search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Diabetes treatment"

    திருப்பத்தூரில் 2 மாத குழந்தைக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தெரியவந்ததையடுத்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோடு பகுதியை சேர்ந்தவர் சரவணன் கூலித்தொழிலாளி இவரது மனைவி லாவண்யா.

    இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. கடந்த 2 மாதத்திற்கு முன்பு லாவண்யாவுக்கு 2-வது பெண் குழந்தை பிறந்தது.

    இந்நிலையில், கடந்த சில நாட்களாக 2 மாத குழந்தை மயங்கிய நிலையிலும், அடிக்கடி மூச்சு திணறல் ஏற்பட்டும் அவதிப்பட்டு வந்தது. இதனால், பெற்றோர் குழந்தையை திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை டாக்டர் செந்தில்குமார் பரிசோதித்தார்.

    அப்போது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, குழந்தையை உடனடியாக வார்டில் அனுமதித்து சுவாச கருவிகள் பொருத்தினர். பின்னர், குழந்தைக்கு இன்சுலின் செலுத்தி படிப்படியாக சர்க்கரையின் அளவை குறைத்தனர்.

    பிறந்த குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை, நிமோனியா, வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்கள் தாக்கும். ஆனால், இந்த குழந்தைக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 787 ஆக இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். பின்னர் குழந்தைக்கு இன்சுலின் செலுத்தி படிப்படியாக சர்க்கரையின் அளவு 300 ஆக குறைக்கப்பட்டது.

    தற்போது குழந்தையின் சர்க்கரை அளவை குறைத்து அதன் உயிரை காப்பாற்றியுள்ளோம்.

    கருவுற்றிருக்கும் போது உடல் உறுப்புகளில் பாதிப்பு இருக்கிறதா? என்றுதான் நாங்கள் கண்டறிய முடியும். ஆனால், இந்த குழந்தையின் கணையம் செயல்பாட்டினை கண்டறியவில்லை. இப்போது அதற்கும் வசதி வாய்ப்புகள் வந்திருக்கிறது.

    கருவில் இருக்கும் போதே குழந்தையின் உடல் நலனை தெரிந்து கொள்ள முடியும். இக்குழந்தையின் பிரச்சனைக்கு ஜீன் பிரச்சனையாக இருக்கலாம். வம்சா வழியாக இதுபோன்ற நோய்கள் வர வாய்ப்புகள் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குழந்தையின் உயிரை காப்பாற்றிய டாக்டருக்கு பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். தற்போது குழந்தைக்கு வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
    ×