search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dengue treatment"

    • பள்ளி, கல்லூரிகளிலும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்படும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருக்கின்றன.
    • காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஒரு வாரம் வரை பாதிப்பு உள்ளது.

    பொன்னேரி:

    பொன்னேரியில் அரசு பொது மருத்துவமனை உள்ளது. இங்கு பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், பழவேற்காடு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து தினமும் ஏராளமானோர் வெளிநோயாளிகளாகவும், உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பொன்னேரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மர்ம காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினந்தோறும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதன் காரணமாக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் வரும் வெளி நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. பெரும்பாலானோருக்கு சளி, இருமலுடன் காய்ச்சல், உடல்வலி இருக்கிறது.

    காய்ச்சல் பாதிப்புடன் வரும் நோயாளிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்டோரிடம் தினமும் ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    இதேபோல் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளன. பள்ளி, கல்லூரிகளிலும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்படும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருக்கின்றன.

    குடும்பத்தில் ஒருவருக்கு காய்ச்சல் இருந்தால் வீட்டில் உள்ள அனைவருக்கும் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். பெரும்பாலானோர் மருந்து கடைகளில் மாத்திரைகள் வாங்கி சாப்பிடுவதால் பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளில் உள்ள மருந்து கடைகளிலும் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்படுகிறது.

    ஆண்டார்குப்பம், தடபெரும்பாக்கம், வெள்ளி வாயில் சாவடி, வாயலூர், பொன்னேரி, மீஞ்சூர் பழவேற்காடு ,தேவம்பட்டு, உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பும் காணப்பட்டு வருகின்றன.

    காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் மொத்தம் உள்ள 150 படுக்கை வசதியில் 20 படுக்கைகளுடன் டெங்குகாய்ச்சல் வார்டு திறக்கப்பட்டு உள்ளது.

    இதுவரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ள சித்த மருத்துவ வார்டில் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் நோயாளிகளுக்கு வைக்கப்பட்டுள்ளது.

    காய்ச்சல் பரவலை தடுக்க பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

    இதுகுறித்து பொன்னேரி அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவர் கூறியதாவது:-

    டெங்கு காய்ச்சல் பாதிப்பு தற்போது குறைவாக இருந்தாலும் பருவநிலை மாற்றம் மற்றும் கொசுக்களின் காரணமாக காய்ச்சல் பாதிப்பு அதிகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட 2 மடங்கு அதிகரித்து உள்ளது.

    இதைத்தொடர்ந்து டெங்கு காய்ச்சல் சிறப்பு வார்டு படுக்கை வசதியுடன் திறக்கப்பட்டு உள்ளது. யாருக்கேனும் காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக அவர்கள் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டரின் ஆலோசனை படி சிகிச்சை எடுத்து மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும். டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல் கடைகளில் மருந்து, மாத்திரைகள் வாங்கி சாப்பிடக் கூடாது.

    இப்போது காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஒரு வாரம் வரை பாதிப்பு உள்ளது. ஓரிரு நாட்களில் காய்ச்சல் குணமாவிட்டாலும், பசி இன்மை, குமட்டல், வாந்தி, உடல்சோர்வு ஏற்படுதல் என இவற்றில் ஏதாவது ஒரு அறிகுறி இருந்தால், உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்களின் பரிந்துரையின்படி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காய்ச்சல் பாதித்த கிராமங்களில் மீஞ்சூர் வட்டார கொசு ஒழிப்பு பணியாளர்கள் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ×