search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Donald Trump threat"

    அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் செய்வேன் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். #DonaldTrump

    வாஷிங்டன்:

    அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவும் வெளிநாட்டினரை தடுக்க மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார், அதற்காக ரூ.39,693 கோடி (5.7 பில்லியன் டாலர்) நிதி ஒதுக்கும்படி அமெரிக்க பாராளுமன்றத்திடம் ஒப்புதல் கேட்டார்.

    அதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து ஒப்புதல் வழங்கவில்லை. அதனால் ஆண்டு பட்ஜெட் பாராளுமன்றத்தில் நிறைவேறவில்லை. இதனால் கடந்த 18 நாட்களாக பாதி அரசு அலுவலகங்கள் செயல்படாமல் முடங்கி கிடக்கின்றன.

    இந்த நிலையில் அதிபர் டிரம்ப் நேற்று டெலிவி‌ஷனில் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:-

    அமெரிக்காவுக்குள் வெளி நாட்டினர். சட்ட விரோதமாக ஊடுருவுகின்றனர். அதனால் மெக்சிகோ எல்லை வழியாக போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுகின்றன. இது அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

    எனவேதான் அங்கு தடுப்பு சுவர் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதை ஜனநாயக கட்சியினர் எதிர்க்கின்றனர். பாராளுமன்றத்தில் ஒப்புதல் தர மறுக்கின்றனர். அதனால் எத்தனை அமெரிக்கர்கள் ரத்தம் சிந்த வேண்டும் என எதிர்பார்க்கின்றனர் என்றார்.

    மேலும் அவர் கூறும் போது சட்டவிரோதமாக ஊடுருவும் வெளிநாட்டினரால் நடந்த கொலைகளை பட்டியலிட்டார். இந்த நிலை தொடர்ந்தால் எனது அதிபர் அதிகாரத்தை பயன்படுத்தி நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்வேன்.

    அதன் மூலம் மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்ட தேவைப்படும் நிதியை பாராளுமன்ற ஒப்புதல் இன்றி என்னால் பெற முடியும் என்றார்.

    நாளை (10-ந்தேதி) அவர் தென் மேற்கு எல்லை பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதற்கு முன்னதாக தேசிய அளவில் அவசர நிலை பிரகடனம் செய்வாரா? என்ற தகவல் முழுமையாக வெளியாக வில்லை.

    அதேநேரத்தில் எல்லையில் சுவர் கட்ட டிரம்ப் உத்தரவிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஜனநாயக கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தெரிவித்தனர்.

    2016-ம் ஆண்டு அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது எல்லையில் சுவர் கட்ட மெக்சிகோவிடம் இருந்து நிதி பெறப்படும் என டிரம்ப் உறுதி அளித்தார். ஆனால் மெக்சிகோ அரசு அதற்கு மறுத்துவிட்டது. #DonaldTrump

    ×