search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Delhi Nehru University"

    • வடஇந்தியாவில் தொடங்கப்பெறும் முதல் தமிழ்த் துறையாக இது இருக்கும்.
    • ஆண்டுக்கு இருமுறை ஜே என் யூ தமிழியல் எனும் ஆய்வு இதழ் வெளியிடப்படும்.

    டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் எனும் தனித்துறை தொடங்கிட தமிழ்நாடு அரசு ரூபாய் 5 கோடி நிதி வழங்கி ஆணையிட்டுள்ளது.

    இது தொடர்பாக தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    புதுடெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் இந்திய மொழிகள் மையத்தில் தமிழ்ப் பிரிவு, இந்திப் பிரிவு, உருதுப் பிரிவு, இந்தி மொழியாக்கப் பிரிவு, கன்னட மொழி இருக்கை, ஒடிய மொழி இருக்கை, வங்க மொழி இருக்கை, ஆகிய அமைப்புகளைக் கொண்டு இயங்குகின்றது.

    பல்கலைக்கழக நல்கைக்குழு வாயிலாக பேராசிரியர் ஒருவரும் தமிழ்நாடு அரசின் நிதி நல்கையின் வாயிலாக உதவிப் பேராசிரியர் ஒருவரும் நியமிக்கப் பெற்று 2007 முதல் பணியாற்றி வருகின்றனர்.

    தமிழ் இலக்கியவியல் ஆய்வு, தமிழ் மற்றும் திராவிட மொழியியல் ஆய்வு, தமிழ் மற்றும் தென்னக வரலாற்றியல், சமூகவியல் ஆய்வு என மூவகையாக விரிவுப்படுத்தி நேரு பல்கலைக்கழகத்திலுள்ள தமிழ்ப் பிரிவு இனி, தமிழ் இலக்கியவியல் எனும் தனித்துறையாக முகிழ்த்து எழச் செய்துள்ளது

    தமிழ்நாடு அரசு. இதற்கென ரூபாய் 5 கோடி நிதி வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது. உலகெங்கும் தமிழின் ஆய்வுத் தொன்மையை நிலைநாட்டும் ஆராய்ச்சி முயற்சிகளை ஊக்குவித்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ் வளர்ச்சிக்கான தனிப்பெரும் விழைவின் அடையாளமாக, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு ரூபாய் 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்தமைக்கு அப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சாந்தி ஸ்ரீ பண்டிட், முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    தமிழ் மொழி வளர்ச்சிக்காகத் தாங்கள் செய்கின்ற மாபெரும் தொண்டாகக் கருதுகிறேன் என்றும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்ற முறையிலும் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் என்ற முறையிலும் முதலமைச்சரின் இந்த முன்னெடுப்பு மிகுந்த பெருமை அளிக்கிறது என்றும் பல்கலைக்கழகத்தின் சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றியோடு தமிழ் வாழ்க எனவும் தனது கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

    தனிப்பெரும் துறையாக உருவெடுக்கும் தமிழ் இலக்கியவியல் துறை வாயிலாக ஒப்பாய்வு, முதுகலை தமிழிலக்கியப் படிப்பு, வல்லுநர்வழி மொழியாக்கம், விருந்துநிலைப் பேராசிரியர்வழி ஆய்வுப் பெருந்திட்டம், முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி, தமிழாசிரியர்களுக்கு ஆய்வுப் பயிலரங்கம், அயலகப் பல்கலைக்கழகங்களுடன் ஒருங்கிணைந்து செயற்படுதல், தரமான நூல்களை வெளியிடுதல், ஜே என் யூ தமிழியல் எனும் பெயரில் 100 பக்க அளவில் ஆண்டுக்கு இருமுறை ஆய்வு இதழ் வெளியிடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

    வடஇந்தியாவில் தொடங்கப்பெறும் முதல் தமிழ்த் துறையாகவும் தமிழாய்வுகளை விரைந்தும் விரிந்தும் செய்யும் பெருமிதமும் தனித்தியங்கும் தன்மையையும் கொண்டு உலக அளவில் கவனம் பெறும் துறையாக தமிழ் இலக்கியவியல் துறை மாறும் எனவும் தமிழ்ச் சான்றோர்களும், தமிழார்வலர்களும் கருதுகின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×