்கு மூலிகை குளியல் எவ்வாறு நன்மையளிக்கும் என்பதை வரும் தொடரில் காண்போம்.

    • தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரத்தில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • சரவெடிகள் வெடிப்பதை தவிர்க்கவேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை வரும் 24-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

    தமிழகத்தில் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும், இரவில் 7 மணி தொடங்கி இரவு 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

    உச்சநீதிமன்றம் தடை செய்துள்ள பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்றும், ஒலி மாசு ஏற்படுத்தும் பட்டாசு வெடிகளை வெடிக்க கூடாது என்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அறிவுறுத்தல் செய்துள்ளது.

    இந்நிலையில், தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரத்தில் மாற்றமில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் வெடிக்கலாம் என்றும், சரவெடிகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

    ×